Sunday, July 11, 2021

என்ன செய்வெதென்று தெரியாதபோது என்ன செய்ய வேண்டும்?

வாசிக்க: 2 நாளாகமம் 19, 20; சங்கீதம் 9; அப்போஸ்தலர் 8:14-40

வேத வசனம்: 2 நாளாகமம் 20: 12. எங்கள் தேவனே, அவர்களை நீர் நியாயந்தீர்க்கமாட்டீரோ? எங்களுக்கு விரோதமாக வந்த இந்த ஏராளமான கூட்டத்திற்கு முன்பாக நிற்க எங்களுக்குப் பெலனில்லை; நாங்கள் செய்யவேண்டியது இன்னதென்று எங்களுக்குத் தெரியவில்லை; ஆகையால் எங்கள் கண்கள் உம்மையே நோக்கிக்கொண்டிருக்கிறது என்றான்.

கவனித்தல்: முன்பு நடந்த யுத்தத்தில் யோசபாத் மரணத்தின் விளிம்பில் இருந்து, கர்த்தர் அவனைக் காப்பாற்றியதால் தப்பித்திருந்தார் (2 நாளா.18:31).ஒரு சிறிய இராணுவத்துடன் போர்செய்ய வருகிற பெரிய படையைப் பற்றிய மற்றுமொரு சம்பவத்தை நாம் வாசிக்கிறோம். படைபலம் இன்னதென்று ஆசிரியர் குறிப்பிடவில்லை என்றாலும், யோசபாத்தின் பயம் மற்றும் அவசரமான ஜெபமும் எதிரியின் சேனையானது அவனுடையதை விட வலிமையானது என்பதை உணர்த்துகிறது.  எதிரிகளின் படையானது எருசலேமுக்கு மிகவும் அருகில் வந்துவிட்டதை அறிந்த படியால், யோசபாத் மிகவும் கவலைப்பட்டிருக்க வேண்டும். ஒரு இராஜாவாக, தன் படைகளை திரட்டி, அந்த அவசரகால நிலைமையை சமாளிப்பது எப்படி என்று திட்டமிட அவன் எதையாவது செய்ய வேண்டும். ஆயினும், தேவனுடைய ஆளுகையின் கீழ் அரசாளுகிற ஒரு ராஜாவாக, யோசபாத் தன் தேசமெங்கும் உபவாசத்தை அறிவித்தான். யோசபாத்தும் “யூதா ஜனங்கள் கர்த்தரிடத்திலே சகாயந்தேடக் கூடினார்கள். தன் ஜெபத்தில், அவன் தேவனுடைய வாக்குத்தத்தத்தை நினைவுகூர்ந்து, அவனுக்கு எதிராக வந்த பலம் வாய்ந்த எதிரிகளை எதிர்கொள்ள தனக்குப் பலம் இல்லை என்று வெளிப்படையாக அறிக்கை செய்தான். ஒரு பலவீனமான ஒப்புதல் வாக்குமூலத்துடன் தன் ஜெபத்தை நிறைவு செய்யாமல், தேவன் மேல் உள்ள நம்பிக்கையுடன் ஜெபத்தை முடித்தான்—“நாங்கள் செய்யவேண்டியது இன்னதென்று எங்களுக்குத் தெரியவில்லை; ஆகையால் எங்கள் கண்கள் உம்மையே நோக்கிக்கொண்டிருக்கிறது.”


நாம் தேவன் மீது நம் முழு நம்பிக்கையையும் வைக்கும்போது, அப்படிப்பட்ட ஜெபங்களுக்கு தேவன் பதில் தருகிறார். பயப்படாதிருங்கள் என்று உடனே ஆறுதல் படுத்தின கர்த்தர், “இந்த யுத்தம் உங்களுடையதல்ல, தேவனுடையது” (வ.15). கர்த்தர் அவர்களுக்காக யுத்தம் செய்வார் என்று சொல்லி இருந்தாலும், அவர்கள் யுத்த களத்திற்கு செல்ல வேண்டியதாக இருந்தது (2 நாளா.20:17). அடுத்த நாள் காலையில், ஜனங்கள் தேவனிடத்தில் நம்பிக்கையாக இருக்கும்படி உற்சாகப்படுத்தின யோசபாத், தன் சேனைக்கு முன்பாக நடந்து சென்று “கர்த்தரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றும் உள்ளது” என்று பாடும்படி பாடகர்களை ஏற்படுத்தினான். ஒரு இராணுவம் யுத்தத்திற்குச் செல்லும்போது, ஒரு பாடகர் குழுவானது தேவனைத் துதிக்கும் பாடல்களினால் முழு இராணுவத்திற்கும் முன்பாக சென்று தலைமை வகித்து செல்வது என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. ஆயினும், “அவர்கள் பாடித் துதிசெய்யத் தொடங்கினபோது,” ஒரு எதிர்பாராத சம்பவம் எதிரிகளிடையே நடந்தது. குழப்பத்தில் (நியா.7:22), எதிரிகள் ஒருவரை ஒருவர் தாக்கி அழித்து கொன்று போட்டனர், ஒருவரும் உயிருடன் தப்பவில்லை. நான்கு நாட்களுக்குப் பின், யோசபாத்தும் யூதா ஜனங்களும் பெராக்கா பள்ளத்தாக்கில்-தேவனை துதிக்கும் ஆசீர்வாத பள்ளத்தாக்கில்-மறுபடியும் கூடி தேவனை துதித்தனர். என்ன செய்வதென்று தெரியவில்லையே என சிந்திக்க வைக்கும் எதிர்பாராத சூழ்நிலைகளை நாம் எதிர்கொள்ள நேரிடும்போது, நாம் நம் கண்களை தேவன் மீது வைக்க வேண்டும். நம் வாழ்வில் நாம் காணும் மலைபோன்ற பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கான நம் இயலாமைகளையும் பலவீனங்களையும் தேவனிடம் அறிக்கை செய்யும்போது, அவர்களை ஜெயிக்கத் தேவையான பலத்தை தேவன் நமக்குத் தருகிறார். நாம் தேவனை எக்காலத்திலும் நம்பலாம்; அவர் நம் வாழ்க்கையை அவரைப் புகழ்ந்து பாடும் துதிப் பாடல்களால் நிரப்புகிறார்.

பயன்பாடு: என்னால் சமாளிக்க முடியாத மிகவும் பலம் வாய்ந்த எதிரிகளை அல்லது கடினமான சூழ்நிலைகளை நான் எதிர்கொள்ள நேரிடும்போது, தேவன் எனக்காக யுத்தம் செய்கிறார். என்ன செய்வது என்று எனக்குத் தெரியாத போது, நான் தேவனுடைய உதவியை நாடி, அவரை நான் நோக்கிப் பார்க்க வேண்டும். ” வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்.” என் பிரச்சனைகளை தேவன் எவ்வாறு சரிசெய்கிறார் என்பது ஆராய்ந்து முடியாததும், விளக்க முடியாததும் ஆகும். நான் செய்யக் கூடியதெல்லாம் என்னவெனில், “கர்த்தரின் கிருபை என்றும் உள்ளது” என்று பாடி அவரை துதிப்பதுதான். 

ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, உம் உதவியைத் தேடவும், உம்மைத் துதிக்கவும் நினைவுபடுத்துகிறதற்காக நன்றி. ஆண்டவரே, எப்பொழுதும் உம்மை நான் நோக்கிப் பார்க்கவும், உம்மை நம்பவும் எனக்கு உதவியருளும். தேவனாகிய கர்த்தாவே, நீரே என் நம்பிக்கை. உம் கிருபை இன்றும் என்றும் உள்ளது. ஆமென். 

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

DAY-191

No comments: