வாசிக்க: ஓசியா 7-8; நீதிமொழிகள் 5; 1 யோவான் 3
வேத வசனம்: ஓசியா 8: 12. என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்; அவைகளை அந்நியகாரியமாக எண்ணினார்கள்.
கவனித்தல்: ”வேதாகமமானது நம் இருதயத்தின்
எல்லாக் கேள்விகளுக்கும் பதிலளிக்கும் ஒரு தேன் கூடு” என்று முஸ்லீம் பேராசிரியர் ஒருவர்
கூறுகிறார். வேதாகமமானது ஒரு புத்தகம் மட்டுமல்ல, அது புத்தகங்களின் புத்தகம் ஆகும்;
அது பல்வேறு வகையான பிரிவுகளைச் சேர்ந்த பலவித புத்தகங்களை உள்ளடக்கிய ஒரு நூலகம்
ஆகும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, படிக்காதவர் முதல் படித்தவர் வரை, எல்லா
வயதினரும் எல்லா இடங்களிலும் உள்ளவர்கள் வேதாகமத்தை வாசித்து அதன் மூலமாக பயனடைய முடியும்.
ஆயினும், வேதாகமமானது இக்காலத்திற்கு பொருத்தமானதா என்று சிலர் சந்தேகப்படுகின்றனர்.
அவர்களில் பெரும்பாலானோர் வேதாகமம் ஒரு பழங்கால
நூல் என்பதை ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால் அது தற்கால பிரச்சனைகள், கலாச்சாரங்கள் மற்றும்
நவீன விஞ்ஞான உலகிற்கு ஏற்றது அல்ல என்று நிராகரித்துவிடுகின்றனர். இவர்களுடன் சில
கிறிஸ்தவர்களும் சேர்ந்து கொண்டு வேதாகமத்தின் அதிகாரத்தையும் நம்பகத்தன்மையையும்
நம்ப மறுக்கின்றனர். வேதாகமத்திற்கு எதிரான எல்லா எதிர்ப்புகள் மற்றும் நிராகரிப்புகளின்
மத்தியிலும், முதலாவதாக அறிவிக்கப்பட்ட காலத்தில் இருந்து, தேவனுடைய வார்த்தையானது
செழிப்படைந்து, கிறிஸ்துவைக் குறித்து அறிகிற அறிவின் வாசனையை உலகமெங்கும் தொடர்ந்து
பரப்புகிறதாக இருக்கிறது.
ஓசியா தீர்க்கதரிசியின் காலத்தில், இஸ்ரவேலர்கள்
தேவனை மறந்து தேவனுக்கும் அவருடைய வார்த்தைகளுக்கும் உண்மையற்றவர்களாக இருந்தனர். அவர்கள்
விக்கிரகாராதனைக்கு எதிரான எல்லா எச்சரிக்கைகள் மற்றும் கட்டளைகளையும் மீறி, அந்நிய
தெய்வங்களை வணங்க ஆரம்பித்தனர். ஆனால் தேவனுடைய இருதயமோ அவர்களுக்காக ஏங்கித் தவித்தது
(ஓசியா 6:4; 11:8). தேவனுக்கு விரோதமாக பாவம் செய்வதற்கு இஸ்ரவேலர்கள் பலிபீடங்களைக்
கட்டின போது, தேவன் அவர்களை மனம் திரும்பவும் தன்னிடம் மறுபடியும் திரும்பும்படி அழைத்தார்.
ஓசியா 8:12 இல், தேவன் மூன்று காரியங்களைக் கூறுகிறார். வேதத்தின் ஆசிரியர் நானே
என்று தேவன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார்; அவருடைய வேதத்தில் பல மகத்துவமான
காரியங்கள் இருக்கின்றன; தேவனுடைய ஜனங்களோ அவருடைய வார்த்தைகளை புறக்கணித்து விட்டனர்.
தேவன் தம் வார்த்தைகளை எழுதுவதற்கு வெவ்வேறு மனிதர்களைப் பயன்படுத்தி இருந்தாலும்,
வேதாகமத்தின் ஆசிரியர் தேவனே. தேவன் நமக்காக எழுதி வைத்திருக்கிற மகத்தான காரியங்கள்
அனைத்தையும் பற்றி வேதம் நமக்குக் கூறுகிறது. தேவனுடைய மகத்தான அன்பு, அவருடைய இரட்சிப்பின்
திட்டம், எல்லா மனிதருக்குமான தேவ சித்தம், மற்றும் மனித வரலாற்றில் தேவன் தொடர்ந்து
இடைபட்டதைப் பற்றி வேதாகமம் நமக்குக் கூறுகிறது. தேவன் தம் ஜனங்களுக்குச் செய்த பெரிய
காரியங்களைப் பற்றிக் கூறி, அவருடைய மகத்தான போதனைகள், அன்பு, மற்றும் வாக்குத்தத்தங்களை
நமக்கு நினைவுபடுத்துகிறது. ஆனால் இஸ்ரவேலர்களோ, தேவனுடைய வார்த்தைகளுக்கு உரிய மரியாதையைக்
கொடுக்காமல், “அவைகளை அந்நியகாரியமாக எண்ணினார்கள்.” இதினிமித்தமாக, தேசத்தில் நிலையான ஆட்சி மற்றும் ஆசீர்வாதம் இல்லாமல் போனது.
முடிவில், அவர்கள் அசீரியர்களுடைய ஆட்சியின் கீழ் வந்தனர். அவர்கள் கர்த்தருடைய வார்த்தையை
அந்நியகாரியமாக கருதி, அந்நிய அரசர்களால் அடிமைப்படுத்தப்பட்டனர். ”அவர்கள்
காற்றை விதைத்து, சூறைக்காற்றை அறுப்பார்கள்” (வ.7) என்பது உண்மையானது. சில ஆங்கில மொழிபெயர்ப்புகள் ”மகத்துவங்கள்” என்பதற்குப்
பதிலாக “பத்தாயிரம் கட்டளைகள்” என்ற சொற்றொடரைப் பயன்படுத்தி இருக்கின்றன. நம்மை வழிநடத்துவதற்கும்
நம்மை ஆசீர்வதிப்பதற்கும் அபரிதமான போதனைகள் வேதாகமத்தில் உண்டு. ஏதேன் தோட்டம் முதல்
நித்தியம் வரையிலும், மனித இரட்சிப்புக்கான தேவனின் திட்டம், அவர் நம் மீது கொண்ட
அன்பு மாறாததாகவே இருக்கிறது. ”இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும்
என்றும் மாறாதவராயிருக்கிறார்” (எபி.13:8). இன்றும் தேவனுடைய வார்த்தையானது
நம்பகமானதும், ஏற்றதாகவும் நமக்குப் பயனுள்ளதாகவும் இருக்கிறது.
பயன்பாடு: வேதாகமம் தேவனுடைய வார்த்தை: அதில் எனக்குத் தேவையான
மகத்தான காரியங்கள் பல இருக்கின்றன. தேவன்
என் சிருஷ்டிகர் மற்றும் என் வாழ்வின் ஆண்டவர். எவரையும் விட தேவன் எனக்கு மிகவும்
நெருக்கமானவர். நான் என் வாழ்வில் தேவனுடைய
வார்த்தைக்கு உரிய மரியாதையையும் இடத்தையும் கொடுப்பேன். நான் வேதாகமத்தை அனுதினமும் வாசித்து, அதில்
உள்ள மகத்தான காரியங்களை அறிந்து கொள்ள எல்லா முயற்சிகளையும் எடுப்பேன். தேவன் வேதாகமம்
மூலமாகப் பேசும்போது, நான் அவருக்கு செவிகொடுத்துக் கீழ்ப்படிய வேண்டும். தேவனுடைய
வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளது ஆகும்; அது இன்றும் என்றென்றும் எனக்கு
ஆசீர்வாதமானதாக இருக்கிறது.
ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, என் கரங்களில் இருக்கும் உம் அதிகாரப்பூர்வமான, நன்றாக பரிசோதித்தறியப்பட்ட
வார்த்தைகளுக்காக உமக்கு நன்றி. கர்த்தாவே, என் வாழ்வில் நீர் செய்திருக்கிற அனைத்து
மகத்தான காரியங்களுக்காகவும் நான் உம்மைத் துதிக்கிறேன். ஆண்டவரே, உம் வார்த்தையில் உள்ள அதிசயங்களைக் காணும்படி
என் கண்களைத் திறந்தருளும். பரிசுத்த ஆவியானவரே, உம்முடைய துணையின்றி நான் தேவனுடைய
வார்த்தையைப் புரிந்து கொள்ள முடியாது; தேவனுடைய வார்த்தையை நிதானித்து அறிய உம் ஞானத்தையும்,
அதற்கு முழுமையாகக் கீழ்ப்படிய உம் பலத்தையும் எனக்குத் தந்தருளும். ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day – 338
No comments:
Post a Comment