வாசிக்க: ஓசியா 13-14; நீதிமொழிகள் 8; 2 யோவான் 1
வேத வசனம்: 2 யோவான் 1: 12 உங்களுக்கு எழுதவேண்டிய காரியங்கள் அநேகம் உண்டு; காகிதத்தினாலும் மையினாலும் அவைகளை எழுத எனக்கு மனதில்லை. உங்களுடைய சந்தோஷம்
நிறைவாயிருக்கும்படிக்கு உங்களிடத்தில் வந்து, முகமுகமாய்ப் பேசலாமென்று நம்பியிருக்கிறேன்.
கவனித்தல்: 21ஆம் நூற்றாண்டுக்கு
முன்பு, தபால் அஞ்சல் கடிதங்கள், தொலைபேசி அழைப்புகள், மற்றும் தந்தி சேவை ஆகியவை தொலைத்தொடர்பு சாதன கருவிகளாக இருந்தன. தொலைவில் இருப்பவருடன் பேசுவது அல்லது தொடர்புகொள்வது
என்பது இப்போது இருப்பதைப் போல முன்பு எளிதானதாக இருக்கவில்லை. ஆனால் இன்றைய உலகில்,
சில நொடிகளிலேயே நாம் விரும்பும் நபர்களிடம் அவர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும்
பார்க்கவும் பேசவும் இணைப்பைப் பெற முடியும். ஆயினும், சமூக வலைதளங்கள் மற்றும் நவீன
தகவல் தொடர்பு சாதனங்கள் நிறைந்த இந்த காலத்திலும் கூட, ஒருவரை நேருக்கு நேர் சந்தித்து
பேசுவதை விட சிறம்த தகவல் பரிமாற்றம் வேறெதுவும் இல்லை. இங்கு, 2 யோவான் நிருபத்தில், அப்போஸ்தலனாகிய
யோவான் “முகமுகமாய்ப் பேசலாமென்று” சொல்லும்போது, எழுத ஒன்றும்
இல்லை என்பதற்காக அப்படிச் சொல்ல வில்லை. யோவான் தன் புத்தகங்களின் முடிவில் தான்
எழுதுவதின் நோக்கத்தை வெளிப்படுத்துகிறார். தனது இரண்டாவது மற்றும் மூன்றாவது நிருபங்களை ”முகமுகமாய்ப்” பார்த்து பேசலாம் என்ற தன் நம்பிக்கையை வெளிப்படுத்தி
எழுதி முடிக்கிறார்.
”இயேசு
தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது” என்று யோவான் 20:31இல் யோவான்
எழுதுகிறார். 1 யோவான் 5:13இல், “உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று
நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் நீங்கள்
விசுவாசமாயிருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் விசுவாசமாயிருக்கிற
உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன்” என்று எழுதி இருப்பதை
நாம் வாசிக்கிறோம். 2 யோவான் 1:12 இல், ”உங்களுடைய சந்தோஷம்
நிறைவாயிருக்கும்படிக்கு” என்று எழுதுகையில், முகமுகமாய் பார்த்துப் பேச வேண்டும்
என்ற தன் விருப்பத்திற்கான காரணத்தை யோவான் கூறுகிறார். ”உங்கள்
சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி இவைகளை உங்களுக்கு எழுதுகிறோம்” என்று 1 யோவான்
1:4இல் யோவான் வெளிப்படுத்துகிறார். இயேசு என்னிலும் என் வார்த்தைகளிலும் நிலைத்திருங்கள்
என்று தன் சீடர்களிடம் சொல்லும்போது, ”என்னுடைய சந்தோஷம் உங்களில்
நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம்
நிறைவாயிருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன்” என்று இயேசு சொல்கிறார் (யோவான் 15:11). நாம் நிறைவான சந்தோஷத்தைப் பெறுவதுதான்
கிறிஸ்தவ ஐக்கியத்தின் நோக்கம் என்பதை இந்த வசனங்கள் வலியுறுத்துகின்றன. நமது “ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது”
(1 யோவான் 1:3). இது ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் இருக்கும் சிறப்பான பாக்கியம் ஆகும்.
சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதன்
நோக்கம் தேவனுடனான நம் அன்பின் ஐக்கியத்தைப் பற்றிப் பகிர்ந்து கொள்வதாகும். யோவான்
தான் நினைத்ததை எல்லாம் எழுதி இருக்க முடியும். ஆனால் அவர் அதைச் செய்ய வில்லை. அதற்குப்
பதிலாக, நேரடியாக சந்திக்கும்போது அவைகளை தெளிவாகப் பேசவும் முழுமையான மற்றும் பரஸ்பர
மகிழ்ச்சியை அடையவும் அவர் விரும்பினார். விசுவாசிகளை சந்தித்து முகமுகமாய் சந்திக்கும்
ஒரு வாய்ப்பை அவர் இழக்க விரும்பவில்லை. விசுவாசிகளுடனான நம் ஐக்கியத்தில், நாம் முழுமையான
மகிழ்ச்சியை உடையவர்களாக இருக்கிறோமா அல்லது குழப்பத்தை உடையவர்களாக இருக்கிறோமா? நாம்
கிறிஸ்துவில் நிலைத்திருந்து, தேவனுடனும் மற்ற விசுவாசிகளுடனும் முழுமையான மகிழ்ச்சியைப்
பெற்றுனுபவிப்போமாக.
பயன்பாடு: நான் ஒருவரை நேரடியாக சந்திக்கும்போது, அவருடன்
ஒரு தெளிவான தகவல் பரிமாற்றத்தையும் உறவையும் உடையவராக இருக்க முடியும். நான் நேரடியாக
ஒருவரைச் சந்தித்துப் பேசும்போது, தவறான தகவல் பரிமாற்றத்திற்கான வாய்ப்புகள் மிகவும்
குறைவு. நான் தேவனுடனும் சக விசுவாசிகளுடனும் ஐக்கியம் பாராட்டும் வாய்ப்பை தவற விடக்
கூடாது (எபி.10:24-25). ”இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும்
எத்தனை இன்பமுமானது?” (சங்.133:1).
ஜெபம்: அன்பின் தேவனே, கிறிஸ்துவின் சரீரமாகிய சபையின் ஒரு அங்கமாக இருக்க என்னை அழைத்ததற்காக
உமக்கு நன்றி. ஆண்டவரே, என்னை உம் மகிமைக்காக பயன்படுத்தியருளும்; உம் மகிழ்ச்சியினால்
நிறைத்திடும். பரிசுத்த ஆவியானவரே, கிறிஸ்துவின்
அன்பில் நிலைத்திருப்பதற்கும், எல்லோருடைய பிரயோஜனத்துகென்று என் ஆவிக்குரிய வரங்களைப்
பயன்படுத்துவதற்கும் உம் ஞானத்தையும் வல்லமையையும் எனக்குத் தந்தருளும். ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day – 341
No comments:
Post a Comment