Saturday, December 4, 2021

கிறிஸ்துவின் வருகையைப் பற்றிய நம் நம்பிக்கை

வாசிக்க: தானியேல் 11,12; நீதிமொழிகள் 2; 2 பேதுரு 3

வேத வசனம்:  2 பேதுரு 3: 3. முதலாவது நீங்கள் அறியவேண்டியது என்னவெனில்: கடைசிநாட்களில் பரியாசக்காரர் வந்து, தங்கள் சுயஇச்சைகளின்படியே நடந்து,
4.
அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? பிதாக்கள் நித்திரையடைந்தபின்பு சகலமும் சிருஷ்டிப்பின் தோற்றமுதல் இருந்தவிதமாயிருக்கிறதே என்று சொல்லுவார்கள்.

கவனித்தல்: இந்நாட்களில் கிறிஸ்தவர்கள் இயேசுவின் முதலாவது மற்றும் இரண்டாவது வருகையைப் பற்றிப் பேசுவதைக்காட்டிலும் அதிகமாக தங்கள் வெற்றிகரமான மற்றும் செழிப்பான வாழ்க்கையைப் பற்றிப் பேசுவதாக தோன்றுகிறது. இயேசுவின் இரண்டாவது வருகையைப் பற்றிய செய்திகள் பிரசங்க பீடங்களில் இருந்து வருவது மிகவும் அரிதாகி விட்டது. சில நேரங்களில் இயேசுவின் வருகையைப் பற்றிய சந்தேகம் நிறைந்த அவிசுவாச வார்த்தைகள் கிறிஸ்தவர்களிடம் இருந்தே வருவதை நாம் கேட்கிறோம். ”இரண்டாயிரம் வருடங்களாக வராத ஒருவர் இனிமேலும் வருவார் என்று நம்புகிறீர்களா?” என்று மக்கள் கேட்கக் கூடும். இயேசு தன் இரண்டாவது வருகையைப் பற்றி அடிக்கடிப் பேசி, ”நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்” என்று நமக்கு வாக்குத்தத்தம் பண்ணி இருக்கிறார் (யோவான் 14:3). தீர்க்கதரிசிகள், தேவதூதர்கள், மற்றும் அப்போஸ்தலர்கள் ஆகியோர் இயேசுவின் இரண்டாவது வருகையைப் பற்றி முன்னறிவித்திருக்கின்றனர். ஆதிச் சபை விசுவாசிகள் கிறிஸ்து சீக்கிரமாக வந்துவிடுவார் என்று எதிர்பார்த்தனர். புதிய ஏற்பாட்டில், இயேசுவின் இரண்டாவது வருகையைப் பற்றி சுமார் 300 குறிப்புகள் காணப்படுகின்றன; ஒவ்வொரு புத்தகமும் வருகையைப் பற்றிப் பேசுகிறது. ஆயினும், கள்ளப் போதகர்களும் கள்ள தீர்க்கதரிசிகளும் தங்கள் தவறான போதனைகளினால் ஜனங்களை வஞ்சிக்க முயற்சித்தார்கள். இவர்களைப் பற்றி அப்போஸ்தலனாகிய பேதுரு தன் இரண்டாவது நிருபத்தில் இரண்டாவது அதிகாரத்தில் கூறுகிறார்: ”அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணுகிறவர்கள்,” ஆண்டவரை மறுதலிக்கிறவர்கள், கெட்ட நடக்கைகளை உடையவர்கள். இவர்கள் :மாம்ச இச்சைகளினாலும் காமவிகாரங்களினாலும்” ஜனங்களை தந்திரமாய்ப் பிடிக்கிறார்கள் (2 பேதுரு 2:1-3, 17-19). கடைசி நாட்களில், தேவனுடைய வார்த்தையை நம்ப மறுக்கிற பரியாசக்காரர்கள் இருப்பார்கள் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

இயேசுவின் இரண்டாவது வருகையைப் பற்றிய இந்த கள்ளப் போதகர்களின் சந்தேகங்கள் மற்றும் அவிசுவாசம் ஆகியவை   நேர்மையானவை அல்ல. அவர்கள்  “தங்கள் சுயஇச்சைகளின்படியே நடந்து” கொள்ள விரும்புகிறபடியால் பரியாசம் செய்கிறார்கள். அவர்கள் தேவனுடைய வாக்குத்தத்தத்தை சந்தேகித்து, உலக ஒழுங்கில் எந்த மாற்றமும் இல்லை, எல்லாமே முன்பு போலவே இன்றும் நடந்து வருகிறது என்று வாதிடுகின்றனர். மனித வாழ்விலும் தேவனுடைய சிருஷ்டிப்பிலும் தேவனுடைய இடைபடுதல் இல்லை என்று அவர்கள் மறுதலிக்கிறார்கள். சிருஷ்டிக்கப்பட்ட காலத்தில் இருந்தே எல்லாவற்றிலும் தேவனுடைய இடைபடுதல் மற்றும் அவருடைய வார்த்தைகளின் வல்லமையைப் பற்றி சொல்லி இந்தக் கள்ளப் போதகர்களின் வாதத்தில் உள்ளத் தவறுகளை பேதுரு வெளிப்படுத்துகிறார். எதிர்பாராத நேரத்தில் கிறிஸ்துவின் வருகையைப் பற்றிய நிச்சயத்தன்மை பற்றி சபைக்கு நினைவுபடுத்தி “பரிசுத்த நடக்கையும் தேவபக்தியும் உள்ளவர்களாயிருக்கவேண்டும்” என்று விசுவாசிகள் முன் சவாலை வைக்கிறார் (வ.11).  “ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்ப” மற்றும் இரட்சிக்கப்பட வேண்டுமென்று விரும்பி கர்த்தர் வரத் தாமதிக்கிறார் (வ.9,15). ஆகவே, கிரெய்க் எஸ். கீனர் அவர்கள் சொல்வது போல, “(இரண்டாவது வருகைக்குகு தேவன்) தாமதம் செய்வதை  இயேசு ஒருபோதும் வரப்போவதில்லை என்பதைக் குறிக்கிறது என நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது.” கிறிஸ்தவர்களாகிய நாம் இயேசுகிறிஸ்துவின் மகிமையான வருகையை எதிர்நோக்கி இருக்க வேண்டும். அது நிச்சயமற்ற ஒரு நம்பிக்கை அல்ல, மாறாக நம் எதிர்காலத்தைப் பற்றிய உறுதியான நம்பிக்கை ஆகும். நாம் கர்த்தருக்கேற்ற ஒரு வாழ்க்கையை வாழவும், அவருடைய வருகைக்கு ஆயத்தமாக இருக்கவும் நமக்கு நினைவுபடுத்துகிறது. இயேசு சீக்கிரம் வரப் போகிறார். மாரநாதா!

பயன்பாடு: நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்” என்று கர்த்தராகிய இயேசு சொல்லி இருக்கிறார் (மத்.24:44). இயேசு வரும்போது, ” கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி” நான் கவனமாக இருக்க வேண்டும் (வ.15).  இயேசு வெளிப்படும்போது, நான் “அவரோடேகூட மகிமையிலே” வெளிப்பட்டு (கொலோ.3:4),அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாக” அவருக்கு ஒப்பாக இருப்போம் (1 யோவான் 3:2). பரிசுத்தமான மற்றும் தேவபக்தியுள்ளா ஒரு வாழ்க்கையை வாழ கிறிஸ்துவின் வருகையைப் பற்றிய என் நம்பிக்கையானது என்னை உற்சாகப்படுத்துகிறது.  

ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, மனித இரட்சிப்புக்காக உம் ஒரே குமாரனாகிய இயேசுவை அனுப்பிய உம் அன்புக்காக உமக்கு நன்றி. இயேசுவே, உம் வருகையைப் பற்றிய ஆசீர்வாதமான நம்பிக்கையளிக்கும் உம் வாக்குத்தத்தத்திற்காக உமக்கு நன்றி.  பரிசுத்த ஆவியானவரே, உம்முடனே நடப்பதினால் மட்டுமே நான் ஒரு கறையில்லாத பரிசுத்த வாழ்க்கையை வாழ முடியும்; தேவனுடைய வார்த்தையை விசுவாசிப்பதற்கும் அதன்படி வாழவும் உம் பலத்தை எனக்குத் தாரும்;  கிறிஸ்துவின் வருகைக்கு எப்பொழுதும் ஆயத்தமாக இருப்பதற்கு எனக்கு உதவியருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day – 335

No comments: