வாசிக்க: ஓசியா 11-12; நீதிமொழிகள் 7; 1 யோவான் 5
வேத வசனம்: ஓசியா 12: 3. அவன் தாயின் கர்ப்பத்திலே தன் சகோதரனுடைய குதிகாலைப் பிடித்தான், தன் பெலத்தினால் தேவனோடே போராடினான்.
4. அவன் தூதனானவரோடே போராடி மேற்கொண்டான், அழுது அவரை நோக்கிக் கெஞ்சினான்; பெத்தேலிலே அவர் அவனைக் கண்டு சந்தித்து, அவ்விடத்திலும் நம்மோடே பேசினார்.
5. கர்த்தராகிய அவர் சேனைகளின் தேவன்; யேகோவா என்பது அவருடைய நாமசங்கீர்த்தனம்.
கவனித்தல்: மாக்கியவெல்லியன் (Machiavellian) என்ற பதமானது எதையாகிலும் சாதிக்க வேண்டுமென்ற முனைப்பில்
அதற்காக புத்திசாலித்தனமான பொய்கள் மற்றும் தந்திரங்களைப் பயன்படுத்தும் நபரைக் குறிக்கிறது.
மாக்கியவெல்லியன் நடத்தையை உடைய நபர் தான் நினைத்ததைச் சாதிக்க
எந்த எல்லைக்கும் செல்லத் தயாரானவராக இருப்பார். வேதாகமத்தில், ஆசீர்வாதமானது என்று
தான் நினைத்ததை அடைந்து தீர்வதற்காக மற்றவர்களை ஏமாற்றுகிறவராகவும், வஞ்சிக்கிறவராகவும்
யாக்கோபு இருந்தார். அவர் தன் சகோதரனை நயமாக ஏமாற்றினார். தந்தையை ஏமாற்றினார், தன்
மாமனாரிடம் தந்திரமாக நடந்து கொண்டார். ஆயினும், கானானை நோக்கி திரும்பச் செல்லும்போது,
யாக்கோபு தன் சகோதரன் ஏசாவைக் குறித்து பயந்து, யாப்போக்கு ஆற்றங்கரையில் தனித்திருந்தான்
(ஆதி.32:22-32). அங்கே அவன் தேவனை எதிர்கொண்டான். அந்தச் சம்பவத்திற்குப் பின், நாம்
மாற்றப்பட்ட ஒரு வித்தியாசமான யாக்கோபைப் பார்க்கிறோம். தேவன் யாக்கோபின் பெயரை ஆசீர்வாதமான
ஒன்றாக மாற்றினார். அங்கே யாக்கோபு ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொண்டார்.
ஆதியாகமம் 33 இல், நாம் ஒரு வார்த்தை விளையாட்டைக் காண்கிறோம்—யாப்போக்கு
(yabboq) ஆற்றங்கரையில் யாக்கோபுடன்(ya’aqob) தேவன் போராடினார் (ye’abeq).” தேவனுடனான
தாழ்மையான அனுபவத்துடன், யாக்கோபு உண்மையான ஆசீர்வாதம் தேவனிடம் இருந்து வருகிறது
என்பதை கற்றறிந்து கொண்டார். அவர் கண்ணீருடன் தேவனிடம் ஜெபித்து, அவரை நோக்கிக் கெஞ்சினார்.
இஸ்ரவேலர்களின் முற்பிதாவாகிய யாக்கோபின் கதையை நினைவுபடுத்தி, மனித முயற்சிகள் மற்றும்
அமைதி ஒப்பந்தங்கள் மூலமாக சமாதானத்தை நாடுவதற்குப் பதிலாக தேவனிடம் திரும்புதல் பற்றி
ஓசியா இஸ்ரவேலர்களுக்கு நினைவுபடுத்துகிறார்.
லாபானிடம் தப்பிச் செல்கையில் பெத்தேலில் யாக்கோபு
தேவனை முதன் முதலாகச் சந்தித்தார். தேவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, யாக்கோபு
தேவனை முதன் முதலாவதாக சந்தித்த பெத்தேலுக்கு செல்லும்படி யாக்கோபு திரும்பினார். பெத்தேலுக்குச்
செல்கையில், தேவனுக்குச் சமர்ப்பிக்க யாக்கோபு ஒரு புதிய புத்துணர்ச்சி அனுபவத்தைப்
பெற்றார். அதன் பின்பு, அவர் அனேகருக்கு ஆசீர்வாதமானவராக மாறினார். ஓசியாவின் நாட்களில்,
பெத்தேல் இன்னமும் ஒரு முக்கியமான ஆராதனை ஸ்தலமாக இஸ்ரவேலர்களுக்கு இருந்து வந்தது.
ஆனால் இஸ்ரவேலர்கள் தேவனுக்குப் பதிலாக பாகாலையும்
மற்ற சிலைகளையும் வணங்கி வந்தனர். யாக்கோபு தேவனிடம் திரும்பி வந்தது போல, இஸ்ரவேலர்களும்
தேவனிடம் திரும்ப முடியும் என ஓசியா கூறுகிறார். நம் தேவன் சர்வ வல்லவர். நம்முடைய
சுயநல சுயத்தை மையமாகக் கொண்ட வழிகளை முயற்சித்துப் காரியங்களைச் சாதிப்பதற்குப் பதிலாக,
நாம் நம்மை தேவனிடமும் நம் வாழ்வில் அவருடைய
சித்தம் செய்யப்படவும் ஒப்புக்கொடுக்க வேண்டும். தேவனைத் தவிர வேறு எதிலும் நம் நம்பிக்கை
மற்றும் விசுவாசத்தை வைக்கக் கூடாது. தேவனிடத்தில் இருந்து நம் வெற்றி வருகிறது.
பயன்பாடு: நான் என் சுய புத்தியைச்
சார்ந்திராமல், என் முழு இருதயத்தோடும் தேவனிடம் என் வழிகளை ஒப்புவிக்க வேண்டும்
(நீதி.3:5-6). நான் தேவனை மட்டுமே ஆராதிப்பேன்/ஆராதிக்க வேண்டும். தம்மைத் தேடுகிற
அனைவரிடமும் தேவன் இன்றும் பேசுகிறார். நான் தேவனுடன் பேசவும், அவருடைய வார்த்தைகளைக்
கேட்கவும் வாசிக்கவும் அனுதினமும் நான் தேவன் முன் வர வேண்டும்.
ஜெபம்: ஜீவனுள்ள தேவனே, நீர் எனக்கு தந்திருக்கிற ஆசீர்வாத வார்த்தைகளுக்காக உமக்கு நன்றி.
யாக்கோபை அனேகருக்கு ஆசீர்வாதமானவராக மாற்றியது போல, மற்றவர்களை ஆசீர்வதிக்கும் பாத்திரமாக
என்னை மாற்றியருளும். கர்த்தாவே, முதலாவது உம்மையே எப்பொழுதும் தேட எனக்கு உதவியருளும்.
இயேசுவே, தேவனை மையமாகக் கொண்ட ஒரு வாழ்க்கையை வாழ எனக்கு உதவியருளும். பரிசுத்த
ஆவியானவரே, எப்பொழுதும் என்னோடிருந்து, தேவபக்தியுள்ள வாழ்க்கையை வாழ என்னை வழி நடத்தியருளும்.
ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day – 340
No comments:
Post a Comment