Thursday, December 16, 2021

சத்திய தேவனின் சத்தியமான அன்பு

வாசிக்க: ஆமோஸ் 7-9; நீதிமொழிகள் 13; வெளிப்படுத்தின விசேஷம் 3

வேத வசனம்:  வெளிப்படுத்தல் 3: 19. நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு.
20. இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.

கவனித்தல்: பொதுவாக,  நாம் நம்மை மதித்து, அன்பு, அக்கறை, மற்றும் பாசத்தைப் பொழியும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மீது மட்டுமே நாம் நம் அன்பைக் காட்டுவோம். சில நேரங்களில், நாம் எதிர்பார்க்கிறபடி அவர்கள் அன்பை வெளிப்படுத்தவில்லை எனில் அவர்களின் அன்பை கவனிக்கத் நாம் தவறிவிடலாம். அது போல, நம்மை நேசிக்காத ஒருவரை அன்பு செய்வது என்பது நம்மில் பலருக்கும் சவாலானதாக இருக்கிறது. தேவனுடைய அன்பு கூட அவரை அன்பு செய்து, அவருக்குக் கீழ்ப்படிபவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என சிலர் நினைக்கலாம். தேவனுடைய அன்பு நிபந்தனையற்றதும், அளவிலாததும், எல்லையற்றதுமாக இருக்கிறது என வேதாகமம் கூறுகிறது. தேவன் அனைவரையும் நேசிக்கிறார் என்பது வேதாகமத்தின் முக்கியமான போதனை ஆகும். நற்செய்தி நூலில், தன் கிரியைகளினால் நித்திய வாழ்வை விலைகொடுத்து வாங்கிவிடலாம் அல்லது சம்பாதிக்கலாம் என்று நினைத்த ஐசுவரியவானாக இருந்த மனிதனை இயேசு அன்பு கூர்ந்தார் என நாம் வாசிக்கிறோம் (மாற்கு 10:17-23). உண்மையான அன்பானது சரிசெய்து, சிட்சிக்கிறது, மற்றும் அனைவரிடமும் காட்டப்படுகிறது.

வெளிப்படுத்தல் புத்தகத்தில், லவோதிக்கேயா சபையானது உலகப்பிரகாரமாக மிகவும் ஐசுவரியம் நிறைந்ததாகவும், ஆவிக்குரியப் பிரகாரமாகவோ மிகவும் மோசமான நிலையிலும் இருந்தது.  லவோதிக்கேயா சபையைப் பாராட்டி இயேசு எதையுமே சொல்லவில்லை. லவோதிக்கேய சபையினர் தங்கள் தேவைகள் சந்திக்கப்பட தேவனை அல்ல,  தங்கள் செல்வத்தைச் சார்ந்து இருந்தனர். ஆகையால் ஜாக்கிரதையாயிருந்து மனந்திரும்பும்படி இயேசு லவோதிக்கேயா சபையை அழைக்கிறார். அவர்களை அவர் வெறுத்து ஒதுக்கவில்லை.  உலகப்பிரகாரமாக செல்வம் நிறைந்த ஆனால் ஆவிக்குரியப் பிரகாரமாக கண்கள் தெரியாதவர்களாக இருந்த லவோதிக்கேயா சபையானது தங்களுடன் பேசுபவர் யார் என்பதை அறிய வேண்டியதாயிருந்தது. 14ஆம் வசனத்தில் இயேசு தன்னைப் பற்றி சொல்கிற நீண்ட சுய குறிப்பைக் கவனித்துப் பாருங்கள்.  ஆயினும், அவர்களுடைய சபையில் உள்ளே இருக்கும்படி அவருக்கு அவர்கள் இடம் தர வில்லை.  ஆனால் இயேசுவோ ஒரு வாக்குத்தத்தத்துடன் கதவருகே நின்று கதவைத் தட்டுகிறார். அவர்கள் செய்யவேண்டியதெல்லாம் என்னெவெனில், இயேசுவுக்கு செவிகொடுத்து கதவைத் திறந்து அவருடனான ஐக்கியத்தை அனுபவித்து மகிழ்வதுதான். அவர்கள் உண்மையாகவே இயேசுவை நேசித்திருப்பார்கள் எனில், அவர்கள் கதவைத் திறந்து இயேசுவுடன் இருக்கும்படி, அவருடைய சிட்சையை ஏற்றுக் கொண்டிருப்பார்கள்.

இயேசு எல்லா விசுவாசிகளையும் நேசிக்கிற படியால், அவர்களைக் கண்டித்து சிட்சிக்கிறார். ”இதோ, தேவன் தண்டிக்கிற மனுஷன் பாக்கியவான்; ஆகையால் சர்வவல்லவருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதிரும்” என்று யோபு 5:17 சொல்கிறது. தேவனுடைய அன்பானது ஆக்கினைத் தீர்ப்பில் இருந்து நம்மைப் பாதுகாக்கும்படி நம்மைச் சிட்சிக்கிறது ( சங்.94:12; நீதி.3:11-12; 1 கொரி.11:32). தேவன் நம்மைச் சிட்சிக்கும்போது நாம் அதை அசட்டை செய்யக் கூடாது. தேவனுக்கும் அவருடைய வார்த்தைகளுக்குமான நம் எளிமையான கீழ்ப்படிதல் கர்த்தரிடத்தில் இருந்து மாபெரும் ஆசீர்வாதங்களை நமக்குக் கொண்டு வருகிறது.

பயன்பாடு:  தேவன் என்னைச் சிட்சிக்கும்போது, நான் அவருடைய மகன் அல்லது மகள் என்பதையும், நான் அவரால் மிகவும் நேசிக்கப்படுகிறேன் என்பதையும் அது காட்டுகிறது (எபி.12:5-11). ஆகவே நான் தேவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும். என் செல்வம் மற்றும் தன்னிறைவு நிலை ஆகியவை என் ஆவிக்குரிய வாழ்க்கை மற்றும் தேவனுடனான ஐக்கியம் ஆகியவற்றிற்கு தடையாக இருக்கக் கூடாது.  அதற்குப் பதிலாக, நான் என் தாலந்துகளையும் உலக செல்வத்தையும்  தேவ பக்திக்கு ஏதுவான நோக்கங்களுக்காக பயன்படுத்த வேண்டும். இயேசுவுக்கு செவிகொடுத்து அவருக்குக் கீழ்ப்படிகிற எவரும் அவருடனான ஐக்கியத்தைப் பெற்றனுபவிக்க முடியும். என் ஐக்கியம் தேவனுடன் இருக்கிறது. இது எவ்வளவு பெரிய ஆசீர்வாதம்!

ஜெபம்: அன்பின் தேவனே, இந்த உலகில் நான் உம்முடைய பிள்ளையாக வாழும்படி, என்னைக் பராமரித்து, சிட்சிக்கும் உம் பாரபட்சமற்ற அன்புக்காக உமக்கு நன்றி. இயேசுவே, உம் துணை இன்றி என்னால் எதுவும் செய்ய இயலாது. கர்த்தாவே, ஆவியானவர் எனக்குச் சொல்கிறதைக் கேட்க என் செவிகளைத் திறந்தருளும். பரிசுத்த ஆவியானவரே, தேவன் என்னைச் சிட்சிக்கும்போது நான் அவருக்குக் கீழ்ப்படிகிறதற்கு உம் ஞானத்தையும் பலத்தையும் எனக்குத் தந்தருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day – 346


No comments: