வாசிக்க: ஆகாய் 1-2;
நீதிமொழிகள் 23; வெளிப்படுத்தின விசேஷம் 13
வேத வசனம்: ஆகாய் 2: 18. இப்போதும் இதற்கு முந்தின காலத்தில் நடந்ததை உங்கள் மனதிலே
சிந்தித்துப்பாருங்கள்; ஒன்பதாம் மாதம் இருபத்துநாலாந்தேதியாகிய இந்நாள்முதல்
கர்த்தருடைய ஆலயத்தின் அஸ்திபாரம் போடப்பட்ட அந்நாள்வரைக்கும் சென்றகாலத்தில்
நடந்ததை உங்கள் மனதிலே சிந்தித்துப்பாருங்கள்.
19. களஞ்சியத்தில் இன்னும் விதைத்தானியம் உண்டோ? திராட்சச்செடியும் அத்திமரமும் மாதளஞ்செடியும் ஒலிவமரமும் கனிகொடுக்கவில்லையே; நான் இன்றுமுதல் உங்களை ஆசீர்வதிப்பேன் என்று சொல்லுகிறார் என்றான்.
கவனித்தல்: நாம் பல நேரங்களில் பலவிதமான வேலைகளைத்
துவங்குகிறோம். ஆனால், அவைகளில் பெரும்பாலானவை நாட்கள் செல்லச் செல்ல
கைவிடப்பட்டு, ஒரு சில மட்டுமே முழுமையாக
செய்து முடிக்கப்படுகிறது. செய்து
முடிக்கப்படாத சில காரியங்கள் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டு, ஷூபர்ட் என்பவருடைய
எழுதி முடிக்கப்படாத சிம்பொனி இசையைப் போல, முடிவு தெரியாது காத்துக் கொண்டிருக்கின்றன. சில நேரங்களில், இது போன்ற முடித்து வைக்கப்படாத
வேலைகள் என்ன நோக்கத்திற்காக செய்யப்படுகின்றன என்பதைக் கூட நாம் மறந்து விடக்
கூடும். யூதர்களுடைய வரலாற்றில் அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தை நாம் காண்கிறோம். கிமு 538 இல், 70 ஆண்டுகால சிறையிருப்புக்குப்
பின், கர்த்தர் தம்முடைய ஜனங்களுக்கு
தீர்க்கதரிசனம் உரைத்தபடி, யூதர்கள்
எருசலேமுக்குத் திரும்புவதற்கும், நேபுகாத்நேச்சரால்
அழிக்கப்பட்ட ஆலயத்தை மீண்டும் கட்டுவதற்கும் மன்னர் சைரஸ் அனுமதித்தார். இரண்டே
ஆண்டுகளில், கர்த்தருடைய ஆலயத்தின் அஸ்திபாரப் பணியை செய்து
முடித்தனர். ஆயினும், அவர்கள் எதிர்ப்பு மற்றும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டபோது, அவர்களின் பணிக்கு எதிராக அரசின் உத்தரவை
எதிர்கொண்டபோது, அவர்கள் தேவாலயத்தை மீண்டும் கட்டுவதை சீக்கிரமாகவே மறந்துவிட்டனர்.
சிறையிருப்பில்
இருந்து திரும்பி வந்தவர்கள் தங்களுக்கு வீடுகளைக் கட்டுவதில் மும்முரமாகவும், ”கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கு ஏற்றகாலம் இன்னும் வரவில்லை”
என்று சாக்கு போக்குகளைச்சொல்லிக் கொண்டும் இருந்தனர் (ஆகாய் 1:2). அஸ்திபாரம்
போடப்பட்ட பின்பு, ஆகாய் தீர்க்கதரிசி மூலமாக தேவன் ஜனங்களை தூண்டுகிற வரைக்கும் (சுமார்
16 ஆண்டுகள்) மகிமையாக ஆரம்பிக்கப்பட்ட தேவாலயப்பணியில் எவ்வித முன்னேற்றமும்
இல்லை. ஆகவே, தேவன் சிறையிருப்பில் இருந்து திரும்பினவர்களிடம் கவனமாக உங்கள்
மனதிலே சிந்தித்துக் கொள்ளுங்கள் என்று அவர்களைப் பற்றி தேவன் சொல்கிறதை நாம்
காண்கிறோம் (ஆகாய் 1:5, 7, 2:15,18.) தம் ஜனங்களின் கனியற்ற மற்றும் பயனற்ற
நிலைமைக்குக் காரணம் அவர்களுடைய கீழ்ப்படியாமையே என்பதை அவர்களுக்கு
நினைவுபடுத்தினார் (உபா.28:38-39; லேவி.26:20). ஆயினும், அவர்களுடன் தேவன் பேசியபோது, ”தங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்துக்கும், தங்கள் தேவனாகிய கர்த்தர் அனுப்பின ஆகாய் என்னும் தீர்க்கதரிசியினுடைய
வார்த்தைகளுக்கும் செவிகொடுத்தார்கள்” (ஆகாய் 1:12). யூதர்கள்
தேவனுக்குக் கீழ்ப்படிந்து, தேவனை முதலாவதாக வைக்கும்படி தங்கள் விருப்பங்களை
மாற்றிக் கொண்ட போது, அவர்கள் மாபெரும் ஆசீர்வாதங்களையும் வாக்குத்தத்தங்களையும்,
மற்றும் தேவனுடைய பிரசன்னத்தைக் குறித்த நிச்சயத்தையும் பெற்றார்கள். தேவனுடைய
தீர்க்கதரிசிகளின் உதவி மற்றும் ஜனங்கள் தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிதல்
போன்ற காரணத்தால், வரலாறு சொல்வது போல, நான்கே ஆண்டுகளில் அவர்கள் தேவாலயம்
கட்டும் பணியை செய்து முடித்தனர். அது சாலமோன் கட்டியது போல பிரமாண்டமான பெரிய
ஆலயம் அல்ல. ஆயினும், அந்த சிறிய இரண்டாவதாக கட்டப்பட்ட ஆலயத்தில்தான் மேசியாவாகிய
நம் ஆண்டவர் இயேசு சென்று ஜனங்களுடனே பேசினார். மக்கள் தேவனையும் அவருடைய
வார்த்தையையும் முதலிடத்தில் வைத்தபோது, அது பலருக்கும் ஆசீர்வாதமானதாக மாறியது.
சமயங்களில், நாம் தேவனுடைய வேலைக்குப் பதிலாக நம்முடைய வேலைக்கு முதலிடம்
கொடுக்கும் சூழல் வரலாம். நாம் முக்கியமானவைகளுக்கு முதலிடம் கொடுக்கும்போது, அது
அனேகருக்கு ஆசீர்வாதமானதாக மாறுகிறது. நாம் என்ன செய்ய வேண்டும் என தேவன்
விரும்புகிறார் என்பதை நாம் கவனமாக சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாம் நம்
வாழ்வில் தேவனை மையமாகக் கொண்டு செயல்படுகிறோமா, அவருடைய வேலைகளை கவனிக்கிறோமா என
நம்மை நாமே ஆராய்ந்து பார்ப்போமாக.
பயன்பாடு: நான் தேவனுடைய வேலைக்கு எதிராக எதிர்ப்புகள் மற்றும் சாதகமற்ற சூழ்நிலைகள்
ஆகியவைகளை எதிர்கொள்ளும் போது, எனக்கு
முக்கியமானவைகளாக தோன்றுகிறவைகளில் கவனத்தை செலுத்தி, தேவனுடைய வேலையில் இருந்து
விலகி இருப்பதற்கு சாக்குப் போக்காக அதை எடுத்துக் கொள்ளக் கூடாது. நான் முதலாவதாக
தேவனுடைய ராஜ்ஜியத்தையும், அவருடைய நீதியையும் தேட வேண்டும். நான் தேவனை என்
வாழ்வின் மையத்தில் வைக்கும்போது, அவர் எனக்குத் தேவையானவைகளை எல்லாம் தருகிறார். கர்த்தர்
என்னிடம் என்னக் கேட்டாலும் நான் அதைச் செய்ய வேண்டும். நான் தேவனுக்குக்
கீழ்ப்படிந்து அவர் மீது என் கவனத்தை வைக்கும்போது, என் வாழ்க்கையானது அனேகருக்கு
ஆசீர்வாதமானதாக இருக்கும்.
ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, அந்தகாரத்தில் இருந்து
ஆச்சரியமான ஒளியிடம் வரும்படிக்கு உம் பிள்ளையாக என்னைத் தெரிந்து கொண்டு அழைத்தற்காக
உமக்கு நன்றி. இயேசுவே, இந்த உலகத்தை ஜெயிக்கிற விசுவாசத்தை எனக்குத்
தந்து போதிக்கிறதற்காக உமக்கு நன்றி. பரிசுத்த ஆவியானவரே, தேவனுடைய வார்த்தைக்குக்
கீழ்ப்படிய எனக்கு உதவி செய்து, அதன்படி வாழ என்னைப் பலப்படுத்தியருளும். ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day – 356
No comments:
Post a Comment