Wednesday, July 21, 2021

குணமாக்கும் விசுவாசம்

வாசிக்க: எஸ்றா 3, 4; சங்கீதம் 19; அப்போஸ்தலர் 14:1-18

வேத வசனம்அப்போஸ்தலர் 14: 8. லீஸ்திராவிலே ஒருவன் தன் தாயின் வயிற்றிலிருந்து பிறந்ததுமுதல் சப்பாணியாயிருந்து, ஒருபோதும் நடவாமல், கால்கள் வழங்காதவனாய் உட்கார்ந்து,
9.
பவுல் பேசுகிறதைக் கேட்டுக்கொண்டிருந்தான். அவனைப் பவுல் உற்றுப்பார்த்து, இரட்சிப்புக்கேற்ற விசுவாசம் அவனுக்கு உண்டென்று கண்டு:
10.
நீ எழுந்து காலூன்றி நிமிர்ந்து நில் என்று உரத்த சத்தத்தோடே சொன்னான். உடனே அவன் குதித்தெழுந்து நடந்தான்.

கவனித்தல்:நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்” என்று இயேசு தன் சீடர்களிடம் சொன்னார் (மாற்கு 16:15). இங்கே, லீஸ்திராவின் தெருக்களில் பவுலும் பர்னபாவும் தொடர்ந்து பிரசங்கம் பண்ணி வந்தார்கள் (அப்.14:7). பவுல் தேவனுடைய நற்செய்தியை பிரசங்கித்த போது, பிறவி முதலே நடக்க முடியாமல் இருந்த முடவன் ஒருவன் அவ்வார்த்தையைக் கேட்க கவனம் செலுத்தினான் என்று நாம் இங்கு கண்கிறோம். அவன் எவ்வளவு காலம் அல்லது எத்தனை நாட்கள் பவுல் பேசிய பிரசங்கங்களைக் கேட்டான் என்பது நமக்குத் தெரியாது. ஆயினும், பேதுருவும் யோவானும் முன்பு ஒரு சமயம் செய்தது போல (அப்.3:4), பவுல் அவனை உற்றுப் பார்த்த போது,  இரட்சிப்புக்கேற்ற, குணமாகுதலுக்கு ஏற்ற விசுவாசம் அவனிடம் இருந்ததை பவுல் கண்டார். பவுல் சொன்ன தேவனுடைய வார்த்தைகளைக் கேட்கையில் அந்த சப்பாணியாக இருந்த மனிதன் இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்க ஆரம்பித்திருக்க வேண்டும். பவுலின் அழைப்புக்கு கீழ்ப்படிந்து செயல்பட்ட போது, நடக்க இயலாத அந்த மனிதனின் விசுவாசமானது அனைவரும் பார்க்கக் கூடியதாக மாறியது. தன் வாழ்நாளில் ஒரு முறை கூட நடக்காத அந்த மனிதன் ”குதித்தெழுந்து நடந்தான்” என்பது மிகவும் ஆச்சரியமானது ஆகும். பொதுவாக, ஒரு சில நாட்களுக்கு மேல் ஒருவர் தன் கால்களைப் (கட்டாய ஓய்வு அல்லது மருத்துவ காரணங்களுக்காக படுத்த படுக்கையாக இருந்து) பயன்படுத்தாமல் இருந்தால், அந்த ஆதரவும் இன்றி உடனடியாக நிற்பது என்பது இயலாத ஒரு காரியமாக இருக்கும். ஆனால் இந்த சப்பாணியான மனிதனோ பலவீனத்தின் அறிகுறி எதையும் காட்டாது துள்ளிக் குதித்தான். அற்புதமான ஒரு சுகம்! ஆண்டவராகிய இயேசு பவுலோடும் பர்னபாவோடும் கூட இருந்து கிரியை நடப்பித்து, ஒரு அற்புதத்தினாலே தன் வார்த்தையை உறுதிபடுத்தினார் (மாற்கு 16:20).

இயேசு ஜனங்களை சுகப்படுத்தின போது, அவர் அவர்களின் விசுவாசத்தைக் கண்டு, “உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது” என்று சொன்னார். ஒருவருடைய விசுவாசத்திற்கும் அற்புதங்களைப் பெறுவதற்கும் ஒரு தொடர்பு அல்லது இணைப்பு இருக்கிறது. ஜனங்களுடைய அவிசுவாசத்தின் நிமித்தம் இயேசுவால் அற்புதம் செய்ய முடியாமல் போனது என்று மாற்கு 6:5-6 ல் நாம் வாசிக்கிறோம். தேவன் நம் விசுவாசத்தைப் பார்த்து, அதைக் கனப்படுத்துகிறார். அந்த சப்பாணியாக இருந்த மனிதன் இயேசுவின் நற்செய்தியைக் கேட்ட போது, அது தனக்கானது என்று விசுவாசித்தான். அவன் ஒரு அற்புதம்  வேண்டும் என்று கேட்கவிலை. ஆனால், தேவன் அவனுடைய விசுவாசத்தைக் கண்டு, அவனை சுகப்படுத்தினார். புதிய விசுவாசியொருவர் அற்புதம் அல்லது சுகத்தைப் பெறும்போது, அது அவர்கள் கேட்ட செய்தியை உறுதிப்படுத்துகிறதாகவும், சரியான இடத்தில் தங்களுடைய விசுவாசத்தை வைத்திருக்கிறோம் என்ற நம்பிக்கையையும் அது அவர்களுக்குக் கொடுக்கிறது. குணமாக்கும் விசுவாசத்தைப் பெறுவதற்கு குறுக்கு வழி என்று எதுவும் இல்லை. நாம் தேவனுடைய வார்த்தையை தொடர்ந்து கேட்டு, கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிகிறவர்களாக இருக்க வேண்டும்.

பயன்பாடு:  “தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது” (எபி.4:12). இயேசுவின் வார்த்தைகள், “ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது” (யோவான் 6:63). நான் தேவனுடைய வார்த்தையைக் கேட்டு விசுவாசிக்கும்போது, நான் ஜீவனைப் பெறுகிறேன். தேவனுடைய வார்த்தையானது, அவருடைய நோக்கத்தையும் சித்தத்தையும் என் வாழ்வில் நிறைவேற்றுகிறது. தேவன் மீதும் அவருடைய வார்த்தையின் மீதும் உள்ள என் விசுவாசம் ஒரு போதும் வீணல்ல.

ஜெபம்: இயேசுவே, இன்றைக்கும் ஜீவனும் வல்ல்லமையும் உள்ளதாக இருக்கிற உம் வார்த்தைகளுக்காக உமக்கு நன்றி. ஆண்டவரே, உம் வார்த்தையை நான் கேட்கும்போது களிகூரவும் விசுவாசிக்கவும் எனக்கு உதவும். இன்றும் எப்பொழுதும், உம் வார்த்தைக்கு செவி கொடுத்து, என் வாழ்வில் அதை நடைமுறைப் படுத்த எனக்கு உதவியருளும். ஆமென்

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day - 201

No comments: