Sunday, December 19, 2021

இரக்கம் நிறைந்த தேவன் மற்றும் கோபம் நிறைந்த தீர்க்கதரிசி

வாசிக்க: யோனா 3,4; நீதிமொழிகள் 16; வெளிப்படுத்தின விசேஷம் 6

வேத வசனம்:  யோனா 4: 1. யோனாவுக்கு இது மிகவும் விசனமாயிருந்தது; அவன் கடுங்கோபங்கொண்டு,
2.
கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி: ஆ கர்த்தாவே, நான் என் தேசத்தில் இருக்கும்போதே நான் இதைச் சொல்லவில்லையா? இதினிமித்தமே நான் முன்னமே தர்ஷீசுக்கு ஓடிப்போனேன்; நீர் இரக்கமும் மன உருக்கமும் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவரும், தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமான தேவனென்று அறிவேன்.
3. இப்போதும் கர்த்தாவே, என் பிராணனை என்னைவிட்டு எடுத்துக்கொள்ளும்; நான் உயிரோடிருக்கிறதைப்பார்க்கிலும் சாகிறது நலமாயிருக்கும் என்றான்.

கவனித்தல்:  பழைய ஏற்பாட்டின் தேவன் ஜனங்களை தண்டிக்கும் கோபம் நிறைந்த தேவன் என்றும் புதிய ஏற்பாட்டின் தேவன் அனைவரையும் நேசிக்கும் இரக்கமுள்ள தேவன் என்றும் பல கிறிஸ்தவர்கள் தவறான கருத்தை உடையவர்களாக இருக்கிறார்கள். ஆனால், வேதாகமம் தேவனைப் பற்றிய முன்னுக்குப் பின் முரண்பாடான புரிதலை ஒருபோதும் தருவதில்லை. தேவனுடைய தன்மையும் குணாதியசயங்களும் நித்தியமானவை, அவை ஒரு போதும் மாறுவதில்லை. மனிதர்கள் மீதான தேவனுடைய அன்பைப் புரிந்து கொள்வதற்கு வேதாகமத்தில் ஏராளமான வசனங்களும் சான்றுகளும் உள்ளன. யோனா தீர்க்கதரிசியின் புத்தகம் அவைகளில் ஒன்றாகும். யோனா தீர்க்கதரிசியின் கதை பெரும்பாலான கிறிஸ்தவர்கள் நன்கறிந்த ஒரு கதை ஆகும். ஆயினும்  முதல் இரண்டு அதிகாரங்கள் பெறும் கவனத்தை கடைசி இரண்டு அதிகாரங்கள் பெறுவதில்லை. அதிருப்தியிலும் விரக்தியிலும் இருந்த யோனாவிடம் தேவன் எப்படி இடைபட்டார் என்பதைப் பார்ப்பதற்குப் பதிலாக, அவரை ஒரு பெரிய மீன் விழுங்கினதைப் பற்றி விளக்கமாக கூறுவதற்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம், இங்கே,  தங்களைத் தாழ்த்தி, தேவனைத் தேடிய நினிவே மக்களுக்கு தேவன் தாம் செய்ய நினைத்த தண்டனையைக் கொடுக்காமல் அன்பையும் இரக்கத்தையும் காண்பித்தபடியால், வருத்தப்பட்டு, மகிழ்ச்சியற்று மற்றும் கோபமடைந்திருக்கும்  ஒரு தீர்க்கதரிசியைப் நாம் காண்கிறோம்.   

 தேவனுடைய இரக்கத்தைக் கண்டவுடன், யோனா தர்ஷீசுக்கு ஏன் ஓடிப்போனார் என்பதை நியாயப்படுத்த முயல்கிறார். இஸ்ரவேலர்களின் எதிரியான அசீரியர்களின் தலைநகரமான நினிவேக்கு எதிராக, தேவனுடைய வார்த்தையைச் சொல்லும்படி இரண்டுமுறை தேவன் யோனாவுக்குக் கட்டளை இட்டார் என்பது உண்மைதான். இங்கே, நினிவே மக்களிடம் தேவன் இரக்கம் காட்டுவார் என்பதை முன்னமே யோனா அறிந்திருந்தார் என்பது போல காணப்படுகிறது. தேவன் இரக்கமும் மன உருக்கமும் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவரும், தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமான தேவனென்று யோனா அறிந்திருந்தார். தேவனுடைய அன்பு இஸ்ரவேலர்களுக்கு மட்டுமே உரியது என்று யோனா நினைத்திருக்கக் கூடும். யோனாவின் காலத்தில் (2 ராஜா.14:23-27,  ”கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தயோவாசின் குமாரன் யெரொபெயாம் என்பவரின் கீழ் இஸ்ரவேலர்கள் வாழ்ந்து வந்தனர். அந்நாட்களில், அசீரியர்கள் இஸ்ரவேலர்களை துன்புறுத்தினர். ஆனால் தேவன் தம் வாக்குத்தத்தத்தை நினைவு கூர்ந்து, இஸ்ரவேலர்களை காப்பாற்றினார். தேவனை அறியாத ஒரு தேசத்திற்கு இரக்கம் பாராட்டியது மூலமாக தேவன் தவறு செய்து விட்டார் என்று யோனா நினைத்தார். ஆகவே அவர் தேவனிடம் வாதாடி, விரக்தியில் ”நான் உயிரோடிருக்கிறதைப்பார்க்கிலும் சாகிறது நலமாயிருக்கும்” என்று சொல்கிறார். ஆனால், தேவனோ அவரைப் பொறுமையாகக் கையாள்கிறார்.

 யோனா கோபப்படுவதற்கு தீவிரமாக/துரிதமானவராக இருந்தார். ஆனால் தேவனோ நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவராக இருந்தார்/இருக்கிறார். கேள்விகள் கேட்டதற்காக தேவன் யோனாவைத் தண்டிக்க வில்லை. அதற்குப் பதிலாக, யோனா தப்பி ஓடிய போது,”யோனாவை விழுங்கும்படி ஒரு பெரிய மீனைக் கர்த்தர் ஆயத்தப்படுத்தியிருந்த தேவன் (யோனா 1:17),  யோனா நினிவேயின் அழிவைக் காண எதிர்நோக்கி காத்திருந்தபோது, அவர் தேவனுடைய மனதுருக்கத்தைப் புரிந்து கொள்ளும்படி, ”ஒரு ஆமணக்குச் செடியை," "ஒரு பூச்சி," மற்றும்  ”உஷ்ணமான கீழ்க்காற்றைக்” அனுப்பினார். தேவன் நினிவே பட்டணத்தில் இருந்த அனைவர் மீதும், மற்றும் மிருகங்கள் மீதும் கூட அக்கறை உள்ளவராக இருந்தார். அவர் யோனாவின் நலன் குறித்தும் கரிசனை உள்ளவராக இருந்தார். யோனா தீர்க்கதரிசனப் புத்தகம் வழக்கத்திற்கு மாறாக ஒரு கேள்வியுடன் முடிவுறுகிறதை நாம் பார்க்கிறோம். தேவனைப் பற்றி கேள்விகள் நமக்கு வரும்போது, தேவன் கோபமடைவதில்லை. நம்மைப் பற்றிய கரிசனை உள்ளவராக அவர் இருக்கிற படியால், அவர் நமக்கு பதிலளிக்கிறார்.  நம் தேவன் “இரக்கமும் மன உருக்கமும் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவர்” என்பதில் நாம் உறுதியாக இருக்கலாம். அவர் ஒருபோதும் மாறுவதில்லை.

பயன்பாடு: தேவன் சகல மனிதரும் மனந்திரும்ப வேண்டும் என விரும்புகிறார். சகல ஜாதியினருக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க வேண்டும் என ஆண்டவராகிய இயேசு கட்டளையிட்டிருக்கிறார். நான் அவருடைய செய்தியை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். நான் தேவனுக்குக் கீழ்ப்படிந்து, தேவ சித்தத்தைச் செய்ய வேண்டும்.   தேவன் அனவரையும் சிருஷ்டித்தவர் என்பதையும் அவர் அனைவருக்கும் தேவன் என்பதையும் நான் நினைவில் கொள்ள வேண்டும். என் பாரபட்சமான சிந்தனைகளையும் கருத்துக்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு, தேவன் சொல்கிறதை, செய்கிறதை, மற்றும் அவர் விரும்புகிறதை எதிர்பார்க்கிற தேவனுடைய தூதுவராக நான் இருக்க வேண்டும்.  தேவன் மற்றவர்களை மன்னிக்கும்போது அல்லது ஆசீர்வதிக்கும்போது நான் எரிச்சலடைகிறேனா? என் பார்வையில் நான் மற்றவர்களை நியாயந்தீர்ப்பதற்குப் பதிலாக, நான் தேவன் பார்க்கிறபடி பார்த்து, அவர்கள் தேவனைத் தேடும்போது அன்பையும் மனதுருக்கத்தையும் காட்டி அவர்களுக்கு உதவ வேண்டும். நான் என் விருப்பத்தை அல்ல, தேவனுடைய சித்தத்தையே எப்பொழுதும் நாட வேண்டும். நான் தேவனைப் போல இரக்கமும் மன உருக்கமும் நீடிய சாந்தமும் மற்றும் அன்பும் உள்ளவனாக இருக்க வேண்டும்.

ஜெபம்:  தந்தையாகிய தெய்வமே, சகல மனிதர் மீதான உம் அன்பு மற்றும் இரக்கத்திற்காக உமக்கு நன்றி. கர்த்தாவே, அப்பாவி மக்கள் மற்றும் மிருகங்கள் மீதான உம் கரிசனைக்காக உம்மைத் துதிக்கிறேன். இயேசுவே, உம் அன்பின் சீடனாக இருக்க எனக்கு உதவியருளும். பரிசுத்த ஆவியானவரே, அனைவரிடமும் தேவ அன்பைக் காட்ட என்னைப் பலப்படுத்தியருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day – 349

No comments: