வாசிக்க: மீகா 1,2; நீதிமொழிகள் 17; வெளிப்படுத்தின விசேஷம் 7
வேத வசனம்: நீதிமொழிகள் 17: 22. மனமகிழ்ச்சி நல்ல ஒளஷதம்; முறிந்த ஆவியோ
எலும்புகளை உலரப்பண்ணும்.
கவனித்தல்: இந்நாட்களில் நன்கு சுறுசுறுப்பாக மற்றும் வலிமையாக
இருக்கிறவர்கள் திடீரென இறந்து போவது பற்றி அடிக்கடி கேள்விப்படுகிறோம். அவர்களில் பெரும்பாலானோர் இருதயம் சம்பந்தப்பட்ட
வியாதிகளால் இறந்து போவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். ஏறக்குறைய 25% இறப்புகள் இருதய நோய்களால் ஏற்படுகின்றன
என்று மருத்துவ இதழ்கள் கூறுகின்றன. மருந்துச் சீட்டுகளைக் கொடுக்கும்போது, பல மருத்துவர்கள்,
“எதைக் குறித்தும் கவலைப்படாமல், மகிழ்ச்சியாயிருங்கள்” என்று சொல்கின்றனர். ”மனமகிழ்ச்சி நல்ல ஒளஷதம்” என்று வேதம் கூறுகிறது. நம் இருதயத்தை சமாதானம் மற்றும் மகிழ்ச்சி நிறைந்ததாக
வைத்திருப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றிக் குறிப்பிடும் பல வசனங்கள் நீதிமொழிகள்
புத்தகத்தில் உண்டு (நீதி.14:30; 15:13,30; 16:15). “நான் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறேன்,
ஆனால் எனக்குப் பல பிரச்சனைகள் இருக்கும்போது அது எப்படி சாத்தியம்?” என்று ஜனங்கள்
சொல்லக் கூடும். மகிழ்ச்சி என்பது நம்மிடம் இருப்பவைகளைக் கொண்டு வருகிற ஒரு காரியம்
அல்ல, எதையும் பொருட்படுத்தாமல், மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற நம் விருப்பத்தைச்
சார்ந்தது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். எல்லா நேரங்களிலும் மகிழ்ச்சியாக
இருப்பதை கிறிஸ்தவர்களாகிய நாம் தெரிந்து கொள்வதற்கு பல காரணங்கள் நமக்கு உண்டு.
பிலிப்பியர்
4:4இல், ”கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்” என்று அப்போஸ்தலனாகிய பவுல் சொல்கிறார்.
எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பது கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைப் பற்றிய தேவனுடைய
சித்தம் என 1 தெசலோனிக்கேயர் 5:16-18இல் வாசிக்கிறோம். நம் மகிழ்ச்சியானது நம் சூழ்நிலைகளைச்
சார்ந்தது அல்ல. அது கர்த்தரிடத்தில் இருந்து வருகிறது. ஆபகூக் தீர்க்கதரிசி வரக்கூடிய
பாபிலோனிய படையெடுப்பைப் பற்றி தீர்க்கதரிசனம் சொன்ன போது, எனக்கு என்ன நேர்ந்தாலும்,
”நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்” என்று சொல்கிறார்
(ஆபகூக் 3:17,18). பாடுகள் மற்றும் உபத்திரவங்களின் போதும், நாம் மகிழ்ச்சியாக இருக்க
அழைக்கப்பட்டிருக்கிறோம் (யாக்கோபு 1:2, 1 பேதுரு 4:13). கர்த்தரின் மகிழ்ச்சியாக
இருப்பதே நம் பெலன் என்று நாம் சொல்ல முடியும். ஏனெனில், “சமாதானத்தை
உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம்
கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக” என்று நம்முடைய
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொல்லி இருக்கிறார் (யோவான் 14:27). எந்த பாவமும், இச்சையும், உலக விருப்பங்களும் கர்த்தருக்குள்
நமக்கிருக்கும் மகிழ்ச்சியை குலைத்துப் போட நாம் அனுமதிக்கக் கூடாது. இந்த உலகில்
இருக்கும் பல காரியங்கள் நம் ஆவியை முறிந்து போகப் பண்ணும். ஆனால், நம் ஆண்டவராகிய
இயேசு கிறிஸ்து இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டுண்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும் கொடுக்கிறார் (ஏசாயா
61:11; லூக்கா 4:18). கர்த்தர் நமக்குத் தரும் மகிழ்ச்சியானது நித்திய மகிழ்ச்சி ஆகும்.
நீதிமொழிகள் 15:15 சொல்வது போல, ”மனரம்மியமோ நித்திய விருந்து” ஆகும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள் மகிழ்ச்சியாக
இருப்பது என்பது நம் விருப்பம் ஆகும். ”தேவனுடைய ராஜ்யம் புசிப்பும்
குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும்
சந்தோஷமுமாயிருக்கிறது” என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் (ரோமர் 14:17).
பயன்பாடு: எவரும் தர முடியாத மகிழ்ச்சியை
ஆண்டவராகிய இயேசு எனக்குத் தருகிறார். தாகத்துடன்
தம்மிடம் வருகிற அனைவருக்கும் அவர் இலவசமாக அதைக் கொடுக்கிறார். எந்த சூழ்நிலையையும்
எதிர்கொள்வதற்கான அவருடைய வல்லமையைத் தொடர்ந்து பெறுவதற்கு நான் அவரில் நிலைத்திருக்க
வேண்டும். என் வாழ்க்கைச்
சூழ்நிலைகளில் இருந்து மகிழ்ச்சியைப் பெற முயற்சிப்பதற்குப் பதிலாக, நான் கர்த்தருடைய,
மற்றும் அவர் சமுகத்தின் மகிழ்ச்சியினால் நிரப்பப்படுவதற்கு ஆண்டவரை என் முழு இருதயத்தோடும்
தேடவேண்டும். அனைத்தையும் ஆளுகை செய்யும் கர்த்தராகிய ஆண்டவர் என் பெலனும், என் மகிழ்ச்சியின்
ஆதாரமுமாக இருக்கிறார். அவர் தம் இரட்சிப்பின் சந்தோசத்தை எனக்குத் தருகிறார்.
ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, நீர் எனக்குத் தரும் நித்திய மகிழ்ச்சிக்காக உமக்கு நன்றி.
இயேசுவே, என்னில் இருந்து ஒருவரும் எடுத்துப் போட முடியாத உம் இரட்சிப்பின் சந்தோசத்திற்காக
உமக்கு நன்றி. பரிசுத்த ஆவியானவரே, கிறிஸ்துவில் நிலைத்திருக்க உதவி செய்யும் மற்றும்
எல்லா நேரத்திலும் மகிழ்ச்சியாக இருக்க உம் வல்லமையை எனக்குத் தந்தருளும். ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day – 350
No comments:
Post a Comment