வாசிக்க: 2 நாளாகமம் 17, 18; சங்கீதம் 8; அப்போஸ்தலர் 8:1-13
வேத வசனம்: சங்கீதம் 8: 3. உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது,
4. மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன்.
கவனித்தல்: இரவு நேரத்தில் நம் கண்களால் எண்ண முடியாத நட்சத்திரங்களை நாம் வானத்தில் காண்கிறோம். நிலாவையும் மின்னும் நட்சத்திரங்களையும் பார்ப்பது சொல்ல முடியாத மகிழ்ச்சியை தந்து, நம் மன அழுத்தத்தைக் குறைக்கிறது. நாம் காணக் கூடிய நிலா, கோள்கள், மற்றும் நட்சத்திரங்கள் இருக்கும் தொலைவு பற்றி கருத்து தெரிவிக்கையில், (நொடிகள் முதல் ஆண்டுகள் வரை) முன்பு இருந்த ஒன்றை தான் நாம் இப்பொழுது பார்க்கிறோம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். உதாரணமாக, ஆல்பா செண்டாரி (Alpha Centauri) நாம் வெறுமனே கண்களால் காணக்கூடியதும் பூமிக்கு மிக அருகில் உள்ளதுமான நட்சத்திரம் ஆகும். ஆனால் இது பூமியில் இருந்து 4 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது (ஒளியின் வேகம் 300000 கி.மீ/செகண்ட்). ஆகவே, நாம் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஆல்பா செண்டாரியைதான் இப்பொழுது பார்க்கிறோம். மிகவும் சிறிதாக தெரிகிற இந்த நட்சத்திரங்கள் உண்மையில் அளவில் மிகவும் பெரிதானவை ஆகும். பிரபஞ்சத்தின் அளவை ஒப்பிடும்போது, நாம் வாழும் இந்த பூமியானது ஒரு சிறிய தூசி ஆகும். இவை அனைத்தும் தேவனுடைய சிருஷ்டிப்பு என வேதம் சொல்கிறது. தேவ சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட மனிதன் எல்லா சிருஷ்டிகளிலும் தனித்துவமானவன்.
மனிதன் மீதான தேவனுடைய நிபந்தனையற்ற அன்பு புரிந்து கொள்ள முடியாததும், மனித அறிவிற்கு அப்பாற்பட்டதும் ஆகும். சிருஷ்டியின் ஆரம்பத்தில் இருந்தே, மனிதர்கள் மீதான தேவ அன்பு வெளிப்படுவதை நாம் காண்கிறோம். பாவம் செய்து வீழ்ச்சியடைந்த ஆதாம் ஏவாளை தேவன் கைவிட்டு விடவில்லை. பாவ உலகை இரட்சிக்க தேவன் தன் ஒரே பேறான மகன் இயேசுவை இந்த உலகத்திற்கு அனுப்பினார். இயேசு கிறிஸ்துவின் பாவ நிவாரண பலி மூலமாக மனிதனுடனான தன் உறவை திரும்பவும் புதுப்பித்து, நிலை நிறுத்தி, இரட்சிப்பையும் நித்திய ஜீவனையும் தேவன் அருள்கிறார். மனிதனின் ஜெபங்களுக்கு தேவன் பதில்கொடுக்கிறார். பலவீனமான மனிதனுக்கு தேவன் அன்பு மற்றும் கரிசனை பாராட்டுவதை நாம் ஒவ்வொரு நாளும் காண முடியும். மனிதனுக்காக தேவன் செய்தவைகளை, செய்து கொண்டிருக்கிறவைகளை, மற்றும் செய்ய வேண்டும் என முன்குறித்து வைத்திருக்கிறவைகளை குறிப்பிடுவதற்கு இடம் போதாது. ” மனுஷனை நீர் ஒரு பொருட்டாக எண்ணுகிறதற்கும், அவன்மேல் சிந்தை வைக்கிறதற்கும், காலைதோறும் அவனை விசாரிக்கிறதற்கும், நிமிஷந்தோறும் அவனைச் சோதிக்கிறதற்கும், அவன் எம்மாத்திரம்?” என்று யோபு ஆச்சரியப்படுகிறார் (யோபு 7:17,18). இவை எல்லாம் சொல்கிறதென்னவெனில், தேவன் அன்பாக இருக்கிறார்; அவர் ஒவ்வொரு மனிதனையும் அளவிளாமல் நேசிக்கிறார். அவருடைய அன்பும் கரிசனையும் எந்த மனித மொழியிலும் விவரிக்க முடியாதவை.
பயன்பாடு: இந்த அகன்ற அகிலத்தில், தேவன் முதல் மனிதனாகிய ஆதாமை பூமியின் மண்ணினாலே உருவாக்கினார் (ஆதி.2:7). ஆகவே, முதல் மனிதனாகிய ஆதாமைப் போல நானும் பூமியின் ஒரு சிறிய தூசியாக, புள்ளியாக இருக்கிறேன். ஆனால், தேவன் என்னை நேசிக்கிறார். நான் தேவனுடைய பிள்ளையாக இருக்கிறேன். அவருடைய குமாரன் இயேசுவின் மூலமாக நான், தேவனுடைய பெரிய குடும்பத்தின் ஒரு உறுப்பினராக இருக்கிறேன். கர்த்தாவேம் “தேவரீருக்கு நிகரானவர் இல்லை; உம்மைத்தவிர வேறே தேவனும் இல்லை ( 1 நாளா.17:20). “கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன். இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன்” (சங்.116:12,13).
ஜெபம்: பரலோகத்தில் இருக்கிற தகப்பனே, நீர் என்னிடம் காண்பிக்கிற அன்பு மற்றும் கரிசனைக்காக உமக்கு நன்றி. உம் அனிபில் நிலைத்திருக்கவும், கிறிஸ்து இயேசுவில் உள்ள கிருபையில் பலப்படவும் எனக்கு உதவியருளும். ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day – 190
No comments:
Post a Comment