வாசிக்க: 2 நாளாகமம் 21, 22; சங்கீதம் 10; அப்போஸ்தலர் 9:1-19
வேத வசனம்: அப்போஸ்தலர் 9: 10. தமஸ்குவிலே அனனியா என்னும் பேருள்ள ஒரு சீஷன் இருந்தான். அவனுக்குக் கர்த்தர் தரிசனமாகி: அனனியாவே, என்றார். அவன்: ஆண்டவரே, இதோ, அடியேன் என்றான்.
கவனித்தல்: அனனியா என்பது யூதர்கள் நடுவில் ஒரு பொதுவான பெயராக இருந்தது. அனனியா என்றால் “கர்த்தர் கிருபையுள்ளவர்/கிருபையைக் காண்பிக்கிறார்” என்று அர்த்தம். அப்.9:10ன் படி அனனியா தமஸ்குவில் உள்ள இயேசுவின் சீடர்களில் ஒருவர் ஆவார். அனனியா பற்றி நமக்கு அதிகம் தெரியாது. சிலர் அவர் எழுபது சீடர்களில் ஒருவர் (லூக்கா 10) என்றும், அவர் யூத மார்க்க பிரமாணங்களையும் நடைமுறைகளையும் பின்பற்றிய புறஜாதியை சேர்ந்தவர் என்றும் கூறுகின்றனர். பின்னாட்களில், பவுல் அனனியாவைப் பற்றிச் சொல்லும்போது, “வேதப்பிரமாணத்தின்படியே பக்தியுள்ளவனும், அங்கே குடியிருக்கிற சகல யூதராலும் நல்லவனென்று சாட்சிபெற்றவனுமாகிய அனனியா என்னும் ஒருவன்” என்று சொல்கிறார் (அப்.22:12). தன் மனமாற்றத்திற்கு முன்பும் பவுலுக்கு அனனியாவைப் பற்றி எதுவும் தெரியாது. தர்சு பட்டணத்தானாகிய சவுல் என்று ஆண்டவராகிய இயேசு சொன்ன போது, இந்த சவுல் இன்னார் என்றும் சபைக்கு எதிராக அவன் செய்தவைகளையும் அனனியா உடனே நினைவு கூர்ந்தான். ”இதோ அடியேன்” என்று அனனியா முதல் முறை சொன்ன போது, ஆண்டவர் சொல்கிற எதையும் செய்வதற்கு அவன் தயாராக இருந்தான். ஆயினும், அவன் போய் சந்தித்து பார்வை கொடுக்க வேண்டும் என்று ஆண்டவர் சொன்ன நபரைப் பற்றி அறிந்த போது, தன் தயக்கத்தை வெளிப்படுத்தினான். அவனுடைய சந்தேகங்களை ஆண்டவர் தெளிவுபடுத்தி, சவுலைப் பற்றிய தன் சித்தம் இன்னதென்று விளக்கம் கொடுத்த உடனேயே, மறு கேள்வி கேட்காமல் சவுலை நோக்கி அனனியா சென்றான். சவுல் இருந்த இடத்திற்குச் சென்ற அனனியா, அவனிடம் ”சகோதரனாகிய சவுலே, பார்வையடைவாயாக” என்று சொல்லி கிறிஸ்துவின் அன்புடன் அவனை ஏற்றுக் கொண்டான் (அப்.22:13). சவுலின் வாழ்க்கையைப் பற்றிய தேவனுடைய அழைப்பை அனனியா விளக்கிக் கூறி, சவுலை ஞானஸ்நானம் எடுத்துக் கொள்ள வழி நடத்தினான். சபைகளை உபத்திரவப்படுத்தின சவுல் இப்பொழுது உபத்திரவப் பட்டுக் கொண்டிருந்த சபையின் ஒரு உறுப்பினர் ஆக மாறினான்.
அனனியாவின் எளிமையான கீழ்ப்படிதல் ஆதிச்சபையின் ஒரு உறுப்பினராகவும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்காக தன் அப்போஸ்தல ஊழியத்தைப் பற்றிய தரிசனத்தைப் பெறவும் பவுலுக்கு உதவியாக இருந்தது. தேவன் ஒருவரை கிறிஸ்தவராக அழைக்கும்போது, நாம் அவர்களுடைய கடந்த கால வாழ்க்கை மற்றும் வரலாறைப் பார்க்கக் கூடாது. மாறாக, அவர்கள் கிறிஸ்துவின் அன்பையும் தேவனுடைய வார்த்தையையும் ருசிக்கும்படி அவர்களை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அவர்கள் தேவனுக்குக் கீழ்ப்படிந்து கர்த்தருக்குள் வளரும்போது, தேவன் அவர்கள் மூலமாக என்னவெல்லாம் செய்யக் கூடும் என்பதை நாம் பார்க்க வேண்டும். சபைக்கு புதிதாக வருகிறவர்கள் மீது நாம் காண்பிக்கிற அன்பு மற்றும் ஆதரவு கிறிஸ்துவில் நிலைத்திருக்கவும், வளரவும் அவர்களுக்கு உதவும். அனனியாவின் எளிய அன்பான செயல் மற்றும் கீழ்ப்படிதல் நற்செய்தியை புறஜாதியாருக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற சபையின் ஊழியத்திற்கு மிகவும் அதிக பலனளிப்பதாக இருந்தது. ஒருவரின் கடந்த கால வாழ்க்கை மற்றும் தவறான செயல்களை அறிந்த பின்னரும், இயேசுவைப் பின்பற்ற வேண்டு என அவர் விரும்பினால் நாம் அவர்களை ஏற்றுக் கொள்ள ஆயத்தமாக இருக்கிறோமா?
பயன்பாடு: இயேசு ஒருவரை தன் மந்தையில் சேர்த்துக் கொள்ள விரும்பும் போது, நான் தேவனுடைய இரட்சிப்பின் திட்டத்திற்கு தடையாக இருக்கக் கூடாது/இருக்க முடியாது. சபை ஐக்கியத்திலும் தேவனுடைய வார்த்தையிலும் வளர தேவன் எப்படி என்னை ஏற்றுக் கொண்டு உதவினார் என்பதை நான் நினைத்துப் பார்க்க வேண்டும். இயேசுவின் சீடராகிய நான், இயேசுவிடம் வருகிற எவரையும் நான் புறம்பே தள்ள மாட்டேன் (யோவான் 6:37). மாறாக, அவர்கள் தேவனுடைய வார்த்தையில் வளரவும், இயேசு கிறிஸ்துவின் சீடர் ஆகவும் நான் அவர்களுக்கு உதவி செய்வேன்.
ஜெபம்: இயேசுவே, இன்றும் கூட அனேகர் தரிசனங்கள் மற்றும் சொப்பனங்கள் மூலமாக உம்மை அறிந்து கொள்ள உதவுகிறீர் என்பதற்காக உமக்கு நன்றி. ஆண்டவரே, அவர்களை உம் அன்பு, உம் வார்த்தை, மற்றும் சபை ஐக்கியத்தில் பலப்படுத்த என் கண்களையும் இருதயத்தையும் திறந்தருளும். அவர்களும் ஒரு நாள் இயேசுவின் சீடர்களாக மாறுவார்கள். ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day - 192
No comments:
Post a Comment