Friday, March 19, 2021

நான் ஜெபிக்கும்போது நினைவில் கொள்ளவேண்டிய இரண்டு காரியங்கள்

 வாசிக்க: உபாகமம் 3, 4; சங்கீதம் 78,  மாற்கு 11:20-33

வேதவசனம்: மாற்கு 11: 24. ஆதலால், நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுகொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன்.
25. நீங்கள் நின்று ஜெபம்பண்ணும்போது, ஒருவன்பேரில் உங்களுக்கு யாதொரு குறை உண்டாயிருக்குமானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி, அந்தக் குறையை அவனுக்கு மன்னியுங்கள்.

கவனித்தல்:  மேலே காணும் வேதபகுதியானது ஜெபம் பற்றிய இரண்டு முக்கியமான பாடங்களை நமக்குக் கற்றுக் கொடுக்கிறது. முதலாவதாக, நாம் ஜெபங்களில் எதையாகிலும் தேவனிடம் கேட்கும்போது, நாம் அதைப் பெற்றுக் கொண்டோம் என்று விசுவாசிக்க வேண்டும். பின்னர் அதை உடையவர்களாக நாம் இருப்போம். அனேக நவீன கால “விசுவாச வார்த்தை” மற்றும் "மிஞ்சின கிருபை” போதகர்கள் தங்கள் விளக்கங்களை இந்த வசனத்திற்குக் கொடுத்து அனேகரை தவறாக வழிநடத்துகிறார்கள். நம் ஜெபங்களுக்காகக் காத்திருந்து, நாம் கேட்டவுடன் அதை செயல்படுத்தும் ஒருவரல்ல நம் தேவன். நம் சுயநல இருதயத்தில் இருந்து வரும் கட்டளை ஜெபங்களை உடனே செயல்படுத்த, அவர் ஒரு தானியங்கி இயந்திரமோ அல்லது இயந்திர மனிதனோ (ரோபோ) அல்ல.  மாற்கு 10 ஆம் அதிகாரத்தில், ”எதைக்கேட்டாலும்” என்ற கோரிக்கையுடன் வந்த சீடர்களுக்கு இயேசு என்ன செய்தார் என்பதை நாம் ஏற்கனவே பார்த்தோம்.இங்கே மாற்கு 11:24 ல், ”எவைகள்” என்ற வார்த்தை நாம் விரும்புகிற எதைவேண்டுமானாலும் தேவனிடம் கேட்கலாம் என்பதைக் குறிக்கவில்லை. அப்படி பொருள் தருமெனில், அது உலகப் பொருள்களுக்கு முதலிடம் கொடுக்கும் கருத்தியல் சிந்தனைக்கு (materialism)  அழைத்துச் செல்வதாக இருக்கும். நாம் பேராசைப்படுபவைகளுக்கு அல்ல, நமக்குத் தேவையானவைகளைக் குறித்து ஜெபிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறோம். ஒருவரின் பேராசையை எதுவும் திருப்தி செய்யாது. நாம் தேவனுடைய வார்த்தை மற்றும் சித்ததிற்கேற்ப ஜெபிக்கும்போது, நாம் பெற்றுக்கொண்டோம் என்று விசுவாசிக்க முடியும், பின்னர் தேவனுடைய வேளையில் உடையவர்களாகவும் இருப்போம். ஜெபம் செய்ய இயேசு நம்மை உற்சாகப்படுத்துகிறார். ஏனெனில், அவர் நம்முடன் உறவாட/உரையாட விரும்புகிறார். 

இரண்டாவதாக, நாம் ஜெபிக்கும்போது, நமக்கு விரோதமாக காரியங்களைச் செய்த மற்றவர்களை மன்னிக்கவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறோம். அனேக கிறிஸ்தவர்கள் நடைமுறையில் இது சாத்தியமற்றது என நினைக்கிறார்கள். நான் எப்படி இதைச் செய்ய முடியும், ஏன் செய்யவேண்டும், நான் என்ன தவறு செய்தேன் என்பன போன்ற பல கேள்விகளை அவர்கள் கேட்கிறார்கள். பழிவாங்கல் மற்றும் கசப்பு காரணமாக, தங்களால் மன்னிக்க முடியாத நபர்களுக்கு எதிராக சிலர் ஜெபிக்கவும் செய்கிறார்கள். நீங்கள் பரலோகத்தில் இருந்து மன்னிப்பைப் பெற விரும்பினால், மற்றவர்களை மன்னியுங்கள் என்று இயேசு இங்கே சொல்கிறார். எவருக்கும் விரோதமாக எதையும் மனதில் வைக்க வேண்டாம். மன்னிக்கமுடியாத தன்மை என்பது உண்மையில் நமக்கு நாமே கொடுத்துக் கொள்கிற ஒரு சுய தண்டனை ஆக இருக்கிறது. நாம் மற்றவர்களை மன்னியாமல் இருக்கிற காலம் வரைக்கும், நாம் மன்னியாமல் இருக்கிற மனிதர்களைப் பார்க்கிலும் நாம் தான் அதிக வேதனைகளை அனுபவிக்கிறவர்களாக இருக்கிறோம். தேவன் நம் பாவங்களை மன்னிக்க வேண்டும் என நாம் எதிர்பார்க்கும்போது, நமக்கு விரோதமாக மற்றவர்கள் செய்த சிறிய பாவங்களை அல்லது காரியங்களை நாம் மன்னிக்க வேண்டும் என தேவன் எதிர்பார்ப்பதில் என்ன தவறு இருக்கிறது. மற்றவர்களை மன்னித்தல் என்பது உண்மையில் நம்மை அழுத்துகிற அனேக காரியங்களில் இருந்து நம்மை விடுவிக்கிறதாகவும், தேவனுடைய மன்னிப்பு, மகிழ்ச்சி மற்றும் மனச்சமாதானம் ஆகியவைகளை பெற்றனுபவிக்க உதவுகிறதாகவும் இருக்கிறது. 
 
பயன்பாடு: நான் ஜெபிக்கும்போது, தேவன் விரும்புகிறது எதுவோ அதை அவர் எனக்குத் தரும்படி நான் கேட்பேன். நான் தேவனுடைய இருதயத்தையும், விருப்பங்களையும் புரிந்து கொள்ள தேவனுடைய வார்த்தை எனக்கு உதவுகிறது. எனக்கு எதிரான ஒரு நபர் என்னிடம் மன்னிப்பு கேட்கவில்லை என்றாலும் கூட, நான் அவரை மன்னிக்க தயாராக இருப்பேன். நான் மற்றவர்களை மன்னிக்கும்போது, தேவன் அதைக் கண்டு, என்னை மன்னிப்பதன் மூலம் என் செயலை கனப்படுத்துகிறார். இந்த இரண்டு காரியங்களையும் நான் செய்யும்போது, என் ஜெபங்களை தேவன் ஏற்றுக் கொள்கிறார் என்ற என் நம்பிக்கையை அது அதிகரிக்கிறது.

ஜெபம்:  இயேசுவே,  ஜெபம் பற்றிய இந்த அருமையான விலைமதிப்பற்ற இரண்டு முத்துக்களுக்காக உமக்கு நன்றி. ஜெபத்தில் நான் எதையும் சரியாகக் கேட்கவும், எவ்வித வெறுப்புமின்றி மற்றவர்களை மன்னிக்கவும் எனக்கு உம் ஞானத்தையும் பலத்தையும் தாரும். ஆமென். 

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

No comments: