Monday, July 12, 2021

தபீத்தாளே! விழித்துக் கொள்!

வாசிக்க: 2 நாளாகமம் 23, 24; சங்கீதம் 11; அப்போஸ்தலர் 9:20-43

வேத வசனம்: அப்போஸ்தலர் 9: 36. யோப்பா பட்டணத்தில் கிரேக்குப் பாஷையிலே தொற்காள் என்று அர்த்தங்கொள்ளும் தபீத்தாள் என்னும் பேருடைய ஒரு சீஷி இருந்தாள்; அவள் நற்கிரியைகளையும் தருமங்களையும் மிகுதியாய்ச் செய்துகொண்டுவந்தாள்.

கவனித்தல்: புதிய ஏற்பாட்டில், இயேசுவின் சீடராக குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரே பெண் தபீத்தாள் ஆவார். ஆதித் திருச்சபையின் ஊழியத்தில் பெண்கள் எந்த பங்கையும் வகிக்க வில்லை என்பதல்ல இதன் பொருள். அனேக பெண்கள் இயேசுவின் ஊழியத்தை ஆதரித்து, இயேசு பரலோக ராஜ்ஜியத்தைக் குறித்து பிரசங்கித்த போது அவருடைய சீடர்களுடன் காணப்பட்டனர் (லூக்கா 8:2,3). இயேசுவின் பரமேறுதலுக்குப் பின், மேல்வீட்டறையில் இருந்த 120 சீடர்களில் பெண்களும் இருந்து, ஒன்றாக இணைந்து ஜெபித்தனர் (அப்.1:13, 14). ஆதித் திருச்சபையில், அனேக பெண்கள் ஆண்டவர் மீது விசுவாசம் வைத்து இணைந்தனர் (அப்.5:13); பெண்களும் இயேசுவின் மீதுள்ள விசுவாசத்திற்காக சிறையிடலடைக்கப்பட்டனர் (அப்.8: 2,3). ஆகவே, எவ்வித சந்தேகத்திற்குமிடமின்றி, ஆதித் திருச்சபையில் அனேக பெண்கள் இயேசுவின் சீடர்களாக இருந்தனர். தபீத்தாளோ வெளிப்படையாக சீடர் என குறிப்பிடப்பட்டிருக்கிறார். தபீத்தாள் ஒரு விதவையாக இருந்திருக்கக் கூடும். ஆயினும், அவள் விதவையாக இருந்தாலும் நன்மை செய்வதையும் தான தருமங்களைச் செய்வதையும் நிறுத்தவே இல்லை. ஆதித் திருச்சபையினுள் எழுந்த முதல் பிரச்சனைகளில் ஒன்று விதவைகளைப் போஷிப்பது தொடர்பானது என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம் (அப்.6:1). ஆயினும், அப்.9:38 குறிப்பால் உணர்த்துவது போல, விதவை என்று நம்பப்படுகிற தபீத்தாள் எனும் பெண் சீடர் விதவைகளைக் கரிசனையுடன் கவனித்துக் கொண்டார். விதவைகள் அடங்கிய ஒரு குழுவானது தபீத்தாள் செய்த நல்ல காரியங்களைப் பற்றி அப்போஸ்தலனாகிய பேதுருவிடம் சாட்சியாக சொன்னதை நாம் பார்க்கிறோம். ஆதித் திருச்சபையில் பல பெண் சீடர்கள் மற்றும் தலைவர்கள் இருந்தனர். அவர்களில் ஒருசிலரின் பெயரை மட்டுமே வேதாகமம் நமக்குத் தருகிறது. இன்றும் கூட, சபையின் வளர்ச்சி, தரிசனம் மற்றும் ஊழியத்தில் பெண்களின் பங்கு மகத்தானதாக இருக்கிறது. கேள்வி என்னவெனில், நாம் நம் சபையில் பெண் உறுப்பினர்களை அவர்களுடைய அழைப்புக்கேற்ப செயல்பட, ஊழியம் செய்ய அனுமதிக்கிறோமா? இப்போது இருக்கிற சபையின் தபீத்தாள்களை எங்கே?

பயன்பாடு: நான் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி, கிறிஸ்துவின் சீடனாக இருப்பது, நற்காரியங்களைச் செய்வது, மற்றும் ஏழைகளுக்கு உதவுதல் என்பது என் கிறிஸ்தவ வாழ்வின் முக்கியமானது ஆகும். ஆயினும், அப்போஸ்தலனாகிய பவுல் சொல்வது போல, ”கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடருகிறேன்” (பிலி.3:12). இயேசு கிறிஸ்துவில் நான் பெற்ற அழைப்புக்குப் பாத்திரவானாக நான் வாழ்வேன்.

ஜெபம்: இயேசுவே, ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் நீர் வைத்திருக்கும் அழைப்புக்காக உமக்கு நன்றி. சீஷத்துவத்தின் மதிப்பை உணர்ந்து கொள்ளவும் ஆண்களையும் பெண்களையும் உமக்குச் சீடர்களாக்குவதில் ஈடுபடவும் எங்கள் சபைக்கு உதவுங்கள். ஆண்டவரே, உம் அழைப்பை நிறைவேற்ற என்னை பலப்படுத்தும். உம் மகிமைக்காக ஓட்டத்தை வெற்றிகரமாக ஓடி முடிக்க எனக்கு உதவியருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்

+91 9538328573

Day - 193


No comments: