வாசிக்க: எஸ்றா 5, 6; சங்கீதம் 20; அப்போஸ்தலர் 14:19-28
வேத வசனம்: அப்போஸ்தலர் 14: 21. அந்தப் (தெர்பைப்) பட்டணத்தில் அவர்கள் (பவுலும் பர்னபாவும்) சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, அநேகரைச் சீஷராக்கினபின்பு, லீஸ்திராவுக்கும் இக்கோனியாவுக்கும் அந்தியோகியாவுக்கும் திரும்பி வந்து,
22. சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டுமென்று சொன்னார்கள்.
கவனித்தல்: முதல் ஊழியப் பயணத்தில் எதிர்ப்புகள் எழுந்த போதிலும், அனேகர் கர்த்தரிடம் வருவதை பவுலும் பர்னபாவும் கண்டார்கள். பவுல் மீது கல்லெறிந்து, அவனை சாகட்டும் என்று ஜனங்கள் விட்டுவிட்டுச் சென்ற அதே பட்டணத்தில், தேஅன் அவர்களுக்கு அனேக சீடர்களைக் கொடுத்தார். அனேகர் வருவதைக் கண்ட பவுலும் பர்னபாவும் அங்கேயே தொடர்ந்து தங்கி இருக்க வில்லை. மாறாக, மற்ற பட்டணங்களில் அவர்கள் சமீபத்தில் நிறுவி இருந்த சபைகளுக்குத் திரும்பிச் சென்று, அங்கே இருந்த சீடர்கள் விசுவாசத்தில் நிலைத்திருக்கும்படி திடப்படுத்தி உற்சாகப்படுத்தினார்கள். இயேசுவின் சீடர்களாக இருப்பதினால் வரும் உலகப் பிரகாரமான ஆசீர்வாதங்களைப் பற்றி அவர்கள் பேசவில்லை. மாறாக, இயேசுவைப் பின்பற்றுவதற்குக் கொடுக்க வேண்டிய விலைக்கிரயத்தைப் பற்றி அவர்களுக்கு நினைவுபடுத்தினார்கள். உண்மையுள்ள கிறிஸ்தவர்களாக வாழும்போது வரக் கூடிய ஆபத்துகள் மற்றும் உபத்திரவங்கள் பற்றி புதிய சீடர்கள் அறிய வேண்டியதாயிருந்தது. பவுலும் பர்னபாவும் தங்கள் அனுபவத்தில் இருந்து அவர்களுக்கு உபத்திரவம் பற்றி சொல்ல முடிந்தது. நாம் அனுகூலமான ஒரு கிறிஸ்தவ சூழலில் இருந்தாலும் சரி அல்லது எதிர்ப்புகள் நிறைந்த கிறிஸ்தவ விரோத சூழலில் இருந்தாலும் சரி, இயேசுகிறிஸ்துவின் மீது நாம் கொண்டுள்ள விசுவாசத்திற்கும், நம் அழைப்புக்கும் உண்மையாக இருக்க வேண்டும் என்று விரும்பும்போது உபத்திரவங்களை சந்திக்க நேரிடலாம். இயேசுவைப் பின்பற்றுவதற்கு சிலுவையை சுமத்தல் என்பது ஒவ்வொரு சீடரும் தன் வாழ்வில் செய்ய வேண்டிய ஒரு காரியம் ஆகும். நபருக்கு நபர் பாடுகளின் அளவு வேறுபடலாம். ஆனால் அவை உண்மையுள்ள கிறிஸ்தவ வாழ்வின் ஒரு பகுதி ஆகும். தன் முதல் ஊழியப் பயணத்தில் உண்டான பாடுகளை நினைவு கூர்ந்த பவுல், ”அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்” என்று தீமோத்தேயுவுக்கு எழுதுகிறார் (2 தீமோ.3:12). ஆயினும், நம் பாடுகளைக் குறித்து நாம் சோர்வடையத் தேவை இல்லை. ”உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்” என்று இயேசு கிறிஸ்து ஏற்கனவே நமக்குச் சொல்லி இருக்கிறார் (யோவான் 16:33). நம் உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கையானது தேவனை மகிமைப்படுத்துகிறதாகவும், கிறிஸ்துவைக் குறித்து அறிகிற அறிவின் வாசனையை எல்லா இடங்களிலும் பரவச் செய்கிறதாகவும் இருக்கிறது. நாம் நினைவில் கொள்ள வேண்டியது: “அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது” (2 கொரி.4:17).
பயன்பாடு: கிறிஸ்தவ வாழ்வு என்பது கிறிஸ்துவுடனான ஒரு வாழ்வு ஆகும். இயேசுவைப் பின்பற்றுகிற நான், இந்த உலகத்திற்குரியவன் அல்ல. எனவே, நான் இந்த உலகத்திற்கு ஒத்த வேஷம் தரிக்கக் கூடாது. நான் எல்லாவற்றிலும் இயேசுவுக்கு உண்மையுள்ளவனாக இருக்க வேண்டும். நான் கிறிஸ்துவுக்காக பாடுகளை சகித்தால், அவருடனே கூட ஆளுகையும் செய்வேன். எந்த சோதனையும் உபத்திரவமும் தேவனுடைய அன்பை விட்டு என்னைப் பிரிக்க முடியாது. நான் கிறிஸ்தவனாக இருப்பதன் நிமித்தம் பாடுபட்டால், அதைப் பற்றி நான் வெட்கப்பட வேண்டியதில்லை. மாறாக, இயேசு கிறிஸ்துவில் உள்ள என் விசுவாசத்தைப் பற்றி சாட்சி பகர எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று தேவனை நான் துதிக்கலாம்.
ஜெபம்: இயேசுவே, உமக்கு உண்மையாக இருக்க என்னை திடப்படுத்தி உற்சாகப்படுத்துகிறதற்காக உமக்கு நன்றி. ஆண்டவரே, எல்லாவற்றிலும் மற்றும் ஒவ்வொரு நாளும் முதலாவது தேவனுடைய இராஜ்ஜியத்தையும், அவருடைய நீதியையும் தேட எனக்கு உதவியருளும். பரிசுத்த ஆவியானவரே, கிறிஸ்துவினிமித்தம் பாடுகளினூடாக நான் செல்லும்போதும் தேவனுக்கு உண்மையாக விசுவாசத்தில் நிலைத்திருக்க என்னை பலப்படுத்தியருளும். ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day - 202
No comments:
Post a Comment