வாசிக்க: செப்பனியா 1-3; நீதிமொழிகள் 22; வெளிப்படுத்தின விசேஷம் 12
வேத வசனம்: நீதிமொழிகள் 22:6. பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.
கவனித்தல்: முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் A.P.J
அப்துல் கலாம் அவர்கள் குழந்தைகள் மற்றும்
மாணவர்களுடன் நேரம் செலவிடுவதை
விரும்பினார். பிள்ளைகள் தங்கள் எதிர்காலத்தைப் பற்றி கனவு
காண வேண்டும் என அவர் ஊக்கமளித்தார், மேலும் "உங்கள் கனவுகள் நனவாகும் முன் நீங்கள் அவைகளைப் பற்றி கனவு காண வேண்டும்" என்று அடிக்கடி
கூறினார். அவரைப் பொறுத்தவரை, “கனவு என்பது நீங்கள் தூங்கும்போது காண்கிற ஒன்று அல்ல; கனவு என்பது உங்களை தூங்க விடாமல் செயல்பட வைக்கிற ஒன்று ஆகும்.” ஆரம்பப்
பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களும், எதிர்காலத்தில் தாங்கள் என்னவாக இருக்க விரும்புகிறோம் என்பதைப் பற்றி உயர்ந்த
லட்சியங்களுடன் ஆர்வத்துடன் பதில் அளிக்கிறார்கள். ஆனால், அவர்களில் மிகச் சிலரே தங்கள் லட்சியத்தில் வெற்றி பெறுகிறார்கள். இதில் பல்வேறு காரணங்கள் உண்டு என்றாலும், எந்த ஒரு காரியத்திலும் வெற்றி பெறுவதற்கு
ஒழுக்கமான வாழ்க்கை அவசியம். நம் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக நாம் அவர்களுக்கு
கற்பித்து பயிற்சி கொடுக்க வேண்டும் என நீதிமொழிகள் 22:6 நமக்குப் போதிக்கிறது.
இன்றைய உலகில், சிறு பிள்ளைகள் தங்கள் பெற்றோருடன் செலவிடும் நேரத்தைக் காட்டிலும்
அதிகமாக பொழுது போக்கு சாதனங்கள் மற்றும் மிண்ணனு உபகரணங்களுடன் அதிக நேரம் செலவழிக்கின்றனர்.
அனேக பெற்றோர் பல உலகப்பிரகாரமான கருத்துக்கள் மற்றும் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தைப்
பற்றிய கனவுகளினால் குழப்பமடைந்து, தங்கள் ஆசைகளை பிள்ளைகள் மீது திணிக்க முயற்சி செய்கிறார்கள்.
கிறிஸ்தவப் பெற்றோராகிய நாம், தேவபக்தியுள்ள போதனையை நம் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுத்து,
அவர்கள் பள்ளிக் கல்வியைப் பெறும் நேரத்தில், தேவனுடைய வார்த்தையைக் கற்றுக் கொள்ள
வைக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. தேவனுடைய நியமங்களின் படி தங்கள் வாழ்க்கையை
வடிவமைத்து அதில் பயிற்சி பெறுவது குழந்தைகளுக்கு எப்பொழுதுமே நல்லது ஆகும். பல்வேறு
காரணங்களுக்காக பல பெற்றோர் தங்கள் குழந்தைகளைக் கண்டித்து திருத்த தயங்குகிறார்கள்.
கிறிஸ்தவ கல்வி நிபுணர் ஹோவர்ட் ஹெண்ட்ரிக்ஸ் பின்வரும் ஞானமுள்ள ஆலோசனையைத் தருகிறார்:
“பிள்ளைகள் உங்களைப் பற்றி இப்பொழுது என்ன நினைக்கிறார்கள் என்பதல்ல, இப்போதிலிருந்து
20 வருடங்கள் கழித்து என்ன நினைப்பார்கள் என்பதே உங்களுடைய முதல் கவலையாக இருக்க வேண்டும்.” அன்பு செய்கிற, நேசிக்கிற பெற்றோர் தங்கள் பிள்ளைகளை
சிட்சிப்பார்கள் என வேதம் கூறுகிறது (எபி.12:5-1). பின்னர் வருத்தப்படுவதைக் காட்டிலும்
, நம் குழந்தைகளை இப்பொழுதே நாம் சிட்சித்து (கண்டித்து) வளர்ப்பது சிறந்தது ஆகும்.
