Saturday, July 24, 2021

நான் பொல்லாப்புக்குப் பயப்படேன்

வாசிக்க: நெகேமியா 1, 2; சங்கீதம் 23; அப்போஸ்தலர் 16

வேத வசனம் சங்கீதம் 23: 4. நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.

கவனித்தல்: அனேக கிறிஸ்தவர்களுக்கு மிகவும் விருப்பமான சங்கீதங்களில் ஒன்றாக சங்கீதம் 23 பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. “கர்த்தர் என் மேய்ப்பர்” என்று சொல்லவும், அவருடைய வழிநடத்துதலின் கீழ் நடக்கும்போது கிடைக்கும் ஆசீர்வாதங்களைப் பெறவும் நாம் அனைவருமே விரும்புகிறோம். ஆயினும், சங்கீதம் 23ன் மைய வசனமாகிய 4ஆம் வசனம் மற்ற வசனங்களைப் போல் கவனிக்கப்படுவதில்லை. சங்கீதம் 23:1-3 மற்றும் 4-6 வசனங்கள் நாம் பார்க்கக் கூடிய (visible blessings) கர்த்தரின் ஆசீர்வாதங்களைப் பற்றிச் சொல்கையில், நாம் இருளைத் தவிர வேறெதையும் காண முடியாத மரண இருளின் பள்ளத்தாக்கில் நடப்பதைப் பற்றி 4ஆம் வசனம் சொல்கிறது. தேவனுடைய ஆசீர்வாதம் மற்றும் மகிழ்ச்சி நிறைந்த ஒரு நல்ல வாழ்க்கை வேண்டும் என நாம் அனைவருமே விரும்புகிறோம். நம் குழந்தைப் பருவத்தில் இருந்தே, நம் உள்ளார்ந்த பயம் காரணமாக இருளில் நடப்பதை நாம் வெறுக்கிறோம். பிரச்சனைகள் மற்றும் கஷ்டங்களே இல்லாத ஒரு வாழ்க்கை நமக்கு இருக்கும் என்று நம் மேய்ப்பரும், ஆண்டவருமாகிய இயேசு நமக்கு வாக்குப் பண்ண வில்லை (யோவான் 10:11; 16:33). சில சமயங்களில், நாம் எதையுமே சரிவரப் பார்க்க முடியாத கடினமான இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கின் வழியாக நம் வாழ்வில் நாம் செல்ல நேரிடலாம். எல்லோராலும் கைவிடப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டதாக நாம் உணரலாம். நம் வாழ்வின் இப்படிப் பட்ட கடினமான நேரத்தில் தேவன் எங்கே போனார் என்பன போன்ற கேள்விகளை நாம் கேட்கக் கூடும். ”தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்” என்று சங்கீதக்காரன் இங்கு சொல்கிறார். நம் கஷ்டங்களில், தேவனை நாம் பார்த்தாலும், பார்க்காவிட்டாலும், அவர் எப்பொழுதும் நம்முடனே கூட இருக்கிறார். ஆகவே, நாம் இருளைக் குறித்து பயப்படத் தேவை இல்லை. நாம் ஒருவேளை ஆண்டவரைப் பார்க்கக் கூடாமலிருக்கலாம். ஆனால் நாம் அவருடைய தொடுதலையும் வழிநடத்துதலையும் நம் வாழ்வில் மிக இருண்ட காலங்களிலும் உணர்ந்து கொள்ள முடியும். தேவனுடைய பாதுகாப்பு மற்றும் வழிநடத்துதலைக் குறித்து நாம் நிச்சயமான நம்பிக்கையுடன் இருக்கலாம்—அவருடைய கோலும் தடியும் எதிரிகளிடம் இருந்து நம்மைப் பாதுகாத்து, நம் போராட்டங்களில் நம்மை வழிநடத்தி ஆறுதலைத் தந்து நம்மை தேற்றுகிறது. நம் வாழ்வில் நாம் எதைக் குறித்தும் கவலைப்படத் தேவை இல்லை. நாம் கவலைப் படுவதனால் சாதிக்கக் கூடியது என்ன? (மத்.6:27-32). நம் கஷ்ட காலங்களில் கவலைப் படுகிறதற்குப் பதிலாக, நாம் கர்த்தரை நம்ப முடியும். இயேசு நம்மை எல்லா தீங்குக்கும் விலக்கி பாதுகாப்பார்; அவர் நம் ஆத்துமாவை பாதுகாப்பார் ( சங்.121:7).

பயன்பாடு: நான் தேவனுடைய பிரசன்னத்தை என் வாழ்வில் உணர்ந்தாலும் அல்லது உணராவிட்டாலும், அவர் எப்பொழுதும் என்னுடனே கூட இருக்கிறார். நான் மற்றவர்களுடைய உதவியைப் பார்க்க முடியாத கடினமான தருணங்கள் என் வாழ்வில் வரலாம். ஆனால் தேவனோ அவருடைய கோல் மற்றும் தடியினால் என்னை பாதுகாத்து வழி நடத்துகிறார். ஆகவே, நான் பொல்லாப்புக்குப் பயப்படேன். என் வாழ்க்கையின் இருள் சூழ்ந்த பள்ளத்தாக்குகள்  என் வாழ்வில் நான் கடந்து செல்லும் பல இடங்களில் ஒன்றேயன்றி, என் நிரந்தர இடம் அது அல்ல. இயேசுவுடனான என் ஆன்மீகப் பயணத்தில், நான் தேவனுடைய அபரிதமான அன்பையும் வழிநடத்துதலையும் ருசிக்கிற இடங்களாக அவை இருக்கின்றன. மரண இருளின் பள்ளத்தாக்கில் அல்ல,” நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்.”

ஜெபம்: தேவனே, என் மேய்ப்பராக நீர் இருப்பதற்காக உமக்கு நன்றி. கடினமான வேளைகளில் நீர் எனக்குத் தருகிற பாதுகாப்பு மற்றும் வழிநடத்துதலுக்காக உம்மைத் துதிக்கிறேன். ”நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே” நடக்கும்போது, நீர் என் வாழ்வில் இருப்பதுதான் மிகச் சிறந்த ஆசீர்வாதம் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். இயேசுவே, எப்பொழுதும் உம் சத்தத்தைக் கேட்டு அதற்குச் செவி கொடுக்க எனக்கு உதவியருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day - 205

No comments: