வாசிக்க: ஓசியா 9-10; நீதிமொழிகள் 6; 1 யோவான் 4
வேத வசனம்: 1 யோவான் 4: 1. பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள்
தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனாலுண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்.
2. தேவஆவியை நீங்கள் எதினாலே அறியலாமென்றால்:
மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணுகிற எந்த ஆவியும் தேவனால்
உண்டாயிருக்கிறது.
3. மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த
ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட
அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும்
உலகத்தில் இருக்கிறது.
கவனித்தல்: தங்களை கிறிஸ்து என்று
சொல்லிக் கொண்டவர்கள் பற்றி முன்பு (நாள் 261-இல்) நாம் பார்த்தோம். ஆனால், இதுவரை ஒருவர் கூட தன்னை
அந்திக்கிறிஸ்து என்று சொல்லவில்லை. கடந்த
2000ம் வருடங்களாக அனேகர் அந்திக்கிறிஸ்துக்கள் என்று பழி சுமத்தப்பட்டிருக்கின்றனர்
என்பது சுவராசியமான தகவல் ஆகும். வேதாகமத்தின்படி, அந்திக்கிறிஸ்து அல்லது கள்ள கிறிஸ்து
என்பவர் கடைசி காலங்களில் தோன்றும் ஒரு நபர் ஆவார். கடைசி நாட்களில் இருக்கும் வஞ்சகத்திற்கு
எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஏற்கனவே நம்மை
எச்சரித்திருக்கிறார் (மத்.24). இயேசு கிறிஸ்துவிடம் இருந்து பிரிக்கும் வஞ்சிக்கிற
ஆவிகள் மற்றும் பிசாசின் உபதேசங்களைக் குறித்து அப்போஸ்தலனாகிய பவுல் எச்சரிக்கிறார்
(1 தீமோ.4:1). எந்தப் போதனையையும் அது தேவனிடம் இருந்து வந்ததா என்பதைப் பார்க்க அதன் பின் இருக்கும் ஆவியைப் பரிசோதித்தறிய
வேண்டும் என அப்போஸ்தலனாகிய யோவான் நம்மிடம் கூறுகிறார். உபாகமம் 18:21-22இல், கள்ள தீர்க்கதரிசிகளைக் கண்டுகொள்வதற்கான
இரண்டு வழிமுறைகளைப் பற்றி தேவன் கூறுகிறார். அதற்கேற்றபடி, இயேசு கிறிஸ்துவின் மனித
தன்மை மற்றும் தெய்வீகத் தன்மையை ஏற்றுக் கொள்வதே தேவனிடத்தில் இருந்து வந்த ஆவியை
அடையாளம் காண்பதற்கான விதி என யோவான் கூறுகிறார். யோவானின் நாட்களில், இயேசுவின் மனித
தன்மையை நிராகரித்து தெய்வீக தன்மையை மட்டும் ஏற்றுக் கொண்ட (சிறப்பு வெளிப்பாடு
அல்லது அறிவு தேவை என்பதை வலியுறுத்தின அறிவை மையப்படுத்தின ஒரு உபதேசத்தின் (Gnosticism)
ஆரம்ப கால வடிவத்தினைச் சார்ந்த) ஒரு கள்ள உபதேசமானது கிறிஸ்தவர்களிடையே பரப்பப்பட்டு
வந்தது. ”இயேசு மாம்சத்தில் வந்தார்” என்ற அவரின் மனித அவதாரத்தை அறிக்கை செய்தல்
சபையின் அடிப்படை உபதேசங்களில் ஒன்றாகும். இயேசுவின் இரு தன்மை, அதாவது அவர் முழுவதும்
மனிதனாகவும் முழுவதும் தேவனாகவும் இருக்கிறார் என்பது நம் இரட்சிப்பிற்கு மிகவும்
முக்கியமானதாகும். இயேசுவின் மனித தன்மையை அல்லது தெய்வீகத் தன்மையை மட்டுமே ஏற்றுக்
கொள்கிற எந்த போதனையும் தேவனிடத்தில் இருந்து வந்ததல்ல.
புதிய ஏற்பாட்டில், இயேசுவின் உண்மையான அடையாளத்தை மறுதலிக்கும் ஆவியைக்
குறிப்பிட “அந்திக்கிறிஸ்து” என்ற பதத்தை யோவான் மட்டுமே பயன்படுத்தி இருக்கிறார் (
1 யோவான் 2:18, 22; 4:3; 2 யோவான் 1:7). அந்திக்கிறிஸ்து ஒரு பொய்யன் என்றும், பிதாவையும்
குமாரனையும் மறுதலிக்கும் வஞ்சகன் என்றும் யோவான் கூறுகிறார். அந்திக்கிறிஸ்துவின்
ஆவியானது கள்ள உபதேசங்களையும், போதனையையும், பொய்யான இயேசுவையும் பற்றிப் பேசி, பரப்புகிறது.
