Saturday, March 6, 2021

மனிதரைப் பற்றிய பயம் vs தேவன் மீது உள்ள விசுவாசம்

வாசிக்க: எண்ணாகமம் 13, 14; சங்கீதம் 65;  மாற்கு 5:1-20

வேதவசனம்: எண்ணாகமம் 13: 30. அப்பொழுது காலேப் மோசேக்கு முன்பாக ஜனங்களை அமர்த்தி: நாம் உடனே போய் அதைச் சுதந்தரித்துக்கொள்வோம்; நாம் அதை எளிதாய் ஜெயித்துக்கொள்ளலாம் என்றான். 31. அவனோடேகூடப் போய்வந்த மனிதரோ: நாம் போய் அந்த ஜனங்களோடே எதிர்க்க நம்மாலே கூடாது; அவர்கள் நம்மைப்பார்க்கிலும் பலவான்கள் என்றார்கள். 32. நாங்கள் போய்ச் சுற்றிப் பார்த்துவந்த அந்த தேசம் தன் குடிகளைப் பட்சிக்கிற தேசம்; நாங்கள் அதிலே கண்ட ஜனங்கள் எல்லாரும் மிகவும் பெரிய ஆட்கள்.  33. அங்கே இராட்சதப் பிறவியான ஏனாக்கின் குமாரராகிய இராட்சதரையும் கண்டோம்; நாங்கள் எங்கள் பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப்போல் இருந்தோம், அவர்கள் பார்வைக்கும் அப்படியே இருந்தோம் என்று சொல்லி, இப்படி இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே தாங்கள் சுற்றிப்பார்த்துவந்த தேசத்தைக்குறித்து துர்ச்செய்தி பரம்பச்செய்தார்கள்.

கவனித்தல்: வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை வேவுபார்க்கும்படி அனுப்பப்பட்ட மனிதரின் அறிக்கையை நாம் முதலில் வாசிக்கும்போது, மோசே அவர்கள் செல்வதற்கு முன்னால் கேட்ட கேள்விகள் (வ.18-20) அனைத்திற்கும் அவர்கள் சொன்ன வார்த்தைகள் பதிலளிப்பதாக (வ.27-29) காணப்படுகிறது. ஆனாலும், அவர்களுடைய செய்தியின் இரண்டாவது பகுதியில், கானானின் பலவான்களுடன் ஒப்பிடுகையில் அவர்கள் தங்கள் பயத்தையும் பலவீனத்தையும் மிகைப்படுத்தி வெளிப்படுத்தினர்.   கானானியருக்கு முன் வெட்டுக்கிளிகளைப் போல மிகவும் சிறியவர்களாக இருப்பதாக தங்களைப்  அவர்கள் நினைத்தார்கள். தங்களுடைய செய்தியில், எகிப்தில் இருந்து வல்லமையாக அவர்களை விடுவித்த தேவன் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை சுதந்தரிக்க பலன் தருவார் என்று சொல்லாமல், கானானின் பலவான்களைப் பற்றிய அவர்களின் பயத்தை சொல்லிக் கொண்டிருந்தனர்.  அவர்களுடைய துர்ச்செய்தி குழப்பத்தையும், முறுமுறுப்புகளையும், பயத்தையும் இஸ்ரவேலர்கள் மத்தியில் உண்டாக்கியது. மக்கள் எகிப்திற்கு அதாவது அடிமைத்தனத்திற்கு திரும்பிச் செல்வது பற்றி கூட யோசித்தனர். முடிவில், அந்த தவறான அறிக்கை தேவனுடைய கோபம் மற்றும் தண்டனையில் முடிந்தது. 

மறுபுறம், விசுவாசமான வார்த்தைகளைப் பேசிய இரண்டு நபர்களைக் காண்கிறோம். அவர்கள் கானானியர்களைப் பற்றி பயப்படவேண்டாம் என்று, கர்த்தருக்கு விரோதமாக கலகம் செய்ய வேண்டாம் என்றும், “கர்த்தர் நம்மோடே இருக்கிறார்” என்று சொல்லி ஜனங்களை உற்சாகப்படுத்தினர் (எண்.14:7-9). இந்த விசுவாசமான வார்த்தைகள் காலேபையும் யோசுவாவையும் துர்ச்செய்தியை அளித்த மற்ற 10 மனிதர்களிடம் இருந்து  வித்தியாசப்படுத்திக் காண்பிக்கிறது. நம்முடன் இருக்கும் தேவன் இந்த உலகத்தில் இருக்கும் எந்த பெரிய மனிதரையும் விட, பெரும் காரியங்களையும் விட மகா பெரியவராக இருக்கிறார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். மனிதரைப் பற்றிய பயம் அழிவுக்கு வழிநடத்தும். ஆனால் நம் விசுவாசமோ வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவைகளை சுதந்தரிக்க வழிநடத்துவதாக எப்போதும் இருக்கிறது. யோசுவாவுக்கும் காலேபுக்கும் அதுதான் நடந்தது, அவர்கள் இருவரைத் தவிர மற்ற அனைவரும் வாக்குத்தத்த தேசத்தில் பிரவேசிக்க முடியவில்லை. 

பயன்பாடு: மற்ற மனிதர்களுடன் என்னை ஒப்பிடுகையில் நான் பலவீனமானவராக அல்லது மிகவும் சிறியவராக இருக்கலாம். ஆனால், நன் சேவிக்கும் தேவனானவர் எவரையும் விட, எதையும் விட மிகப்பெரியவர் என்பதில் நான் உறுதியாயிருக்க வேண்டும். நான் கீழே இருந்து மற்ற மனிதர்களையும் காரியங்களையும் பார்த்துக் கொண்டிருப்பதற்குப் பதிலாக, தேவனுடைய பார்வையில் அவர்கள் எவ்வாறு காணப்படுகிறார்கள் என்பதை நான் பார்க்க வேண்டும். இதுவரை என்னை வழிநடத்தின தேவன் இறுதிவரை என்னை நடத்த வல்லவராக இருக்கிறார். நான் எந்த விதத்தில்  (கண்ணோட்டத்தில்) பார்க்கிறேன் என்பது  நான் என்னைப் பற்றி என்ன நினைக்கிறேன் என்பதை தீர்மானிக்கிறது. 

ஜெபம்:  தந்தையாகிய தெய்வமே, இந்நாள்வரையிலான உம் ஆச்சரியமான வழிநடத்துதலுக்காக உமக்கு நன்றி. நீர் பார்க்கிற விதத்தில் நான் இந்த உலகத்தைப் பார்க்கவும்,  அதன்படி விசுவாச வார்த்தைகளைப் பேசவும் விசுவாச வாழ்வை வாழவும் எனக்கு உதவும். ஜீவனுள்ள தேவனே, என் வார்த்தைகளும் வாழ்க்கையும் மற்றவர்கள் உம்மையும் உம் வார்த்தைகளையும் நம்புவதற்கு உற்சாகப்படுத்துவதாக இருக்கட்டும். ஆமென்.    

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

No comments: