வாசிக்க: யோவேல் 1-3; நீதிமொழிகள் 9; 3 யோவான் 1
வேத வசனம்: யோவேல் 3: 10. உங்கள் மண்வெட்டிகளைப் பட்டயங்களாகவும், உங்கள் அரிவாள்களை ஈட்டிகளாகவும் அடியுங்கள்; பலவீனனும் தன்னைப் பலவான் என்று சொல்வானாக.
கவனித்தல்: உண்மையானவை என்று மக்கள்
நம்புகிற பல காரியங்கள் உண்மையில் தவறான புரிதல்கள் அல்லது தவறான கருத்துக்களாக இருக்கின்றன.
உதாரணமாக, வேதாகமத்தில் தடைசெய்யப்பட்ட கனி என்று குறிப்பிடப்பட்டிருப்பது ஆப்பிள்
என்று பல கிறிஸ்தவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், மனிதனின் பாவ வீழ்ச்சியைப் பற்றிய
சம்பவத்தில், வேதாகமமானது எந்த கனியின் பெயரையும் குறிப்பிட வில்லை (மரத்தின் பெயரே
சொல்லப்பட்டிருக்கிறது). ஒரு விஷயமானது திரும்பத் திரும்ப பல முறை சொல்லப்படும்போது
பலரும் அதை உண்மை என்று நம்பத்துவங்குவதை நாம் காணலாம். ஒரு வசனத்தை அல்லது வேதப்
பகுதியை முன்னும் பின்னும் இருக்கிற வசனங்கள் அல்லது அதிகாரங்கள்
ஆகியவற்றின் வெளிச்சத்தில் வாசிப்பது அதைச் சரியாகப் புரிந்து கொள்வதற்கான வேத விளக்க
நெறிகளின் திறவுகோல் ஆகும். யோவேல் 3:10 வசனமானது தங்களைப் பலவீனர் என்று கருதுகிறவர்கள்
கர்த்தருக்குள் தங்களைப் பலப்படுத்திக் கொள்வதற்கான ஒரு அழைப்பு என்று பல கிறிஸ்தவர்கள்
தவறாக புரிந்து கொள்கிறார்கள்.
”கர்த்தருடைய நாள்”
என்பது யோவேல் தீர்க்கதரிசனப் புத்தகத்தின் முக்கியமான ஒரு கருப்பொருள் ஆகும். யோவேல்
3:10 ஐ அதைச் சுற்றிலும் இருக்கிற வசனங்களின் வெளிச்சத்தில் வாசிக்கும்போது, தேவனுடைய
நியாயத்தீர்ப்பைப் பெறுவதற்காக இறுதி யுத்தத்திற்கு வரும்படி தேவனுடைய எதிரிகள் அழைக்கப்படுவதை
நாம் அறிந்து கொள்கிறோம். யுத்தக் காலங்களின் போது, நாடுகள் தங்களுடைய ஆயுதங்கள் மற்றும்
படைபலத்தை அதிகரிக்க எல்லா முயற்சிகளையும் முன்னெடுக்கும். இங்கே, தேவன் துன்மார்க்க
தேசங்களை அழைத்து, தன்னை எதிர்க்கும்படி அவர்களுடைய ஆயுதங்களையும் ராணுவத்தையும் பலப்படுத்திக்
கொள்ளும்படி பரியாசமாக சொல்கிறார். யோவேல்
மூலமாக, தேவனுடைய எதிரிகள் ஒரு இருண்ட எதிர்காலத்தை எதிர்கொள்வார்கள் என்றும், தேவனோ
தன் ஜனங்களுக்கு அடைக்கலமாகவும் அரணாகவும் இருப்பார் என்றும் சொல்கிறார்.
யோவேல் 3:10 வசனமானது
நம் பலவீனங்களுக்கான தேவ வல்லமை மற்றும் கிருபை பற்றி எதுவும் சொல்லவில்லை எனினும்,
நம் பலவீன நேரங்களில் தேவன் நமக்கு உதவி செய்வது பற்றி வேதாகமம் ஏராளமாகக் கூறுகிறது.
”நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்” என்று
அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார் (2 கொரி.12:9-10). கிறிஸ்துவின் சிலுவையானது நம்
பலவீனங்களை ஜெயிக்கிறதற்கான தேவ வல்லமையாக இருக்கிறது என அவர் சொல்கிறார் (2 கொரி.13:4).
கிறிஸ்துவில் நாம் நம் வல்லமையைக் கண்டு கொள்கிறோம். கர்த்தருடைய நாள் பற்றி யோவேல்
தீர்க்கதரிசனம் உரைத்தபோது, பரிசுத்த ஆவியானவரின் அபிசேகம் பற்றிய தேவ வாக்குத்தத்தம்
பற்றி பேசியிருக்கிறார் (யோவேல் 2:28-32). பெந்தெகோஸ்தே நாளில், சீடர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்ற போது, அப்போஸ்தலனாகிய
பேதுரு யோவேலின் தீர்க்கதரிசனத்தை நினைவு கூர்ந்தார் (அப்.2:15-18). பரிசுத்த ஆவியானவர்
நாம் கிறிஸ்துவுக்கு சாட்சியாக இருப்பதற்கான பலத்தைத் தருகிறார் (அப்.1:8). பவுல்
சொல்வது போல, “அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு
உதவிசெய்கிறார்” ( ரோமர் 8:26).
பயன்பாடு: வேதாகமத்தை நான் வாசிக்கும்போது,
தேவன் என்னுடன் என்ன பேச விரும்புகிறார் என்பதை நான் கவனிப்பதற்கு ஜாக்கிரதையாக இருக்க
வேண்டும். வேதாகமத்தின் வசனத்தை அது சொல்லப்பட்ட சூழலுக்கு வெளியே தவறாக வியாக்கியானம்
செய்வதை நான் தவிர்க்க வேண்டும். வேத வசனங்களுக்கு வேதத்தின் வெளிச்சத்தில் பொருள்
காண வேண்டும். வேத வசனங்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக என் வசதிக்கேற்ப தேர்ந்தெடுத்து
என் கருத்தை நிரூபிப்பதற்கு அல்லது ஆதரிப்பதற்குப் பதிலாக, வேதாகமத்தைச் சரியாகப்
புரிந்து கொள்ள மன உண்மையுடன் விளக்கம் காண நான் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
வேதாகமமானது
ஜீவனுள்ள தேவனின் ஜீவ வார்த்தை ஆகும். நான் தேவனுடைய வார்த்தையை வாசிக்கும்போது, அதை
விசுவாசித்து, என் வாழ்க்கையில் கைக்கொள்ள வேண்டும். நான் தேவனுடைய வார்த்தையைக் கைக்கொள்கிறதினால்
எனக்கு மிகுந்த பலன் உண்டு.
ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, இன்றும் எங்களுடன் பேசும் உம் வார்த்தைக்காக உமக்கு நன்றி.
கர்த்தாவே, எனக்கு போதித்து, என்னைக் கண்டித்து சரிசெய்து, எல்லா நற்காரியங்களையும்
செய்ய என்னைப் பயிற்றுவிக்கிற உம் வார்த்தைக்காக நன்றி. பரிசுத்த ஆவியானவரே, சகலத்தையும்
எனக்கு போதித்தருளும்; கிறிஸ்துவின் வார்த்தைகளை எனக்கு நினைவுபடுத்தி, அதன்படி வாழ
எனக்கு உம் வல்லமையைத் தந்தருளும். ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day – 342
No comments:
Post a Comment