முடிவில், அது வேதாகம உண்மைக்குப் புறம்பான ஒன்றை நம்பும்படி மக்களை தவறாக வழிநடத்துகிறது.
நாங்களும் இயேசுவை நம்புகிறோம் என்று சொல்லி, தங்களுடன் சேர்ந்து கொள்ளும்படி மக்கள்
அழைப்பு விடுக்கலாம். ஆனால், வேத பண்டிதர் ஜான் ஸ்டாட் என்பவர் சொல்வது போல, “உண்மையான
விசுவாசமானது ஒன்றை நம்புவதற்கு முன்பு எதை விசுவாசிக்கிறோம் என்பதை பரிசோதித்துப்
பார்க்கிறது.” ஆகவே, அவர்களுடைய நம்பிக்கை தேவனிடத்தில் இருந்து வந்ததா என்பதை நாம்
அறிந்து கொள்ள நாம் ஆவிக்குரியப் பிரகாரமாக அதை நிதானித்து அறிய வேண்டும். நாம் எந்தப்
போதனையையும் கேள்வியே கேட்காமல் கண்ணை மூடிக்கொண்டு நம்புவதையும், எதையும் நம்பவே
முடியாதபடிக்கு சந்தேகக்கண்ணுடன் பார்ப்பதையும் தவிர்க்க வேண்டும். பிரபலமான கிறிஸ்தவ
தலைவர் அல்லது பாஸ்டர் அல்லது வானத்தில் இருந்து ஒரு தூதனே வந்து வேறொரு சுவிசேஷத்தையோ
அல்லது வேறோரு இயேசுவையோ பிரசங்கித்தால், நாம் அதை ஏற்றுக் கொள்ளக் கூடாது. நம்மில்
வசிக்கும் சத்திய ஆவியானவர் வஞ்சக ஆவியை நிதானித்து அறிந்து கொள்ள நமக்கு உதவி செய்கிறார்
(யோவான் 14:17). இந்த உலகத்தில் இருக்கும் அந்திக்கிறிஸ்துவின் ஆவிக்கு நாம் எச்சரிக்கையாக
இருக்கக்கடவோம்.
பயன்பாடு: இயேசுவைப் பற்றி நான் எதையாகிலும் கேட்க அல்லது
வாசிக்கும்போது, அந்தப் போதனையானது பிதாவாகிய தேவனையும், மாம்சத்தில் வந்த குமாரனாகிய
தேவனையும், பரிசுத்த ஆவியானவராகிய தேவனையும் மகிமைப்படுத்துகிறதா என்று சோதித்தறிவேன்.
நான் கிறிஸ்துவில் நிலைத்திருக்கவும் தேவனுடன் தொடர்பு கொள்ளவும் அது எப்படி உதவுகிறது
என்பதையும், தேவனையும் அவருடைய வார்த்தையையும் நேசிக்கவும், மற்றவர்களிடம் அன்பைக்
காட்டி பரிசுத்தமான பக்தியுள்ள ஒரு வாழ்க்கையை வாழ அது வழிநடத்துகிறதா என்பதையும் பரிசோதிப்பேன். சத்திய ஆவியானவரின் துணையுடன் தேவனுடைய வார்த்தையின்
வெளிச்சத்தில் தேவ சத்தியத்தைக் கண்டு அதை விசுவாசிப்பதே என் நோக்கம் ஆகும்.
ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, அந்திக்கிறிஸ்துவின் ஆவியைப் பற்றிய எச்சரிக்கை மற்றும் போதனைக்காக
உமக்கு நன்றி. இயேசுவே, உம்மிடம் இருந்து என்னைப் பிரிப்பதை நோக்கமாகக் கொண்ட எந்த
வஞ்சகமான போதனையையும் எதிர்த்து நிற்க எனக்கு உதவியருளும். பரிசுத்த ஆவியானவரே, அந்திக்கிறிஸ்துவின்
ஆவியை பகுத்துணர உதவி செய்து, தேவனுடைய சத்தியத்தில் நிலைத்து நிற்க என்னைப் பலப்படுத்தியருளும்.
ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day – 339
No comments:
Post a Comment