Wednesday, December 22, 2021

கர்த்தர் என்னிடம் எதிர்பார்ப்பது என்ன?

வாசிக்க: மீகா 5-7; நீதிமொழிகள் 19; வெளிப்படுத்தின விசேஷம் 9

வேத வசனம்:  மீகா 6: 8. மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்.

கவனித்தல்: இந்தியாவில் மக்கள் பல்வேறு விதமான காணிக்கைகளை— பாலில் இருந்து சாராயம் வரை, தானியங்கள் முதல் தங்கம் வரை, மற்றும் காய்கறிகளில் இருந்து மிருகங்கள் வர (மிகவும் அரிதாக மனிதர்களைப் பலிகொடுத்தும் கூட— ஒரு தெய்வத்தை அமைதிப் படுத்த, கோபத்தை தணிக்க, அல்லது ஆசீர்வாதம் வேண்டி உள்ளூர் பாரம்பரியங்களின் படி காணிக்கைகளைக் கொடுப்பர். இங்கே ஒரு கற்பனை உரையாடலில், காணிக்கைகளும் பலிகளும் தேவனுடைய தயவைச் சம்பாதிக்க தனக்கு உதவுமா என்பதை மீகா அறிந்து கொள்ள விரும்புகிறார். அவர் தன் முதற்பேறான மகனைக் கொடுப்பதற்கும் தயாராக இருந்தார். ஆனால், தேவன் அவை எல்லாவற்றிற்கும் “இல்லை” என்று பதில் அளித்தார். அதற்குப் பதிலாக, எல்லா காலத்திற்கும் பொருந்தக் கூடிய மூன்று கட்டளைகளை தேவன் அவரிடம் கூறினார். மூன்று எளிய காரியங்களைச் செய்யும் படி தேவன் கூறினார். அவையாவன: நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையோடு இருத்தல். ஆமோஸ் 5:14-15இல், இதே போன்ற வார்த்தைகளை நாம் காண்கிறோம். மீகாவின் காலத்தில், இஸ்ரவேலர்கள் ”நன்மையை வெறுத்து, தீமையை விரும்பி” வாழ்ந்தனர் (மீகா 3:2). தேவன் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை சுருக்கமாக மீகா 6:8 நமக்குக் கூறுகிறது.

நியாயம் செய்தல் என்பது மக்களுக்கு அவர்களுக்கு உரியதை அல்லது உரிய உரிமைகளைக் கொடுப்பதைக் குறிக்கிறது.  இது தண்டனை வாங்கிக் கொடுத்து நிலைநிறுத்தும் நீதி அல்ல, மாறாக அவர்கள் வாழ்வைப் மறுபடியும் மீட்டெடுக்க உதவும் நீதி நியாயம் ஆகும். நம் காணிக்கைகள் தேவனைப் பிரியப்படுத்துவதில்லை. அவர் நம் காணிக்கைகளை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறார். மற்றவர்களும் தேவனுடைய அன்பை ருசிபார்க்கும்படி நாம் அன்பையும் இரக்கத்தையும் காண்பிக்க வேண்டும். நம் பிதாவாகிய தேவன் இரக்கமுள்ளவராக இருக்கிறபடியால், நாமும் இரக்கமுள்ளவர்களாக இருக்க வேண்டும் ( லூக்கா 6:36). நாம் அவருக்கு முன்பாக மனத்தாழ்மை உள்ளவர்களாக இருக்க வேண்டும் என தேவன் விரும்புகிறார். ”தாழ்மையாக நடந்து கொள்தல் என்பது விசுவாசித்து வாழ்வதே. ஏனெனில் விசுவாசமானது பெருமைக்கு நேர் எதிரான ஒன்றாக இருக்கிறது” என வால்டர் கெய்சர் விளக்குகிறார். ”தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்” என வேதம் சொல்கிறது (யாக்கோபு 4:6; 1 பேதுரு 5:5). பெருமையானது தேவனுக்குரிய  இடத்தில் வேறே எதையாகிலும் வைக்கிற படியால், தேவன் எந்தவிதமான மனிதப் பெருமைக்கும் எதிராக இருக்கிறார். விசுவாசமானது தேவனை வாழ்வின் மையத்தில் வைக்கிறது, பெருமையோ எப்பொழுதுமே சுயத்தை மையமாக நோக்கமாகக் கொண்டதாக இருக்கிறது. தேவனுடன் நடக்கிறவர்கள் பெருமை உள்ளவர்களாக இருக்க மாட்டார்கள்.

