வாசிக்க: தானியேல் 9,10; நீதிமொழிகள் 1; 2 பேதுரு 2
வேத வசனம்: தானியேல் 9:
17. இப்போதும் எங்கள் தேவனே, நீர் உமது அடியானுடைய விண்ணப்பத்தையும் அவனுடைய
கெஞ்சுதலையும் கேட்டு, பாழாய்க் கிடக்கிற உம்முடைய பரிசுத்த ஸ்தலத்தின்மேல்
ஆண்டவரினிமித்தம் உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும்.
18. என் தேவனே, உம்முடைய செவியைச் சாய்த்துக் கேட்டருளும்; உம்முடைய கண்களைத்
திறந்து, எங்கள் பாழிடங்களையும், உமது நாமம் தரிக்கப்பட்டிருக்கிற நகரத்தையும்
பார்த்தருளும்; நாங்கள் எங்கள் நீதிகளை அல்ல, உம்முடைய மிகுந்த
இரக்கங்களையே நம்பி, எங்கள் விண்ணப்பங்களை உமக்கு முன்பாகச்
செலுத்துகிறோம்.
19. ஆண்டவரே கேளும், ஆண்டவரே மன்னியும், ஆண்டவரே கவனியும்; என் தேவனே, உம்முடைய நிமித்தமாக அதைத் தாமதியாமல் செய்யும்; உம்முடைய
நகரத்துக்கும் உம்முடைய ஜனத்துக்கும் உம்முடைய நாமம் தரிக்கப்பட்டிருக்கிறதே
என்றேன்.
கவனித்தல்: தாங்கள் செய்கிற தவறுக்கு பொறுப்பேற்கத் தயங்குகிற பலரை நாம் காண்கிறோம். அதற்குப்
பதிலாக, அவர்கள் மற்றவர்களைக் குறைகூறி, தங்களுடைய செய்கையை நியாயப்படுத்திப் பேசுவார்கள்.
ஒருவர் கடினமான சூழ்நிலை, அல்லது சிறைப்படுதல், அல்லது வீட்டை விட்டு வேறொரு இடத்திற்கு
கொண்டு செல்லப்படுதல் போன்ற காரியங்களை தான் செய்யாத ஒரு காரியத்திற்காக அனுபவிக்க
நேர்ந்தால், அது மக்களைப் பற்றிய ஒரு எதிர்மறையான கருத்தையும், அவர்கள் மேல் வெறுப்பையும்
உண்டாக்கும். ஆனால், தானியேலோ ஒரு வித்தியாசமான தேவ மனிதராக இருந்தார். கி.மு 603 ஆம் ஆண்டுவாக்கில் அவர் பாபிலோனுக்குச்
சிறைப்பிடிக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டார். ”அகாஸ்வேருவின்
புத்திரனான தரியு ராஜ்யபாரம்பண்ணுகிற முதலாம் வருஷத்திலே(கி.மு.538),” அவர் 80 வயதுக்கும் மேற்பட்டவராக இருந்தார்.
அந்தச் சமயத்தில், அவர் வேதத்தில் எரேமியா தீர்க்கதரிசியின் வார்த்தைகளை வாசித்த போது,
சிறையிருப்பின் காலம் 70 ஆண்டுகள் என்பதை அவர் அறிந்து கொண்டார். கணக்கீட்டின்படி,
யூதர்களின் சிறையிருப்பு வெகுவிரைவில் முடிவுக்கு வரும். நாடுகடத்தப்பட்டு இருக்கும் காலம் வெகு சீக்கிரத்தில் முடிவுக்கு
வருவதை அறிந்த தானியேலின் பதில் என்னவெனில், அவன் தேவனிடம் திரும்பி தன் ஜனங்களுக்காக,
அவர்கள் திரும்பவும் எடுத்துக் கட்டப்படுவதற்காக ஜெபித்தான்.
அனேக ஆண்டுகளுக்கு முன்பாக ஜனங்கள் தேவனுக்குக் கீழ்ப்படியாமல் பாவம் செய்ததைச்
சொல்லி எச்சரித்த எரேமியா தீர்க்கதரிசியின் வார்த்தைகளை வாசித்த போது, தானியேல் உபவாசித்து
ஜெபிக்கத்துவங்கினார். தானியேல் தன் ஜெபத்தில் (தானி.9:4-20), ஒருபோதும் தன்னைப் பற்றிப்
பெருமை பாராட்டிக் கொள்ளவோ, தேவ ஜனங்களுக்கு நடந்த காரியங்களுக்கு மற்றவர்களைக் குறை
கூறவோ இல்லை. அதற்கு மாறாக, தேவனுக்கும் அவருடைய
வார்த்தைக்கும் விரோதமாக ஜனங்கள் செய்த பாவங்களை அறிக்கை செய்து ஜெபித்தார். அவர் தம்
ஜனங்களுடனே தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு, “நாங்கள்
பாவஞ்செய்து,” ”கலகம்பண்ணி,” ”செவிகொடாமற்போனோம்” என்று பலவாறு சொல்கிறார். தானியேல்
தன் தேவனுக்கு முன்பாக உத்தமமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்த போதிலும், அவர் தம் ஜனங்களின்
பாவங்களை தன் பாவமாக அறிக்கை செய்கிறார். தானியேல் தன் ஜனங்களுக்காக அறிக்கை செய்து
ஜெபித்த போது, அவர் தேவனுடைய நீதி மற்றும் தம் ஜனங்களை இரட்சிப்பதற்கான அவருடைய இரக்கங்கள்
ஆகியவற்றை நினைவு கூறிந்து ஜெபிக்கிறார். கீழ்ப்படியாத இஸ்ரவேலரை எகிப்திலிருந்து அழைத்துக்
கொண்டு வந்த தேவனால் சிறையிருப்பில் இருந்த தம் ஜனங்களுக்கும் உதவி செய்ய முடியும்
என்பதை நினைவு கூர்ந்தார். தேவனை தன் ஜெபத்தின் மையமாக தானியேல் வைத்திருந்தார்.
அவர் தன் ஜனங்களுக்காக தேவனுடைய இரக்கங்களை மன்றாடி ஜெபிக்கையில், ”நாங்கள்
எங்கள் நீதிகளை அல்ல, உம்முடைய மிகுந்த இரக்கங்களையே நம்பி, எங்கள்
விண்ணப்பங்களை உமக்கு முன்பாகச் செலுத்துகிறோம்” என்று சொல்லி ஜெபிக்கிறார். தானியேல்
தேவனின் குணாதிசயங்களைக் கூறி, பாழாய் கிடக்கிற
எருசலேம் நகரமானது தேவனுடைய நாமம் தரிக்கப்பட்ட நகரம் என்பதை நினைவுபடுத்துகிறார்.
அவர் தேவனை மையமாக வைத்து, சுருக்கமான வார்த்தைகளால் தன் ஜெப அவசரத்தை எடுத்துரைக்கிறார்:
“ஆண்டவரே கேளும், ஆண்டவரே மன்னியும், ஆண்டவரே கவனியும்.” தேவன் எப்பொழுதுமே இப்படிப்பட்ட
தேவனை மையமாகக் கொண்ட இடைவிடாத ஊக்கமான ஜெபங்களுக்கு பதிலளிக்கிறார். 20ஆம் வசனத்தில்,
தானியேல் தன் ஜெபத்தைப் பண்ணி முடிப்பதற்கு முன்பே தேவன் அவருக்கு பதில் கொடுத்ததாக
நாம் வாசிக்கிறோம்.
ஜனங்கள் நம்பிக்கை, ஒரு தீர்வு, மற்றும் சமாதானத்தை நாடித்
தேடுகிற இப்படிப் பட்ட ஒரு காலத்தில், நம் காலத்தில் மனதை அழுத்தும் அனைத்துக் கேள்விகளுக்குமான
பதிலை வேதாகமத்தை வாசிக்கும்போது கண்டு கொள்ள முடியும். நம்மைத் தாழ்த்தி, தேவனை மட்டுமே
நோக்கிப் பார்த்து நம் நிகழ்காலச் சூழ்நிலைக்காக ஜெபிக்க தேவனுடைய வார்த்தையானது நம்மை
உந்தித் தள்ளுகிறது. நாம் தேவனைத் தேடி, அவரை நோக்கி ஜெபிக்கையில், அவர் நம் ஜெபங்களைக்
கேட்டு, நம்மை மன்னித்து, நம் தேசத்திற்கு ஷேமத்தை தந்தருள்கிறார் (2 நாளா.7:14). நம்மை நாமே தாழ்த்தி, நம் தேசத்திற்காக ஜெபிக்க
நாம் தயாராக இருக்கிறோமா? நாம் நம் வாழ்வின்
மற்றும் ஜெபத்தின் மையமாக தேவனை வைத்திருப்போமாக.
பயன்பாடு: நான் தேவனுடைய சித்தத்தையும் அவருடைய
திட்டங்களையும் அறிந்து கொள்ளும்படி தேவனுடைய வார்த்தையானது எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
நான் வேதாகமத்தை வாசிக்கையில், அது என் பலவீனங்களை அறிக்கை செய்து அவைகளை மேற்கொள்ள
தேவனுடைய உதவியை நாட என்னை வழிநடத்துகிறது. இயேசு தன் மாதிரி ஜெபத்தில், தேவனை என் ஜெபத்தின்
மையமாக வைப்பது எப்படி என்பதை எனக்குக் கற்றுத் தந்திருக்கிறார் (மத்.6:9-13). என் வாழ்க்கையும் ஜெபமும் தேவனை நோக்கியதாகவும்,
தேவனை மையமாகக் கொண்டதாகவும் இருக்க வேண்டும்.
ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, உமது நீதியையும், இரக்கத்தையும், மற்றும் கிருபையையும் நம்பி
உம் முன் வந்திருக்கிறோம். கர்த்தாவே, எங்கள் பாவங்களை
மன்னித்து எங்களை சுகமாக்குங்கள். இந்த நிச்சயல்
இல்லாத நேரத்தில், உங்கள் வார்த்தைகள் மூலம் நீங்கள் எங்களுக்கு தருகிற நம்பிக்கைக்கு நன்றி. நாங்கள் உம் ஜனம். ஆகவே, “ஆண்டவரே
கேளும், ஆண்டவரே மன்னியும், ஆண்டவரே கவனியும்; என் தேவனே, உம்முடைய நிமித்தமாக அதைத் தாமதியாமல் செய்யும்.”.
ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day – 334
No comments:
Post a Comment