வாசிக்க: எண்ணாகமம் 25, 26; சங்கீதம் 71, மாற்கு 8:1-21
வேதவசனம்: மாற்கு 8: 5. அதற்கு (இயேசு) அவர்: உங்களிடத்தில் எத்தனை அப்பங்கள் உண்டு என்று கேட்டார். அவர்கள் (இயேசுவின் சீடர்கள்): ஏழு அப்பங்கள் உண்டு என்றார்கள்.
கவனித்தல்: ஒரு பெருங்கூட்ட ஜனங்களுக்கு உணவளிப்பது பற்றி யாதொரு யோசனையும் இல்லாமல் இருந்த தன் சீடர்களிடம் இயேசு கேட்ட கேள்வியை நாம் இங்கு காண்கிறோம். ஐந்தாயிரம் பேருக்கு உணவளிப்பதற்கு முன்பும் இயேசு இதே கேள்வியை சீடர்களிடம் கேட்டதைப் பற்றி நீங்கள் முந்தின அதிகாரங்களில் வாசித்திருக்கக் கூடும் (மாற்கு 6:38). இந்த இரு சம்பவங்களிலும், இயேசுவின் சீடர்கள் நடைமுறை சார்ந்த ஒரு கேள்வியை உடையவர்களாக இருந்தனர். ஆகவே, இந்த பெரிய கூட்டத்திற்குத் தேவையான அப்பங்கள் எங்கே கிடைக்கும் என்று அவர்கள் இயேசுவிடம் கேட்டனர். முந்தைய அற்புத நிகழ்வில், இந்தப் பெரிய கூட்டத்திற்கு உணவு வேண்டுமென்றால் அதற்கு அதிகப் பணம் தேவைப்படும் என்று சொன்னார்கள். உடனடியாக அவ்வளவு பேருக்கும் தேவையான அனைத்து உணவையும் பெறுவது எப்படி சாத்தியம்! ஆயினும், இயேசு அவர்களைப் பார்த்து, “உங்களிடத்தில் எத்தனை அப்பங்கள் உண்டு என்று கேட்டார்.” நமக்கு அற்புதம் தேவைப்படுகின்ற ஒரு சமயத்தில், நம்மிடம் இல்லாத ஒன்றைப் பற்றி இயேசு நம்மிடம் ஒரு போதும் கேட்கமாட்டார். உங்களிடம் இருப்பது என்ன என்றுதான் இயேசு நம்மிடம் கேட்பார். தங்களிடம் இருந்தவற்றை சீடர்கள் இயேசுவிடம் கொண்டுவந்த உடனே, இயேசு ஜனங்களை சாப்பிடுவதற்காக கீழே அமர்ந்திருக்கப் பண்ணினார். பின்பு அவர் அவர்களிடம் இருப்பவைகளுக்காக தேவனுக்கு நன்றி சொல்லி, பசியாயிருந்த அந்த கூட்டத்திற்கு பரிமாறும்படி கொடுத்தார். இப்படியாக, இரண்டு உணவுப் பெருக்கத்தின் அற்புதங்கள் நடந்து ஆயிரக்கணக்கான ஜனங்களை திருப்திப் படுத்தியது.
பயன்பாடு: அனேக நேரங்களில் என்னிடம் இல்லாதவைகளைப் பற்றி நான் கவலைப்பட்டு, தேவனிடம் முறையிட்டிருக்கிறேன். சில நேரங்களில், என்னிடம் குறிப்பிட்ட அந்த தாலந்து, திறமை, கல்வி, வாய்ப்பு, வசதிகள், மற்றும் சாதகமான சூழ்நிலைகள் போன்றவை இல்லாதபடியால் தான் என்னால் ஒரு காரியத்தை செய்யவோ அல்லது சாதிக்கவோ முடியவில்லை என நான் நினைக்கிறேன். தேவன் எதைக் கொண்டும் அற்புதம் செய்ய முடியும் என்றாலும், என்னிடம் இருப்பதை நான் அவர் முன் கொண்டுவரவேண்டும் என தேவன் விரும்புகிறார். அப்போது, மிகவும் சிறிதாகவும் மதிப்பற்றதாகவும் தோன்றுகிற என்னுடையவைகளை, தேவன் தம் மகிமைக்காகவும், அனேக ஆத்துமாக்களை திருப்திப் படுத்தவும் பயன்படுத்துகிறார். நான் இதை நினைவில் வைத்து, என்னிடம் இருப்பவைகளை பயன்படுத்த தயக்கம் காட்டக் கூடாது. என்னுடைய சிறிய காரியங்களை நான் என்னிடம் வைத்திருக்கும் வரையிலும், அவை பயனற்றதாகத் தோன்றும். ஆயினும், அவைகளை நான் இயேசுவிடம் கொடுக்கும்போது, அது அனேகருக்கு ஆசீர்வாதமானதாக இருக்கும்படி அவர் மாற்றுகிறார்.
ஜெபம்: பிதாவே, நீர் என்னையும் என் சொற்ப தாலந்துகளையும் உம் மகிமைக்காக பயன்படுத்தமுடியும் என்பதை நான் புரிந்து கொள்ள உதவியமைக்காக உமக்கு நன்றி. இயேசுவே, ஜனங்களுக்கு ஊழியம் செய்ய மனதுருக்கத்துடன் நான் முன்வரவும், என்னிடம் இருப்பவைகளைப் பகிர்ந்து கொள்ளவும் எனக்கு உதவும். என்னிடம் இருப்பவைகளுக்காக நான் உமக்கு நன்றி கூறுகிறேன். அவைகளை உம் மகிமைக்காக பயன்படுத்தும். ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
No comments:
Post a Comment