வாசிக்க: 2 நாளாகமம் 3, 4; சங்கீதம் 1; அப்போஸ்தலர் 4:1-22
வேத வசனம்: அப்போஸ்தலர் 4: 13 பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு, அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் பேதைமையுள்ளவர்களென்றும் அறிந்தபடியினால் ஆச்சரியப்பட்டு, அவர்கள் இயேசுவுடனேகூட இருந்தவர்களென்றும் அறிந்துகொண்டார்கள்.
கவனித்தல்: இயேசு கிறிஸ்துவின் மேல் விசுவாசம் வைக்கும்படி அனேகரை கவர்ந்திழுத்த அப்போஸ்தலர்களின் செய்தி பரவுவதைத் தடுக்க வேண்டும் என யூத அதிகாரிகள், மூப்பர்கள் மற்றும் வேதபாரகர்கள் விரும்பினர். தேவாலயத்தின் அலங்கார வாசல் அருகே அமர்ந்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்த பிறவி சப்பாணி அல்லது முடவன் அற்புத சுகம் பெற்றதை அவர்களால் மறுக்க இயலாதிருந்தது. அவர்கள் விசுவாசிகளின் எண்ணிக்கைப் பெருகினதைக் குறித்தும், அப்போஸ்தலரின் செய்தி பரவுவதைக் குறித்தும் கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போஸ்தலர்கள் இயேசுவைப் பற்றி பிரசங்கிப்பதை தடுத்து நிறுத்துவது எப்படி என ஆலோசித்துக் கொண்டிருந்தார்கள். அதிகாரிகளும் மூப்பர்களும் பேதுரு ஆவியினால் நிறைந்து பேசுவதைக் கேட்ட போது, அவர்களை ஆச்சரியப்படுத்தின ஒன்றை அவர்கள் கண்டுகொண்டனர்: அப்போஸ்தலர்கள் யூத ரபிமார்களின் கீழ் கற்றவர்கள் அல்ல, அவர்கள் மிகவும் எளிய மற்றும் சாதாரணமான மனிதர்கள். முக்கியமாக, அப்போஸ்தலர்கள் இயேசுவுடனே கூட இருந்தவர்கள் என்ற உண்மையை கண்டு கொண்டார்கள். அப்போஸ்தலர்களின் பேச்சு, அவர்கள் பதில் சொன்ன விதம், மற்றும் அவர்களுடைய தைரியம் ஆகியவை யூத அதிகாரிகளுக்கு இயேசுவை நினைவு படுத்தி இருக்க வேண்டும்.
“வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை,” ஆனால் இயேசு என்னிடம் உண்டு என்று பேதுரு ஏற்கனவே சொல்லி இருந்தார். அப்போஸ்தலர்கள் தங்களைப் பற்றி பெருமையாக பேசிக் கொள்ள எவ்வித முறையான கல்வியறிவு மற்றும் பொருளாதார வசதி அவர்களிடம் இல்லை. அவர்களிடம் இருந்தது எல்லாம், “இயேசு” மாத்திரமே. இயேசுவின் மேல் உள்ள விசுவாசத்தின்படி அவர்கள் வாழ்ந்து பேசிய போது, அவர்கள் இயேசுவுடன் இருந்தவர்கள் என்பது மற்றவர்கள் காணக்கூடியதாக இருந்தது. இயேசுவைப் பற்றி அவர்கள் பிரசங்கிப்பதை தடுத்து நிறுத்துவதற்கு வழி தெரியாமல் யூத அதிகாரிகள் திகைத்து நின்றனர். ஆலோசனை சங்கத்தின் அச்சுறுத்தல் மற்றும் கட்டளைகள் அப்போஸ்தலர்களை தடுத்து நிறுத்த முடியவில்லை. அவர்கள் மனித அச்சுறுத்தல்களுக்கு செவிகொடுப்பதைக் காட்டிலும் தேவனுக்கு கீழ்ப்படிவதை தெரிந்து கொண்டார்கள். ஆகவே அவர்கள் “நாங்கள் கண்டவைகளையும் கேட்டவைகளையும் பேசாமலிருக்கக்கூடாதே என்றார்கள்” (வ.20). இயேசுவைப் பற்றி பேச, மற்றவர்கள் அவரை விசுவாசிக்கும்படி செய்ய வேண்டும் எனில், முறையான (இறையியல்) கல்வி, ஊழிய பயிற்சி, மற்றும் உலகச் செல்வங்களை உடையவர்களாக இருப்பதைக் காட்டிலும், நாம் இயேசுவுடன் இருப்பது மிகவும் அவசியமானதாகும். ஜனங்கள் நம்மைப் பார்க்கும்போது, நம் சொல்லும் செயலும் அவர்களுக்கு இயேசுவை நினைவுபடுத்த வேண்டும். நாம் இயேசுவுடன் இருந்தால், நம்மால் சும்மா இருக்க முடியாது. நாம் இயேசுவுக்காக எதையாகிலும் செய்கிறவர்களாக இருப்போம். இயேசுவில் நாம் காண்கிற, கேட்கிற மற்றும் ருசிக்கிறவைகளைப் பற்றி இந்த உலகத்திற்கு சாட்சி கொடுப்போம். நம் வாழ்க்கை இயேசுவுக்கு சாட்சியாக இருக்கிறதா?
பயன்பாடு: இயேசுவைப் பின்பற்றுகிற/விசுவாசிக்கிற என்னிடம் (உலக செல்வத்தைக் குறிக்கும்) பொன்னும் வெள்ளியும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் எனக்குள் இயேசு இருக்கிறார். என் வார்த்தைகளும் செயல்களும் இயேசுவைப் பிரதிபலிக்கும்போது, ஜனங்கள் நான் இயேசுவைச் சேர்ந்தவன் என்பதை அறிந்து கொள்வதுடன், அவரை அறிந்து கொள்ளும் வாய்ப்பையும் பெறுகிறார்கள். இயேசுவைப் பற்றி பேசுவதற்கு உலகம் விதிக்கும் தடைகளைப் பற்றி கவலைப்படுவதற்குப் பதிலாக, நான் தேவனுக்குச் செவி கொடுப்பதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். நான் எந்தச் சூழ்நிலையிலும், என் பேச்சிலும் செயலிலும் இயேசுவுக்கு சாட்சியாக இருக்க விரும்புகிறேன்.
ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உம் அன்பு, கிருபை மற்றும் சத்தியத்திற்கு சாட்சி பகரும்படி நீர் எப்பொழுதும் என்னுடன் இருப்பதற்காக உமக்கு நன்றி. பரிசுத்த ஆவியானவரே, ஜனங்கள் இயேசுவை அறிந்து கொள்ளும்படி, நான் ஆவியில் நிரம்பி பேச உம் பலத்தை எனக்குத் தந்தருளும். ஆமென்.+91 9538328573
Day - 183
No comments:
Post a Comment