வாசிக்க: 1 நாளாகமம் 27-29; நீதிமொழிகள் 30; அப்போஸ்தலர் 2:14-47
வேத வசனம்: அப்போஸ்தலர் 2: 32. இந்த இயேசுவை தேவன் எழுப்பினார்; இதற்கு நாங்களெல்லாரும் சாட்சிகளாயிருக்கிறோம்.
கவனித்தல்: இயேசுவின் சிலுவை மரணத்திற்கு முன்பு, இயேசுவைப் பின்பற்றும் ஒரு உறுதியான விசுவாசி என்று தன்னைப் பற்றி பேதுரு நினைத்தான்; இயேசுவுக்காக சாகவும் தயாராக இருப்பதாக சொன்னான். ஆயினும், ஒரு முக்கியமான வேளையில், இயேசுவைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று சொல்லி, பேதுரு அவரை மறுதலித்தான் (மத்.26:33, 69-75; மாற்கு.14:29, 66:72; லூக்கா.22:33, 54-62; யோவான்.13:37; 18:15-27) என வாசிக்கிறோம். அப்போஸ்தல நடபடிகள் 2ம் அதிகாரத்தில், இயேசுவின் நற்செய்தி மற்றும் உயிர்த்தெழுதலைப் பற்றி தைரியமாக பேசுகிற, வித்தியாசமான மற்றும் மாற்றமடைந்த பேதுருவை நாம் காண்கிறோம். யூதர்களால் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவை தேவன் மரித்தோரில் இருந்து உயிரோடெழுப்பினார் என்று பயமின்றி பிரசங்கித்தார். பயந்து இயேசுவை மறுதலித்த அதே பேதுரு, “அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக்கூடாதிருந்தது” என்றும், “இந்த இயேசுவை தேவன் எழுப்பினார்” என்றும் தைரியமாகக் கூறினார். சில நாட்களுக்குப் பின், “ஜீவாதிபதியைக் கொலைசெய்தீர்கள்; அவரை தேவன் மரித்தோரிலிருந்தெழுப்பினார்” என்றும் பிரசங்கித்தார் (3:15). இந்த இரு முறையும், இயேசுவுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள, நான் இயேசுவைச் சேர்ந்தவன் என்று சொல்ல அவர் தயங்க வில்லை. மாறாக, நாங்கள் இயேசுவுக்கு சாட்சிகளாயிருக்கிறோம் என்று பகிரங்கமாக அறிவித்தார்.
கிறிஸ்துவுக்கு சாட்சி கொடுத்தல் அல்லது சாட்சியாக இருத்தல் என்பது அப்போஸ்தல நடபடிகள் புத்தகத்தின் ஒரு முக்கியமான கருப்பொருள் ஆகும். அப்போஸ்தலர்களும் ஆதித்திருச்சபையும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு எப்படி சாட்சி கொடுத்தனர் என்பதைப் பற்றி ஒவ்வொரு அதிகாரத்திலும் நாம் பார்க்கலாம். பேதுருவின் வார்த்தையிலும், மற்றவர்களின் வாழ்க்கையிலும் இந்த அதிரடி மாற்றம் உண்டாக காரணம் என்ன? அப்போஸ்தலர் 2:1-4, மேல்வீட்டறையில் கூடியிருந்த பேதுருவும் மற்ற சீடர்களும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டனர். தம் பரமேறுதலுக்கு முன், பிதாவின் வாக்குத்தத்தத்தைப் பெற எருசலேமில் காத்திருக்கும்படி தம் சீடர்களுக்கு இயேசு சொல்லியிருந்தார். மேலும், அவர்கள் பரிசுத்த ஆவியின் பலத்தைப் பெறுவார்கள் என்றும் எருசலேம் துவங்கி உலகத்தின் கடைசி பரியந்தம் தனக்கு சாட்சிகளாக இருப்பார்கள் என்றும் சொல்லி இருந்தார் (அப். 1:4-8). ஒரு வார காலத்திற்கும் அதிகமாக, இயேசு பரமேறிய நாளில் இருந்து பெந்தெகோஸ்தே நாள் மட்டும், பேதுருவும் மற்ற சீடர்களும் (மொத்தத்தில் 120 பேர்) ஜெபத்தில் தரித்திருந்தார்கள். காத்திருந்த அவர்கள் அனைவரும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியின் பலத்தைப் பெற்று இயேசு கிறிஸ்துவின் வல்லமையான சாட்சிகளாக மாறினார்கள். கடந்த காலத்தில், நாம் விரும்பியபடி கர்த்தருக்காக வாழ முடியாமல் நாம் தவறி இருக்கலாம். ஆயினும், நாம் உன்னதத்தில் இருந்து வரும் பலத்தைப் பெறும்போது, தேவன் நம் மூலமாக செய்ய விரும்புகிறதைச் செய்வதற்கான பலத்தை, பரிசுத்த ஆவியானவர் நமக்கு தருகிறார். நாமும் கூட இயேசுவுக்கு சாட்சிகளாக இருக்கிறோம். “பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்” என்று ஆண்டவராகிய இயேசு சொன்னார். நாம் இயேசுவுக்கு சாட்சிகளாக இருக்கிறோமா? நாம் இன்னமும் கூட பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட வேண்டியவர்களாக இருக்கக் கூடும். பேதுருவும் மற்ற சீடர்களும் பெற்றது போல, கர்த்தருக்காக காத்திருக்கும் அனைவரும் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையைப் பெற்றுக் கொள்கிறார்கள்.
பயன்பாடு: உயிர்த்தெழுந்த ஆண்டவராகிய இயேசு இன்றும் கூட அனேகரின் வாழ்க்கையைத் தொட்டு, மாற்றத்தை உண்டு பண்ணுகிறார். அவர் ஒருபோதும் மாறாத ஆண்டவர். இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை மற்றவர்களுக்குப் பகிர்ந்து கொள்ள அவர் என்னைப் பலப்படுத்துகிறார். நான் இயேசுவுக்கு சாட்சியாக இருக்கிறேன்; என்னுடைய பலத்தில் அல்ல, பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினால். உயிர்த்தெழுந்த இயேசு இன்றும் உயிரோடு இருக்கிறார்; அவரே என் ஜீவனின் அதிபதியானவர்.
ஜெபம்: இயேசுவே, என் பலவீனங்களை மேற்கொள்ளவும் நற்செய்தியைப் பிரசங்கிக்கவும் நீர் தருகிற பரிசுத்த ஆவியின் வரத்திற்காக உமக்கு நன்றி. உம் கிருபைக்கு ஒரு சாட்சியாக இருக்க என்னை அழைத்ததற்கு நன்றி. தேவனே, நற்செய்தியைப் பிரசங்கிக்கவும், ஜனங்கள் உம் மன்னிப்பு மற்றும் இரட்சிப்பையும் பெறும்படி வழிநடத்தவும் உம் ஆவியினால் என்னை நிரப்பியருளும். ஆமென்.- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day - 181
No comments:
Post a Comment