வாசிக்க: 2 நாளாகமம் 13, 14; சங்கீதம் 6; அப்போஸ்தலர் 7:1-36
வேத வசனம்: 2 நாளாகமம் 14: 11. ஆசா தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: கர்த்தாவே, பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசான காரியம்; எங்கள் தேவனாகிய கர்த்தாவே, எங்களுக்குத் துணைநில்லும்; உம்மைச் சார்ந்து உம்முடைய நாமத்தில் ஏராளமான இந்தக் கூட்டத்திற்கு எதிராக வந்தோம்; கர்த்தாவே, நீர் எங்கள் தேவன்; மனுஷன் உம்மை மேற்கொள்ளவிடாதேயும் என்றான்.
கவனித்தல்: பலம் பொருந்திய வலிமையான இராணுவத்திற்கும் சிறிய பலவீனமான இராணுவத்திற்கும் இடையேயான போர்கள் என்பது வேதாகமத்தை வாசிக்கும் அனைவருக்கும் பரிச்சயமான ஒரு காட்சி ஆகும். வலிமையான சேனை தங்களுடைய படைபலத்தை நம்புகையில், சிறிய ஆனால் தேவனை நம்புகிற சேனை தன் எதிரியை எதிர்கொள்ள தேவனைச் சார்ந்து இருக்கிறது. 2 நாளாகமம் 14 இல், இதற்கு ஒத்ததாக இருக்கிற ஒரு காட்சியை, ஆசா ஒரு சக்திவாய்ந்த பெரிய சேனைக்கு எதிராகப் போரிடச் சென்றதை நாம் பார்க்கிறோம். மூன்றாவது யூத ராஜாவான ஆசா, தாவீதைப் போல, தேவனைச் சேவிப்பதில், “தன் தேவனாகிய கர்த்தரின் பார்வைக்கு நன்மையும் செம்மையுமானதை” செய்ததற்காக நன்கறியப்பட்டவராக இருந்தார். ஆயினும், அவருடைய படையின் பலம் பலவீனமானதாக இருந்தது; அது எதிர் சேனையின் படைபலத்திற்கு இணையானதாக இல்லை. தேவனுடைய உதவியை ஆசா தேடியபோது, தேவன் தன்னுடன் இருக்கிறார் என்பதையும், அவரைப் போல உதவி செய்பவர் வேறு எவரும் இல்லை என்பதையும் அவர் அறிந்திருந்தார். “பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசான காரியம்” என்று அவர் அறிக்கை செய்தார். ஆகவே, ஆசா தன் உறுதியான நம்பிக்கையையும் தேவனைச் சார்ந்து இருப்பதையும் வெளிப்படுத்துகிறார். ஆசா தன் எதிரிகளின் வலிமையைப் பற்றி அறிந்திருந்ததைக் காட்டிலும், தேவனுடைய வல்லமையைப் பற்றி நன்கறிந்திருந்தார் என தோன்றுகிறது. தேவன் மீது தன் விசுவாசத்தை வைத்த ஒரு அரசராக, அந்த யுத்தத்தை அழிந்து போகிற மனிதனுக்கும் தேவனுக்கும் இடையே நடக்கிற ஒரு யுத்தமாக அவர் மாற்றினார். தேவன் அனைவருக்கும் உதவ விரும்புகிறார். ஆயினும், தேவன் முன்பாக தன் பலவீனங்களையும் இயலாமைகளையும் உணர்ந்து கொள்கிற மனிதனே தேவனுடைய உடனடி உதவியைப் பெற்றுக் கொள்கிறார். எதிரிகளின் திரளான பெரிய சேனையானது தேவனைச் சார்ந்து இருந்த யூத சேனைக்கு முன்பாக நிற்க முடியவில்லை; எதிரிகள் “கர்த்தருக்கும் அவருடைய சேனைக்கும் முன்பாக நொறுங்கிப்போனார்கள்.”
நம் வாழ்வில், பண்டைய காலத்தில் இருந்த வலிமையான சேனைகளைப் போன்ற எதிரிகள் நமக்கு இல்லாமல் இருக்கலாம். ஆயினும், உலகில் பல இடங்களில் மற்றும் நிலைகளில் நமக்கு போராட்டங்க இருக்கத்தான் செய்கின்றது. மற்றவர்களுடன் ஒப்பிடும்போது, நாம் பலவீனமானவர்கள், வலிமையற்றவர்கள் என்பதாக நாம் நினைக்கக் கூடும். ஆயினும், நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்தை ஏற்கனவே ஜெயித்து விட்டார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் (யோவான்.16:33). பலனற்றவனுக்கு உதவி செய்கிறதும், பலவீனரைப் பாதுகாக்கிறதும் தேவனுக்கு மிகவும் லேசான காரியம் ஆகும். நாம் நம் நம்பிக்கையை தேவன் மீது வைக்கும்போது, தேவனுடைய நாமத்தில் எதிரிகளை எதிர்கொள்ளும்போது, தேவனைச் சார்ந்து இருக்கும்போது, “உம்மைப் போல் யாருண்டு” என்று நாமும் கூட பாட முடியும். நம் விசுவாச வாழ்வில், பொல்லாங்கனுக்கு எதிர்த்து நிற்பதற்கு தேவனைப் பற்றிய நம் அறிக்கையானது ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. நாம் தேவனைப் பாடி, அவரை தியானிக்கும்போது, நம் வாழ்வில் தேவன் தரும் வெற்றிகளைக் காண்போம். நம் எல்லைக்கு மிஞ்சினதாகத் தோன்றுகிற ஒரு சூழ்நிலை குறித்து நாம் கவலைப் பட தேவை இல்லை. பலவீனரைத் தாங்கி, பலமற்றவர்களுக்கு வல்லமையைத் தருகிற தேவனைச் சார்ந்து நாம் வாழ முடியும்.
பயன்பாடு: நான் பெரிதாகத் தோன்றுகிற பிரச்சனைகளையும் சவால்களையும் எதிர்கொள்ளும்போது, நான் பலவீனன் மற்றும் பலமில்லாதவன் என நினைக்கும்போது, எனக்கு உதவி வராதா என்று சுற்றும் முற்றும் பார்ப்பதற்குப் பதிலாக, நான் உடனே தேவனை நோக்கிச் செல்ல வேண்டும். என் தேவன் பலவீனரைக் குறித்து கரிசனை உள்ளவராக இருக்கிறார். தங்கள் பலவீனங்களையும் இயலாமையையும் அறிக்கை செய்து, தேவனுடைய இரட்சிப்பின் வல்லமையை ஒப்புக் கொள்கிறவர்களுக்கு தேவன் வல்லமையைக் கொடுக்கிறார். அவரைப் போல வேறு எவரும் இல்லை. நான் அவரை எப்பொழுதும் நம்ப முடியும். அவர் ஒருபோதும் என்னைக் கைவிடுவதில்லை.
ஜெபம்: கர்த்தராகிய தேவனே, எங்கள் அவசர அழைப்புகளுக்குப் பதில்கொடுத்து, ஆபத்துகளில் இருந்து பாதுகாப்பதற்காக உமக்கு நன்றி. நான் பலவீனனாக, வலிமையற்றவனாக இருக்கலாம். ஆனால் ஆண்டவரே நீர் என்னைத் தாங்கி பாதுகாக்கிறவராக இருக்கிறீர். நான் உம்மைச் சார்ந்து இருக்கிறேன். கர்த்தாவே, உம் நாமத்தில், நான் வெற்றிகளைக் கண்டு, எதிரிகளை ஜெயிப்பேன். ஆமென்.- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day - 188
No comments:
Post a Comment