Thursday, July 15, 2021

கர்த்தரிடம் திரும்புங்கள்

வாசிக்க: 2 நாளாகமம் 29, 30; சங்கீதம் 14; அப்போஸ்தலர் 11: 1-18

வேத வசனம்:  2 நாளாகமம் 30: 6. அப்படியே ராஜாவும் அவனுடைய பிரபுக்களும் கொடுத்த நிருபங்களை அஞ்சல்காரர் வாங்கி, ராஜாவுடைய கட்டளையின்படியே இஸ்ரவேல் யூதா எங்கும் போய்: இஸ்ரவேல் புத்திரரே, ஆபிரகாம் இஸ்ரவேல் என்பவர்களுடைய தேவனாகிய கர்த்தரிடத்துக்குத் திரும்புங்கள்; அப்பொழுது அசீரியருடைய ராஜாக்களின் கைக்குத் தப்பியிருக்கிற மீதியான உங்களண்டைக்கு அவர் திரும்புவார்.

கவனித்தல்: எசேக்கியா இந்த நிருபங்களை எழுதிய போது, வட திசையில் உள்ள இஸ்ரவேல் அரசு ஏற்கனவே அசீரியர்களிடம் தோற்று அவர்களுடையதாகிவிட்டது; ஒசேயாதான் இஸ்ரவேலின் கடைசி ராஜா. அசீரியா ராஜாவாகிய சல்மனாசார் இஸ்ரவேலர்களை தன் நாட்டிற்கு சிறைபிடித்துச் சென்று, பாபிலோனியர்களை இஸ்ரவேல் தேசத்தில் குடியமர்த்தினான் (2 இராஜா 18:9-11; 17:24). தென் திசையில் உள்ள யூதா ராஜ்யமும் மிகவும் பலவீனமான அரசாக, அசீரியாவிற்கு கப்பம் செலுத்துகிற நாடாக மாறியது ( 2 இராஜா 16:7). இஸ்ரவேலருக்கு ஏன் இப்படி நடந்தது என்பதற்கான காரணத்தை 2 இராஜாக்கள் 17:7-23 மற்றும் 2 இராஜாக்கள் 18:12ல் நாம் காண்கிறோம்—இஸ்ரவேலர்கள் தேவனையும் தேவனுடைய கற்பனைகளையும் நிராகரித்து, விக்கிரகங்களை வணங்கி மற்றும் தேவனை அறியாத புறஜாதியாரின் பழக்க வழக்கங்களைப் பின்பற்றி தேவனுக்கு விரோதமாக பாவம் செய்தார்கள். தேவனுக்குப் பயந்த எசேக்கியா ராஜா பஸ்காவை கொண்டாடுவதற்கு இஸ்ரவேலர்கள் அனைவரையும் கூட்டி,  ஏறக்குறைய 200 ஆண்டுகள் பிரிவுக்குப் பின் இஸ்ரவேலையும் யூதாவையும் ஒன்று சேர்க்க விரும்பினான். தேவனிடம் திரும்புவதுதான் அந்த சமயத்தின் அவசியமான தேவை என்பதை அவன் அறிந்திருந்தான்.

ஆகவே, எசேக்கியா அனைத்து மக்களையும் வரவேற்று, அஞ்சல்காரரை இஸ்ரவேல் மற்றும் யூதா எங்கும் அனுப்பினான். அசீரியர்களின் கைகளுக்குத் தப்பி மீந்திருந்தவர்களை அழைத்து, அவர்களை கர்த்தரிடம் திரும்பவேண்டும் என்றும், தேவன் வாசம் செய்யும் பரிசுத்த ஸ்தலத்திற்கு வரும்படி சவாலை முன் வைத்தான். சில நேரங்களில், எனக்கு ஏன் இந்த அழிவு அல்லது வீழ்ச்சி வந்தது என்று ஜனங்கள் நினைக்கிறார்கள். அப்படிப் பட்ட காலங்களினூடாக நாம் செல்வோமாகில், நாம் தேவனுடன் இருக்கிறோமா அல்லது அவரை விட்டு விலகி இருக்கிறோமா என்று நம்மை நாமே ஆராய்ந்துப் பார்க்க வேண்டும். தேவனிடம் திரும்புதல் தேவனுடைய ஆசீர்வாதங்கள் மற்றும் பாதுகாப்பை நம் வாழ்வில் கொண்டு வருகிறது. வாழ்க்கையைப் பற்றிய பயங்கள், அல்லது பேரழிவுகள், அல்லது வியாதிகளில் இருந்து நாம் தப்பிப் பிழைத்திருக்கக் கூடும். எசேக்கியாவின் செய்தி இன்றும் பொருத்தமானதாக இருக்கிறது. ”இப்போதும் உங்கள் பிதாக்களைப்போல உங்கள் கழுத்தைக் கடினப்படுத்தாதேயுங்கள்; நீங்கள் கர்த்தருக்கு உடன்பட்டு, அவர் சதாகாலத்துக்கும் பரிசுத்தம்பண்ணின அவருடைய பரிசுத்த ஸ்தலத்திற்கு வந்து, உங்கள் தேவனாகிய கர்த்தரைச் சேவியுங்கள்; அப்பொழுது அவருடைய உக்கிரமான கோபம் உங்களைவிட்டுத் திரும்பும்” (வ.8). இது நம் இழப்பைக் குறித்து புலம்புவதற்கான நேரம் அல்ல. மாறாக, தேவனிடம் திரும்பி கீழ்ப்படிதலுடன் அவரை ஆராதிப்பதற்கான நேரம் ஆகும். நம் தேவன் ”கிருபையும் இரக்கமும் உள்ளவர்.” நாம் அவரிடம் திரும்பும் போது, அவர் நம் துன்பங்களை மாற்ற முடியும். நம்மை நாமே நிதானித்தறிந்து, தேவனிடம் நம்மை ஒப்புக் கொடுப்போம்.

பயன்பாடு: இதற்கு முன்பு, நான் தேவனுடைய விடுதலையையும் அற்புதங்களையும் என் வாழ்வில் அனுபவித்திருக்கலாம். ஆயினும், நான் இன்று தேவனுடன் எப்படி வாழ்கிறேன் என்பதை அவர் பார்க்கிறார். நான் தேவனுக்கு கீழ்ப்படிந்து ஆராதிப்பதில் உண்மையுள்ளவனாக இல்லை எனில், ”கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிற” எதிரியை நான் எதிர்கொள்ள நேரிடும் (1 பேதுரு 5:8). என் தேவனோ கிருபையும் இரக்கமும் உள்ளவர். அவரால் என் சிறையிருப்பின் சங்கிலிகளை உடைத்து, என் வாழ்க்கையை திரும்பவும் எடுத்து நிலை நிறுத்த முடியும். நான் தேவனுடன் இல்லை என்பதை உணரும்போது, நான் மனந்திரும்பி, தேவனிடம் திரும்ப வேண்டும். 

ஜெபம்: பிதாவாகிய தேவனே, உம் ஜனங்களை இரட்சிக்கும் உம் அன்புக்காக நன்றி. ஆண்டவரே, இன்றும் என்றும் உமக்கு உண்மையுள்ளவனாக இருக்க எனக்கு உதவும். என் தேவனே, ”நான் எப்பொழுதும் வந்தடையத்தக்கக் கன்மலையாயிரும்.” ஆமென். 

- அற்புதராஜ் சாமுவேல்

+91 9538328573

Day - 196


No comments: