Thursday, July 15, 2021

தேவனுடைய வார்த்தைக்கு மனிதன் கீழ்ப்படிதல்

வாசிக்க: 2 நாளாகமம் 27, 28; சங்கீதம் 13; அப்போஸ்தலர் 10:24-48

வேத வசனம்:  அப்போஸ்தலர் 10: 25. பேதுரு உள்ளே பிரவேசிக்கிறபொழுது, கொர்நேலியு அவனுக்கு எதிர்கொண்டுபோய், அவன் பாதத்தில் விழுந்து, பணிந்துகொண்டான்.
26. பேதுரு அவனைத் தூக்கியெடுத்து: எழுந்திரும், நானும் ஒரு மனுஷன்தான் என்றான்.
27. அவனுடனே பேசிக்கொண்டு, உள்ளேபோய், அநேகர் கூடிவந்திருக்கிறதைக் கண்டு,
28. அவர்களை நோக்கி: அந்நிய ஜாதியானோடே கலந்து அவனிடத்தில் போக்குவரவாயிருப்பது யூதனானவனுக்கு விலக்கப்பட்டிருக்கிறதென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்; அப்படியிருந்தும், எந்த மனுஷனையும் தீட்டுள்ளவனென்றும் அசுத்தனென்றும் நான் சொல்லாதபடிக்கு தேவன் எனக்குக் காண்பித்திருக்கிறார்.
29. ஆகையால் நீங்கள் என்னை அழைப்பித்தபோது நான் எதிர்பேசாமல் வந்தேன். இப்போதும் என்ன காரியத்துக்காக என்னை அழைப்பித்தீர்கள் என்று கேட்கிறேன் என்றான்.

கவனித்தல்: தேவனுடைய தரிசனம் மற்றும் சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து பேதுருவும் கொர்நேலியுவும் சந்தித்தார்கள். இங்கு மூன்று முக்கியமான பாடங்களை நாம் கற்றுக் கொள்கிறோம்: முதியவர்கள், ஆசிரியர்கள் மற்றும் முனிவர்களின் கால்களைத் தொடுதல் என்பது இந்தியாவில் தொன்று தொட்டு இருந்து வரும் பொதுவான ஒரு வழக்கமாக இருக்கிறது. பொதுவாக, இப்படிப்பட்ட கனத்தைப் பெறுகிறவர்கள் மற்றவர்கள் தங்கள் கால்களைத் தொடுவதை அல்லது கால்களில் வீழ்வதை தடுக்க மாட்டார்கள். ஆனால் பேதுருவோ கொர்நேலியுவை உடனே தடுத்து, “நானும் ஒரு மனுஷன்தான்” என்று சொன்னான். தேவனுடைய ஒரு ஊழியக்காரனாக, பேதுரு தான் யார் என்பதை நன்கறிந்திருந்தான். கொர்நேலியுவை அவனுடைய தாழ்மையைப் பாராட்டி பேதுரு புகழ்ந்திருக்கலாம். ஆனால் அவன் அதைச் செய்ய வில்லை. மாறாக பேதுரு தன்னைத் தானே தாழ்த்தினான்.

இரண்டாவதாக, தேவன் தனக்குக் காண்பித்த தரிசனத்தின் அர்த்தம் இன்னதென்று புரிந்து கொண்டான்; எந்த மனுஷனையும் தீட்டுள்ளவனென்றும் அசுத்தனென்றும் அவன் சொல்லக் கூடாது. அனேக கிறிஸ்தவர்கள் நினைப்பது போல, அந்த தரிசனமானது மோசேயின் நியாயப்பிரமாணத்தின் படி தடைசெய்யப்பட்ட உணவுகளை உண்பது பற்றியது அல்ல. மாறாக, அனைவரையும் எவ்வித பாகுபாடுமின்றி ஏற்றுக் கொள்வதைப் பற்றியது ஆகும். இயேசுவைப் பின்பற்றுகிற ஒருவர் மற்றவர்களை தீட்டுள்ளவர் அல்லது அசுத்தமானவர் என்று கருதவே கூடாது. அப்படிப்பட்ட மனிதாபிமானமற்ற பழக்க வழக்கங்களை தேவன் வெறுக்கிறார். “மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்” என்று வேதம் நமக்கு போதிக்கிறது (பிலி.2:3).

மூன்றாவதாக, கொர்நேலியு பேதுருவை சந்திக்க விரும்பிய காரணம் தொடர்பான கேள்வியைக் காண்கிறோம். பேதுரு அதற்கு முன்பு கொர்நேலியுவை சந்தித்ததே இல்லை. ஆண்டவரின் சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து, எந்தக் கேள்வியும் கேட்காமல், பேதுரு கொர்நேலியுவின் வீட்டிற்கு வந்தான். நாம் பேதுருவின் இடத்தில் இருந்திருந்தால், எவ்வளவு கேள்விகளைக் கேட்டிருப்போம்! ”சந்தேகப்படாமல் போ” என்று ஆண்டவர் பேதுருவிடம் சொன்னபோது, அவன் தேவனுடைய வார்த்தையை அப்படியே பின்பற்றினான் (வ.20). கொர்நேலியு பதில் சொன்ன போது, தேவன் பட்சபாதம் உள்ளவர் அல்ல என்றும் தம்மிடம் வருகிற அனைவரையும் ஏற்றுக் கொள்கிறவர் என்பதையும் பேதுரு புரிந்து கொண்டான் (வ.34,35). இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை பேதுரு பிரசங்கித்த போது, கொர்நேலியுவும், செய்தியைக் கேட்ட அனைவரும், பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைப் பெற்றனர். பேதுருவும் கொர்நேலியுவும் கர்த்தரின் தரிசனம் மற்றும் வார்த்தைக்கு தயக்கமின்றி, கேள்வி கேட்காமல் (சந்தேகப்படாமல்) கீழ்ப்படிந்தனர். நாம் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிகிறோமா?

பயன்பாடு: ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவுக்காக நான் வெளியே செல்லும்போது, என் சுய மகிமையை நான் தேடக் கூடாது. நான் என்னைத் தாழ்த்தி, இயேசுவை உயர்த்த வேண்டும். என் வாழ்விலும் ஊழியத்திலும் நான் எவ்வித பாரபட்சமும், பிரிவினை பேதமும் காட்டக் கூடாது. நான் இயேசுவுக்குக் கீழ்ப்படியும்போது, ஜனங்கள் நற்செய்தியைக் கேட்கவும், பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானத்தைப் பெறுகிறதற்கும் ஒரு வாய்ப்பைப் பெறுகிறார்கள். 

ஜெபம்: ஆண்டவராகிய இயேசுவே, அனைவரையும் பாரபட்சமின்றி உம் அன்புடன் நேசிக்க எனக்கு உதவும். பரிசுத்த ஆவியானவரே, தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்படியவும், அதற்கேற்றபடி வாழவும் என்னைப் பலப்படுத்தும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்

+91 9538328573

Day – 195


No comments: