வாசிக்க: 2 நாளாகமம் 9, 10; சங்கீதம் 4; அப்போஸ்தலர் 5:22-42
வேத வசனம்: சங்கீதம் 4: 6. எங்களுக்கு நன்மை காண்பிப்பவன் யார் என்று சொல்லுகிறவர்கள் அநேகர்; கர்த்தாவே, உம்முடைய முகத்தின் ஒளியை எங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணும்.
7. அவர்களுக்குத் தானியமும் திராட்சரசமும் பெருகியிருக்கிறகாலத்தின் சந்தோஷத்தைப்பார்க்கிலும், அதிக சந்தோஷத்தை என் இருதயத்தில் தந்தீர்.
8. சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரைசெய்வேன்; கர்த்தாவே, நீர் ஒருவரே என்னைச் சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர்.
கவனித்தல்: நிலையில்லாத இந்த உலகில், பலர் சொல்வது போல, “மாற்றம் ஒன்றே மாறாததாக இருக்கிறது.” பொதுவாக, மனித வாழ்வானது நாளைய தினத்தைக் குறித்த அல்லது எதிர்காலத்தைக் குறித்த பல கேள்விகள் நிறைந்து காணப்படுகிறது. தொடர்ச்சியான பிரச்சனைகள் மற்றும் முடிவில்லாத போராட்டங்களினால் பலர் சோர்ந்து போய்விடுகிறார்கள். வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மையானது அனேகருடைய உள்ளான பயத்தை அதிகரித்து, அவர்களுடைய மகிழ்ச்சி மற்றும் சமாதானத்தை அவர்களிடம் இருந்து பறித்துக் கொள்கிறது. தாவீது தன் எதிரிகளையும் வாழ்க்கையின் அச்சுறுத்தும் கேள்விகளையும் எதிர்கொண்ட கடினமான மற்றும் வேதனையான சூழ்நிலைகளில் அனேக சங்கீதங்களை எழுதினார். தாவீதின் வாழ்வில் அப்படிப்பட்ட ஒரு வேதனையான தருணத்தில் தான் சங்கீதம் 4 எழுதப்பட்டிருக்க வேண்டும். வாழ்க்கையின் கடினமான கேள்விகளை தாவீது எதிர்கொண்ட போது, “கர்த்தாவே, உம்முடைய முகத்தின் ஒளியை எங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணும்” என்று சொன்னார். ஆசாரியனுடைய ஆசீர்வாதத்தை நினைவு படுத்துகிறதாக இது இருக்கிறது (எண்.6: 25,26). உலகப்பிரகாரமான தன் பயங்கள், கவலைகள், மற்றும் பாதுகாப்பின்மையை வெளிப்படுத்துவதற்குப் பதிலாக, தாவீது கர்த்தருக்குள் தனக்கு இருந்த நம்பிக்கையைப் பற்றிப் பேசுகிறார். தாவீதின் வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் உண்மையானவை, அவை கற்பனையானவை அல்ல. அனேகர் தாவீதின் தலைமைத்துவம் மற்றும் எதிர்காலம் குறித்து கேள்வி எழுப்பி இருப்பார்கள். தாவீதின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கூட அவனுக்கு எதிராக இருந்தனர். ஆயினும், கர்த்தருக்குள் அவன் அனுபவித்த மகிழ்ச்சி, நிறைவு, சமாதானம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை அவை எதுவும் தடுத்து நிறுத்த முடிய வில்லை. கர்த்தரிடம் இருந்து தாவீது பெற்ற எல்லா நன்மைகள் மற்றும் ஆசீர்வாதங்களுக்கு—தேவனுடைய நன்மை, தயை, மகிமை, பாதுகாப்பு, அறுவடையின் ஆசீர்வாதம், பலம், மற்றும் அனைத்து நன்மைகள் (சங்கீதம் 34:10, 84:11; 85:12; 103:5; 107:8)—அனேக சங்கீதங்கள் சாட்சி பகர்கின்றன . இந்த ஆசீர்வாதங்களைத் தவிர, வேறென்ன ஆசீர்வாதம் ஒருவருக்கு தேவை! நாம் தேவனுடன் நடக்கும்போது, இயேசுவை விசுவாசிக்கும்போது, அவரே எல்லாம் என்று நம்பும்போது, நிலையற்ற தன்மைகளை, பயங்களை, மற்றும் அச்சுறுத்தும் கேள்விகளை எதிர்கொள்ள நேரிடலாம். ஆனால், மனிதனால் புரிந்து கொள்ள முடியாத மகிழ்ச்சியினாலும் சமாதானத்தினாலும் தேவன் நம் இருதயங்களை நிரப்புகிறார். தேவனுக்குள், நமக்கு சமாதானமும் பாதுகாப்பும் உண்டு. நம் அமைதியான இரவு நேர தூக்கத்தை எதுவும், எவரும் தடுத்து நிறுத்த முடியாது. தேவன் மட்டுமே இச்சமாதானத்தையும் பாதுகாப்பையும் தர முடியும்.
பயன்பாடு: “சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது” என்று வேதம் சொல்கிறது (சங்.34:10). தேவன் எனக்கென முன்குறித்த எல்லா நன்மைகளையும் எனக்குக் காண்பிக்கிறார்/தருகிறார். நான் அழுகையின் மற்றும் துக்கத்தின் பள்ளத்தாக்கின் வழியாக நடந்து செல்ல நேர்ந்தாலும், நான் எனக்குள் தேவனுடைய சமாதானத்தை கண்டுணர முடியும். என் வெளிப்பிரகாரமான காரியங்கள் கர்த்தருக்குள் எனக்கிருக்கிற என் உள்ளான மகிழ்ச்சி, அமைதி, மற்றும் பாதுகாப்பை பாதிக்காது/பாதிக்க முடியாது. எல்லா சூழ்நிலையிலும் தேவனுடைய முகம் என்னில் பிரகாசிக்கும்படி நான் அவரையே தேடுகிறேன்.
ஜெபம்: என் தேவனே, நீர் நல்லவர், உம் கிருபை என்றுமுள்ளது. நான் எந்த சூழ்நிலையிலும் எப்பொழுதும் உம்மை நம்ப முடியும். அனுதினமும் நீர் எனக்குத் தருகிற அதிக மகிழ்ச்சி, மன அமைதி, மற்றும் பரிபூரண பாதுகாப்பு ஆகியவற்றிற்காக உமக்கு நன்றி. உமக்குள்ளான என் வாழ்க்கையானது உம் ஆசீர்வாதங்களினால் பாதுகாக்கப்பட்டிருகிறது. என் பிரச்சனைகளும் கஷ்டங்களும் நிரந்தரமானவை அல்ல. ஆனால், “இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.” இயேசுவே, உம் சமாதானத்தை அனுதினமும் பெற்றனுபவிக்க எனக்கு உதவியருளும். ஆமென்.- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day - 186
No comments:
Post a Comment