மீகா தன் மக்களை தேவனுக்கு செவிகொடுக்கும்படி அழைத்தார். மீகா 6:8 தேவனுக்கு செவிகொடுப்பதற்கான ஒரு அழைப்பு ஆகும். அது தேவனுடைய வார்த்தையின் படி செயல்படுவதற்கான அழைப்பு ஆகும். நாம் தேவனுடன் இருக்கும்படி மனந்திரும்பி அவரிடம் வரும் வரைக்கும், தேவன் நம்மிடம் எதிர்பார்க்கும் எதையும் நம்மால் செய்ய முடியாது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஸ்பர்ஜன் சொல்வது போல, “கர்த்தர் எதிர்பார்ப்பது ஆவிக்குரிய ஆராதனை ஆகும்; வெளிப்பிரகாரமானவைகளோ, வெளியே தெரிகிற தாலந்துகளோ அல்ல, மாறாக இருதயத்தை தேவன் எதிர்பார்க்கிறார்.” கர்த்தருக்காக சில காரியங்களைச் செய்து அவருடைய தயவைச்  சம்பாதிக்க முடியும் என்று பல கிறிஸ்தவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் தேவன் நாம் செய்கிறவைகளை மட்டுமல்ல, நம் இருதயத்தையும் பார்க்கிறார். நாம் உள்ளத்தில் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும் என அவர் விரும்புகிறார். தேவன் நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன என்பதை மிகத் தெளிவாக கூறி இருக்கிறார். நாம் அதற்குக் கீழ்ப்படிந்து, அதன்படி வாழ வேண்டும்.

பயன்பாடு:  என் தேவன் எல்லா காலத்திலும் நல்லவராகவே இருக்கிறார். என் மீதான  அவருடைய அன்பு மற்றும் எதிர்பார்ப்பு ஒருபோதும் மாறுவதில்லை. அவருடைய செய்தியானது புரிந்து கொள்ள முடியாத புதிர் அல்ல. அது தெளிவானதாகவும் அனைவரும் புரிந்து கொள்ளக் கூடியதாகவும் இருக்கிறது. நான் நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதற்கு வாழ்க்கையைப் பற்றிய தேவனுடைய அளவுகோலின் படி நான் வாழ வேண்டும். என் காணிக்கைகள் மூலமாக நான் தேவனைப் பிரியப்படுத்தவோ, அவருடைய தயவைப் பெறவோ முடியாது. நான் தேவனுடன் தனிப்பட்ட உறவில் தொடர்ந்து வாழ்ந்து, தேவனுடைய அன்பையும் இரக்கத்தையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விருப்பமுள்ளவனாகவும் இருக்க வேண்டும்.

 ஜெபம்:  தந்தையாகிய தெய்வமே, நான் விசுவாசிப்பதை வாழ்க்கையில் செயல்படுத்த எனக்கு சவாலை முன்வைக்கும் உம் செய்திக்காக உமக்கு நன்றி. கர்த்தாவே, உம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற எனக்கு உம் ஆவியின் பெலத்தைத் தந்தருளும். இயேசுவின் நாமத்தில், என் ஜெபம் கேட்டருளும். ஆமென். 

- அற்புதராஜ் சாமுவேல்

+91 9538328573

Day – 352


No comments: