வாசிக்க: ஆமோஸ் 3-4; நீதிமொழிகள் 11; வெளிப்படுத்தின விசேஷம் 1
வேத வசனம்: வெளிப்படுத்தல் 1: 3. இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம் சமீபமாயிருக்கிறது.
கவனித்தல்: எதிர்ப்புகள் நிரம்பிய
சமுதாய சூழ்நிலை, எதிர்காலத்தைக் குறித்த பயங்கள், உபத்திரவங்கள் பற்றிய மிரட்டல்கள்,
மதசகிப்புத்தன்மை இல்லாமை, மற்றும் கிறிஸ்தவத்திற்கு எதிராக ஆட்சியாளர்களின் பாரபட்சமான
தன்மை ஆகியவை இன்றைய கிறிஸ்தவத்தின் பிரச்சனைகள் மட்டுமல்ல, முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களும்
இவைகளை எதிர்கொள்ள வேண்டியதாயிருந்தது. அந்நாட்களில் கிறிஸ்தவர்கள் அனுபவித்த உபத்திரவத்தின்
ஒரு பகுதியாக, மிகவும் வயதான அப்போஸ்தலன் யோவான் அவர்கள் பத்மு தீவில், ”தேவவசனத்தினிமித்தமும், இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சாட்சியினிமித்தமும்” ஒரு சிறைக்கைதியாக இருந்தார் (வ.9). இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் சபையையும்
விசுவாசிகளையும் உற்சாகப்படுத்த யோவானுக்கு தேவன் வெளிப்படுத்தலைக் கொடுத்தார். வெளிப்படுத்தின
விசேஷம் புத்தகமானது புதிய ஏற்பாட்டில் கடைசி காலங்களைப் பற்றிச் சொல்கிற தீர்க்கதரிசனப்
புத்தகம் ஆகும்.
வெளிப்படுத்தல் புத்தகத்திற்கு
மக்கள் தங்கள் தெரிந்து கொள்ளும் விளக்க நெறி முறையின் படி பல்வேறு விளக்கங்களைக்
கொடுக்கின்றனர். வெளிப்படுத்தல் புத்தகத்தை விளக்க பின்வரும் அணுகுமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன:
1. கடந்த காலம் பற்றியது (The Preterist) – வெளிப்படுத்தல் புத்தகமானது முதல் நூற்றாண்டில்
யோவானின் வாழ்நாட்களில் நடந்த நிறைவேறிய சம்பவங்களைப் பற்றிக் கூறுகிறது; 2. வரலாறு
சம்பந்தப்பட்டது (The historicist) – யோவானின் காலம் முதல் இயேசுவின் இரண்டாம் வருகை
மட்டுமான மனித வரலாற்றில் நடக்கக் கூடிய சம்பவங்களைப் பற்றிய ஒரு விளக்கத்தை வெளிப்படுத்தல்
தருகிறது; 3. குறிக்கோள் (இலட்சியவாதம்) சம்பந்தப்பட்டது (The Idealist) – காலத்தால்
அழியாத ஆவிக்குரிய உண்மைகளை வெளிப்படுத்தல் புத்தகம் அறிவித்து, தீமையின் மீதான நன்மையின்
வெற்றியைக் குறிப்பிடுகிறதாக இருக்கிறது; 4. எதிர்காலம் சம்பந்தப்பட்டது (The
futurist) – வெளிப்படுத்தல் புத்தகம் பிரதானமாக கடைசி காலத்தில் நடைபெறப் போகிறவைகளைப்
பற்றி நமக்குக் கூறுகிறது; 5. பன்முகத்தன்மை கொண்ட அணுகுமுறை (The Eclectic) என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்ப்பட்ட
மற்ற அணுகுமுறைகளின் உட்கூறுகளை உள்வாங்கின கலவையான அணுகுமுறை ஆகும். சிலர் வெளிப்படுத்தல்
புத்தகத்தை தங்கள் மனம் விரும்பின படி தங்கள்
சொந்தக் கருத்திற்கேற்ப விளக்கம் தர முயற்சிக்கிறார்கள். சிலர் வேதத்தைவிட தங்கள்
அணுகுமுறையை உயர்த்திப் பிடிக்கிறார்கள். நம் புது விளக்கங்களைப் அல்லது நாம் தெரிவு
செய்யும் அணுகுமுறையைப் பரப்புவது அல்ல, தேவன் நம்மிடம் என்ன பேசுகிறார் என்பதைப் புரிந்து
கொண்டு அதை நம் வாழ்வில் நடைமுறைப்படுத்துவதே நம் நோக்கம் ஆகும். பாஸ்டர் டேவிட் கூஜிக்
சொல்வது போல, “இது இயேசு தன் ஊழியக்காரனுக்கு ஏதோ ஒன்றைக் காட்டும்படி கொடுத்த புத்தகம்.
இது அர்த்தமற்ற மற்றும் அறிவுப் பொருத்தமற்ற ஒரு புத்தகம் அல்ல. இதில் குழப்பத்திற்கான
வாக்குத்தத்தம் அல்ல, ஆசீர்வாதத்திற்காக வாக்குத்தத்தம் உண்டு.”
வெளிப்படுத்தம்
1:3ஆம் வசனமானது இப்புத்தகத்தில் பாக்கியவான்களைக் குறிக்கும் ஏழு வசனங்களில் ஒன்று
ஆகும். இங்கே வாசிப்பவர் மற்றும் கேட்பவர் என இருவரையும் ஆசீர்வதிக்கிற ஒரு தனித்தன்மையான
வாக்குத்தத்தத்தை நாம் காண்கிறோம். இந்த வசனமானது தேவனுடைய வார்த்தையைக் கேட்பதை மட்டும்
சொல்லாமல், அதை விசுவாசித்து வாழ்வில் நடைமுறைப்படுத்த நம்மை உற்சாகப்படுத்துகிறது.
ஒரு வேத விளக்கவுரையாளர் சொல்வது போல, ”தேவனுடைய வார்த்தையைக் கேட்பது ஒரு ஆசீர்வாதம்
ஆகும். அதற்குக் கீழ்ப்படிவது நம் கடமை ஆகும்.” சிலர் நினைப்பது போல, வெளிப்படுத்தல்
புத்தகமானது புரிந்து கொள்ளக் கடினமான ஒரு புத்தகம் அல்ல. இதை வாசிக்கிற, கேட்கிற
அனைவரும் அதைப் புரிந்துகொண்டு, தேவனுடைய ஆசீர்வாதத்தைப் பெற முடியும். இந்த தீர்க்கதரிசன
ஆசீர்வாதத்திற்கு யோவான் தரும் காரணம் என்னவெனில், “காலம் சமீபம்” என்பதே. இது இயேசுவின்
வருகை மிக சமீபம் என்பதைக் குறிக்கிறது. இங்கே காலம் என்பதைக் குறிப்பிட மூல மொழியான
கிரேக்கத்த்தில் வரும் வார்த்தையானது ஒரு குறிப்பிட்ட நேரத்தைக் குறிப்பிடாமல், ஒரு
காலம் அல்லது பருவத்தைக் குறிக்கிறது. காலம் சமீபமாயிருப்பதால், நாம் அவர் வருகைக்கு
ஆயத்தமாக இருக்க வேண்டும். நாம் தேவனுடைய வார்த்தையை வாசித்து அதற்குக் கீழ்ப்படிந்து,
கிறிஸ்துவுக்கு முன்பாக நிற்கும்படி நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்ள முடியும். முதல்
நூற்றாண்டில் உபத்திரவத்தின் மத்தியில் வாழ்ந்த கிறிஸ்தவர்களுக்கு தேவனுடைய மற்றும்
அவருடைய வார்த்தையின் ஆசீர்வாதங்கள் நம்பிக்கை தருவதாக இருந்தன. இன்றும், கிறிஸ்துவின்
இரண்டாவது வருகையானது ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் மகிமையான நம்பிக்கையாக ஆனந்த பாக்கியமான
இருக்கிறது.
பயன்பாடு: காலத்தால் அழியாத தேவனுடைய
வார்த்தையானது அதைக் கேட்கிற வாசிக்கிற அனைவரையும் ஆசீர்வதிக்கிறது. நான் வாழும் காலத்தை
கவனத்தில் கொண்டு, நான் எந்த தாமதமுமின்றி தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிய வேண்டும்.
நான் அறிந்ததெல்லாம் என்னவெனில், இயேசுவின் வருகைக்குக் “காலம் சமீபம்” என்பதே. நான்
சகல ஆயத்தத்துடனும் அவரைச் சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும். தேவனுடைய வார்த்தையானது எனக்கு எதிர்காலத்தைப் பற்றிய
நம்பிக்கையையும், நிகழ்கால காயங்களுக்கான மருந்தையும் சுகத்தையும், எக்காலத்திலூம்
நமக்குத் தேவையான ஆசீர்வாதத்தையும் தருகிறது.
ஜெபம்: இயேசுவே, உம் ஆசீர்வாதத்தைப் பற்றிய தீர்க்கதரிசன வாக்குத்தத்தத்திற்காக உமக்கு
நன்றீ. கர்த்தாவே, உம் வார்த்தையில் உள்ள அதிசயங்களைக் காணும்படி, பார்க்கும்படி
என் கண்களையும் செவிகளையும் திறந்தருளும். பரிசுத்த ஆவியானவரே, காலம் சமீபம் என்ற
உணர்வுடன், சீக்கிரத்தில் வரப்போகிற உம் வருகைக்கு எதிர்பார்ப்புடன் காத்திருந்து
வாழ என்னைப் பலப்படுத்தியருளும். ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day – 344
No comments:
Post a Comment