வாசிக்க: ஓசியா 4-6; நீதிமொழிகள் 4; 1 யோவான் 2
வேத வசனம்: 1 யோவான் 2: 15. உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை.
16. ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்.
17. உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.
கவனித்தல்: ”உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்” என்று அப்போஸ்தலனாகிய யோவான் சொல்கிற கட்டளையானது உலகத்தின் மீதான தேவனுடைய
அன்பைப் பற்றி அவர் முன்பு சொன்னதற்கு முரண்பாடானதாக இருப்பதாக சில கிறிஸ்தவர்கள்
நினைக்கின்றனர். யோவான் எல்லாவற்றையும் விட்டுவிட்டு துறவற வாழ்வதற்கு அழைக்கிறார்
என்று சிலர் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். இங்கே, யோவான் உலகத்தில் வாழும் மக்களைக்
குறிப்பிடாமல், சாத்தானின் ஆளுகையில் இருக்கும் உலக அமைப்பை அல்லது உலகப்பிரகாரமான
தன்மையைக் குறிப்பிடுகிறார். நம் ஆண்டவராகிய இயேசு நமக்காக ஜெபித்தது போல, நாமும்
அவரைப் போலவே, “உலகத்தாரல்ல” (யோவான் 17:16). கறைபட்டிருக்கிற உலக நடைமுறை அல்லது உலகப்பிரகாரமாக
இருப்பதில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வது எல்லா கிறிஸ்தவர்களுக்குமே சவாலானது
ஆகும். இங்கே நாம் எந்த அளவுக்கு உலகத்துடன் சிநேகமாக இருக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறோம்
என்று யோவான் கூற வில்லை. அதற்குப் பதிலாக, ”உலகத்திலும்
உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்” என்று திட்டவட்டமாகக் கூறுகிறார்.
”நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று
பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்” என்று இதை வேறு வார்த்தைகளில் அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார் (ரோமர்
12:2). கிறிஸ்தவர்களாகிய நாம் தேவனுடைய ஆளுகையை
கேள்விக்குள்ளாக்குகிற எதற்கும் எதிராக தைரியமாக நிற்க வேண்டும். ”உலக
சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று” நாம் அறிந்து கொள்ள வேண்டும் (யாக்கோபு
4:4). நாம் உலகத்தை சிநேகிக்கலாம் அல்லது பிதாவாகிய தேவனை நாம் நேசிக்கலாம். இரண்டில்
ஒன்றைதான் நாம் செய்ய முடியும். ”இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய
ஒருவனாலும் கூடாது” (மத்.6:24). பிதாவாகிய தேவன் மீதான நம் அன்பை விட்டு நம்மைப்
பிரிக்கும் எதற்கும் நாம் இடம் கொடுக்கக் கூடாது.
16ஆம் வசனத்தில், உலகத்தில் இருந்து வரும் மூன்று காரியங்களைப் பற்றி
யோவான் குறிப்பிடுகிறார்: மாம்சத்தின் இச்சை, கண்களின் இச்சை, மற்றும் ஜீவனத்தின் பெருமை. Dr. தாமஸ் கான்ஸ்டபில் என்பவர் பின்வருமாறு
இதற்கு அழகாக விளக்கம் தருகிறார்: ”மாம்ச இச்சையானது தேவனுடைய சித்தத்தை மீறி எதையாகிலும்
செய்யத் தூண்டும் விருப்பம் ஆகும்…கண்களின் இச்சை என்பது தேவனுடைய சித்தத்திற்கு மாறாக
எதையாகிலும் அடைய அல்லது பெற வேண்டும் என்கிற விருப்பம் ஆகும்…ஜீவனத்தின் பெருமை
என்பது தேவனுடைய சித்தத்திற்கு மாறாக (மனம்) தான் விரும்பியபடி இருக்க வேண்டும்
என்ற விருப்பம் ஆகும்.” இப்படியாக, இந்த மூன்று உலக காரியங்களும் ஆவி, ஆத்துமா, மற்றும்
சரீரத்தில் தேவனுக்கு எதிராக பாவம் செய்யத் தூண்டி நம்மை அவரை விட்டு பிரிக்கிறது.
கடந்த காலங்களில், இந்த மூன்று உலக காரியங்களையும் தங்கள் வாழ்வில் இருப்பதற்கு அனுமதித்த
அனேகர் கிருபையில் இருந்து வீழ்ந்து, தேவனுக்கு விரோதமாக பாவம் செய்திருக்கிறார்கள்.
ஆனால் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை பிசாசு சோதித்த போது இம்மூன்று காரியங்களிலும்— மாம்சத்தின் இச்சை, கண்களின் இச்சை, மற்றும் ஜீவனத்தின் பெருமை—ஜெயித்தார் (மத்.4:1-11, லூக்கா 4:1-13). ”நான் உலகத்தை ஜெயித்தேன்” என்று இயேசு சொன்னார் ( யோவான் 16:33). ”அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார்”
(எபி.2:18). நாம் நம் தேவனை முழு இருதயத்தோடும் அன்பு செய்வதற்கு கவனமாக இருக்க வேண்டும்
(உபா.6:5). தேவன் மீதான நம் அன்பே அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்வதற்கு நம்மைப் பலப்படுத்துகிறது.
நாம் தேவனுடைய வார்த்தைக்கேற்ப வாழ்ந்து, அவருடைய சித்தத்தைச் செய்யும்போது, உண்மையான
மகிழ்ச்சியைக் கண்டடைந்து, பாதுகாப்பாக வாழ்கிறோம்.
பயன்பாடு: இயேசுவின் முதலாவது மற்றும்
பிரதானமான கற்பனை என்னவெனில், ”உன் தேவனாகிய
கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக” என்பதாகும் (மத்.22:37; மாற்கு 12:30; லூக்கா 10:27). தேவனுக்கு உரிய இடத்தை
எந்த உலக காரியங்களும் ஆக்ரமித்துக் கொள்ளாதபடிக்கு நான் கவனமாக இருக்க வேண்டும்/இருப்பேன்.
தேவன் என்னை முந்தி அன்பு கூர்ந்தபடியால்
நான் அவரை நேசிக்கிறேன். இந்த உலக உல்லாசங்கள் மற்றும் விருப்பங்கள் அனைத்தும் அழிந்து
போம்; ஆனால் என் வாழ்க்கையோ இந்த உலகத்துடன் முடிந்து போவதிலை. நான் தேவனுடன் தொடர்ந்து
வாழ்வேன். எதுவும் என்னைக் கர்த்தராகிய
கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு பிரிக்கமாட்டாதென்று நான் நிச்சயித்திருக்கிறேன் (ரோமர் 8:39).
ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, உமக்காக வாழும்படி என்னைத் தெரிந்தெடுத்த
உம் அன்பிற்காக உமக்கு நன்றி. இயேசுவே, தேவ அன்பில் நான் வளரவும் உம்மில் நிலைத்திருக்கவும்
எனக்கு உதவியருள பரிசுத்த ஆவியானவரே, தேவனாகிய கர்த்தரிடத்தில் என் முழு இருதயத்தோடும், என் முழு ஆத்துமாவோடும் என் முழு மனதோடும் அன்புகூர எனக்கு உம் பலத்தைத் தந்தருளும். ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day – 337
No comments:
Post a Comment