வாசிக்க: நாகூம் 1-3; நீதிமொழிகள் 20; வெளிப்படுத்தின விசேஷம் 10
வேத வசனம்: நாகூம் 1: 3. கர்த்தர் நீடிய சாந்தமும், மிகுந்த
வல்லமையுமுள்ளவர்; அவர்களை ஆக்கினையில்லாமல் தப்புவிக்கமாட்டார்; கர்த்தருடைய வழி சுழல்காற்றிலும் பெருங்காற்றிலும் இருக்கிறது; மேகங்கள் அவருடைய பாதத்தூளாயிருக்கிறது.
கவனித்தல்: நமக்கு சங்கடம் தருகிற மற்றும் விருப்பமில்லாத காரியங்களைக்
காட்டிலும், நமக்கு மிகவும் வசதியாக இருக்கிற மற்றும் நமக்கு ஊக்கமளிப்பதாக இருக்கிற
காரியங்களுக்கு அதிக கவனம் கொடுக்க மனிதர்களாகிய நாம் பழகிவிட்டோம். மக்கள் தேவனைப்
பற்றி நினைக்கும்போது, அவர்கள் தேவனைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதுடன் அவர்களுடைய
சிந்தனைகள் தொடர்புடையதாக இருக்கிறது. தேவனைப் பற்றிய விஷயத்தில், மக்கள் அவருடைய வேறு
எந்த தன்மைக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை விட அவருடைய அன்புக்கு அதிக முக்கியத்துவம்
கொடுக்கின்றனர். தேவன் அன்பானவர் மற்றும் அவருடைய் அன்பு நித்தியமானதும், அவரை விட்டு
பிரித்திட முடியாததும் ஆகும் என்பது உண்மைதான். பாவத்திற்கான தேவ தண்டனை பற்றி வாசிக்கும்போதும்,
கேட்கும்போதும், அன்புள்ள தேவன் எப்படி தன் சிருஷ்டிப்பை தண்டிக்க முடியும் என்று
அனேகர் நினைக்கின்றனர். நாம் தேவனைப் பற்றிப் படிக்கும்போது, தவறான கள்ளப் போதகர்கள்
செய்வது போல—ஒரு வசனத்தை தங்கள் வசதிக்கேற்ப தெரிவு செய்து கொண்டு, தேவனுடைய வார்த்தையைப்
பற்றிய தங்கள் தவறான புரிதலின்படி வியாக்கியானம் கொடுப்பது போல—நாம் செய்யக் கூடாது.
இங்கே நாகூமின் வார்த்தைகள் தேவன் மோசேயிடம் யாத்திராகமம் 34:6-7இல் சொன்னவைகளை நினைவுபடுத்துகிறது.
நாகூமின் தீர்க்கதரிசனத்தின்
மையக் கருப்பொருள் நினிவேயின் அழிவைப் பற்றியதாகும். ஆயினும், நாகூம் 1ஆம் அதிகாரமானது தேவனுடைய குணாதிசயங்கள்
மற்றும் வல்லமைப் பற்றி நமக்குச் சொல்கிறது. சில நேரங்களில், தவறு செய்கிறவர்களுக்கு
எதிராக தேவன் ஏன் எதையுமே செய்வதில்லை? ஏன் மக்களின் பாவங்களை தேவன் கண்டும் காணாதவர்
போல இருக்கிறார்? துன்மார்க்கர் ஏன் தொடர்ந்து வளர்ந்து பெருகிறவர்களாக இருக்கிறார்கள்,
ஆனால் நீதிமான்களோ தொடர்ந்து கஷ்டப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள் என மக்கள் முறுமுறுக்கக்
கூடும். இங்கே, நாகூம் 1:3 தேவனுடைய இரண்டு
முக்கியமான குணாதிசயங்களை நமக்கு நினைவுபடுத்துகிறது. “அரை குறை அறிவு ஆபத்தானது”
என்று ஒரு பழமொழி கூறுகிறது. தேவனைப் பற்றிய விஷயத்திலும் இது உண்மை ஆகும். ஆகவே, தேவனைப்
பற்றிய முழுமையான மற்றும் வேதாகமரீதியிலான ஒரு புரிதலைப் பெற, நாம் அனுதினமும் அவரை
அதிகமதிகமாக அறிந்து கொள்ள முயற்சி எடுக்க வேண்டும். தேவன் தம் ஜனங்களை பாதுகாக்க
வல்லவராக இருக்கிறார். அனைவர் மீதும் தம் நீதி நியாயத்தை நிலைநிறுத்த அவர் வல்லவராக
இருக்கிறார். ஒரு பக்கம் மட்டுமே அச்சிடப்பட்ட ஒரு நாணயம் அல்லது ரூபாய் தாள் நம்மிடம்
இருந்தால், அது எதற்கும் பயனற்றதும் செல்லாததுமாக ஆகி விடுகிறது. எனவே, நாம் இன்னும்
அதிகமதிகமாக தேவனை அறிந்து கொள்ளவும், நாம் இதுவரை தேவனைப் பற்றி அறிந்திராத விஷயங்களைப்
பற்றி அறிந்து கொள்ளவும் நம்மை ஆயத்தப்படுத்தி, நாம் தேவனைத் தேட வேண்டும்.
பயன்பாடு: தேவன் என்னிடம் அன்பாக இருந்து என்னைத் தண்டனைக்குத் தப்புவித்து இரட்சித்திருக்கிற
படியால் நான் உயிர்வாழ்கிறேன். தேவன் எல்லோர் மீதும் கோபம் கொள்வாரெனின், ஒருவரும்
உயிர் தப்ப முடியாது. ஆயினும், தேவ கிருபையானது அவர் தம் அன்பில் நமக்குச் செய்தவைகளை
விசுவாசிக்கும் உறுதியை எனக்குத் தருகிறது.
தேவனுடைய அன்பு நான் அவர் அன்பில் நிலைத்திருக்கும்படி என்னை உற்சாகப்படுத்துகிறது.
தேவனுக்குக் கீழ்ப்படியாமல் இருப்பவர்களுக்கு அவர் வைத்திருக்கும் தண்டனையானது தேவனிடம்
திரும்ப வேண்டும் என்ற எச்சரிக்கையைத் தருவதாக இருக்கிறது. மக்கள் தேவனை இன்னும் அதிகமதிகமாக
நேசிக்கும்படி, நான் அவருடைய வார்த்தைக்கு சரியான விதத்தில் விளக்கம் கூற/தர வேண்டும்.
ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, என்னை நிரப்புகிற என்னில் நிரம்பி
வழிகிற உம் கிருபைக்காக உமக்கு நன்றி. கர்த்தாவே, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையில்
நிலைத்து நிற்கவும், அனுதினமும் அவருடைய அன்பைக் கொண்டாடவும் எனக்கு உதவியருளும்.
பரிசுத்த ஆவியானவரே, தேவனுடைய அன்பு மற்றும் அவர் எனக்காக வைத்திருக்கிற திட்டத்தைப்
பற்றிய சத்தியத்தை தேவனுடைய வார்த்தையில் காண்பதற்கு என் கண்களைத் திறந்தருளும்.
ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day – 353
No comments:
Post a Comment