வாசிக்க: உபாகமம் 7, 8; சங்கீதம் 80, மாற்கு 12:28-44
வேதவசனம்: உபாகமம் 8: 2. உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிறுமைப்படுத்தும்படிக்கும், தம்முடைய கட்டளைகளை நீ கைக்கொள்வாயோ கைக்கொள்ளமாட்டாயோ என்று அவர் உன்னைச் சோதித்து, உன் இருதயத்திலுள்ளதை நீ அறியும்படிக்கும், உன்னை இந்த நாற்பது வருஷமளவும் வனாந்தரத்திலே நடத்திவந்த எல்லா வழியையும் நினைப்பாயாக.
3. அவர் உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைப் பசியினால் வருத்தி, மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உனக்கு உணர்த்தும்படிக்கு, நீயும் உன் பிதாக்களும் அறியாதிருந்த மன்னாவினால் உன்னைப் போஷித்தார்.
4. இந்த நாற்பது வருஷமும் உன்மேலிருந்த வஸ்திரம் பழையதாய்ப் போகவும் இல்லை, உன் கால் வீங்கவும் இல்லை.
5. ஒருவன் தன் புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிட்சிக்கிறார் என்று நீ உன் இருதயத்தில் அறிந்துகொள்வாயாக.
கவனித்தல்: எகிப்தில் இருந்து ஏராளமான செல்வங்களையும் உடைமைகளையும் இஸ்ரவேலர்கள் எடுத்துச் சென்றனர் (யாத்.12:35-38) தங்கள் விடுதலைப் பயணத்தின் ஆரம்பத்தில் வாக்குதத்தம் பண்ணப்பட்ட கானான் தேசத்தை சுதந்தரித்துக் கொள்வதற்காக ஒரு குறுகிய காலத்தில் சீக்கிரத்தில் சென்று சேர்ந்து விடுவோம் என அவர்கள் நினைத்திருக்கக் கூடும். ஆனால், தேவன் அவர்களைப் பற்றி வேறு திட்டங்கள் வைத்திருந்தார். அவர்கள் அடிமைகளாக இருந்தபடியால், அவர்களுடைய அடிமை வேலையைத் தவிர வேறு எதற்கும் அவர்களுக்கு பயிற்சி கிடைத்திருக்க வாய்ப்புகள் குறைவு. இஸ்ரவேலர்களுடைய பயணத்தில், அவர்கள் இருதயத்தில் உள்ளதை அறிய தேவன் அவர்களைத் தாழ்த்தி, அன்பான கீழ்ப்படிதலுடன் வாழவும், எப்பொழுதும் அவர்கள் தேவனை நம்பவும் அவர்களுக்குப் கற்றுக் கொடுத்தார். இஸ்ரவேலர்களுக்கு அது ஒரு கற்றுக் கொள்ள கடினமான ஒரு காலமாக இருந்தது என்பது உண்மைதான். ஆயினும், தேவன் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்த, சிட்சித்த அந்த ஆண்டுகள் அவருடைய அற்புதப் பாதுகாப்பு மற்றும் இஸ்ரவேலருக்குத் தேவையானவைகளை கிடைக்கச் செய்த காலங்களாக இருந்தன. “கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தை”யையும் கனப்படுத்த இஸ்ரவேலர்கள் கற்பிக்கப்பட்டனர். ஒரு தகப்பன் தன் குழந்தையை நேசிப்பது போல, தேவன் தன் ஜனங்களை நேசிக்கிறார் என்பதை தம் பிள்ளைகளாகிய ஜனங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என அவர் விரும்புகிறார்.எதிர்காலச் சவால்களை எதிர்கொள்வதற்கு தயாராக இருக்கும்படி ஒரு தகப்பனுடைய அன்பு தன் பிள்ளைக்கு பயிற்சி அளிக்கிறது. “தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ?” என்று எபிரேயர் 12:7ல் நாம் வாசிக்கிறோம்.
பயன்பாடு: தேவன் என்னை பரீட்சித்துப் பார்க்கும்போது, அதில் உள்ள கஷ்டங்களையும், சிரமங்களையும் பார்ப்பதற்குப் பதிலாக, என் வாழ்வில் தேவன் ஏன் அனுமதிக்கிறார் என்பதை நான் புரிந்து கொண்டு, அத்தருணங்களை சமாளிப்பதற்காக தேவன் ஏற்பாடு பண்ணி வைத்திருக்கிறவைகளை நான் பார்க்க வேண்டும். எவ்வித கஷ்டமும் படாமல் எந்த ஒரு பயிற்சியும் எளிதாகக் கிடைப்பதில்லை. அப்படிப்பட்ட பயிற்சிக் காலங்களில், எந்த உணவையும் விட தேவனுடைய வார்த்தையானது அதிக பலத்தையும் தைரியத்தையும் எனக்குத் தரும். தேவன் என்னை சிட்சிக்கும்போது, அது என் நன்மைக்காகவே என்பதையும், நான் அவருடைய பரிசுத்தத்தில் பங்கு பெறும்படியாகவும் அதைச் செய்கிறார் என்பதை நான் நினைவில் கொள்ள வேண்டும் (எபி.12:10). என் தேவைகளைச் சந்திப்பதற்காக தேவனுடைய அற்புத ஏற்பாடுகளை நம்புவதன் மூலமாகவும், அவருடைய வார்த்தைகளுக்கு அன்புடன் கூடிய கீழ்ப்படிதலுடன், நான் சோதனையான நேரங்களைக் கடந்து வரும்போது, என் பரம தகப்பனவர் ஒரு மனித தகப்பனைப் போல என்னுடன் சேர்ந்து மகிழ்ச்சியடைகிறார். நான் அனுதினமும் இதை நினைவில் கொள்ள வேண்டும்.
ஜெபம்: தேவனே, என்னை சிட்சிப்பதன் மூலம் நீர் என் மீது காட்டுகிற தகப்பனுக்குரிய அன்புக்காக உமக்கு நன்றி. உம் அன்பின் இருதயத்தை புரிந்து கொள்ளவும், உம் வார்த்தைகளுக்கு எப்பொழுதும் கீழ்ப்படியவும் எனக்கு உதவும். பரலோகத்தில் இருக்கிற என் தந்தையே, தன் தகப்பனின் விருப்பத்தைக் கனப்படுத்துகிற ஒரு குழந்தையாக நான் வாழ எனக்கு உதவும். ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
No comments:
Post a Comment