பிள்ளை வளர்ப்பு பற்றி கிடைக்கக் கூடிய எந்தப் புத்தகத்தைக் காட்டிலும் அதிகமாக, பரிசுத்த
வேதாகமமானது அன்பைக் காண்பிக்கவும், அனைவருக்கும் பயனுள்ளவர்களாக இருக்கும்படி வளரவும்
உதவும் பிள்ளை வளர்ப்பு பற்றிய கோட்பாடுகளை உடையதாக இருக்கிறது. ”எந்தச்
சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத்
தரும்” என எபிரேயர் 12:11 சொல்கிறது.
வேதாகமத்திலும் வரலாற்றிலும்
வெற்றிகரமான தேவபக்தியுள்ள பிள்ளை வளர்ப்பு பற்றி அனேக நல்ல உதாரணங்கள் உண்டு. பெற்றோரே
பிள்ளைகளுக்கு முதலாவது ஆசிரியர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் பெற்றோர்களிடம்
இருந்தே முதலாவதாக கற்றுக் கொள்கிறார்கள் என்பதை நாம் பல நேரங்களில் மறந்து விடுகிறோம்.
அனேக கிறிஸ்தவர்கள் நீதிமொழிகள் 22:6ஐ ஒரு வாக்குத்தத்தம் என கருதுகிறார்கள். ஆனால்,
இது நாம் தேவ பக்தியுள்ள வாழ்க்கையை வாழவும், நம் பிள்ளைகளை அதற்கேற்ப பயிற்றுவித்து
வளர்க்கவுமான வேதாகம கோட்ப்பாடு மற்றும் எச்சரிக்கை ஆகும். நம் சபைகளில், மற்றும்
வீடுகளில், நம் பிள்ளைகள் தேவனையும் அவருடைய வார்த்தைகளையும் அறிந்து, அதை உண்மையாகப்
பின்பற்ற நாம் நம்மால் கூடியமட்டும் சிறந்ததைச் செய்ய வேண்டும்.
பயன்பாடு: தேவனுடைய பிள்ளையாக நான் தேவனைப் பின்பற்றி, அவருடைய
ஒழுங்குக்குக் கீழ்ப்படிய வேண்டும். நான் மற்றவர்களுக்கு ஒன்றை சொல்வதற்கு முன்பு,
நான் முறையாக தேவ ஒழுங்குகளை பின்பற்றுகிறவனாக இருக்க வேண்டும். தேவ பக்தியுள்ள ஒழுங்குகள்
தேவ பக்தியுள்ள தலைமுறையை உண்டாக்குகிறது. நான் ஒரு போதும் தேவ பக்திக்கேதுவான பிள்ளை
வளர்ப்பை அற்பமாக எண்ணக் கூடாது. அனைவருக்கும் ஆசீர்வாதமளிக்கும் தெய்வீக ஒழுங்குகளை
நான் பின்பற்றி, பிரசங்கிக்க வேண்டும்.
ஜெபம்: அன்பின் பிதாவே, என்னை ஒழுங்குபடுத்தித் திருத்துகிற உம் அன்பிற்காக நன்றி. கர்த்தாவே, உம் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிகிற, தெய்வீக ஒழுங்குகளில் எங்கள் பிள்ளைகளை வளர்த்தெடுத்து பயிற்சி கொடுக்கும் இருதயத்தை தந்தருளும். பரிசுத்த ஆவியானவரே, தேவ மகிமைக்காக தேவபக்தியுள்ள ஒரு தலைமுறையை எழுப்ப எங்களுக்கு உதவியருளும். ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day – 355
No comments:
Post a Comment