வாசிக்க: 2 நாளாகமம் 5, 6; சங்கீதம் 2; அப்போஸ்தலர் 4:23-37
வேத வசனம்: அப்போஸ்தலர் 4: 29. இப்பொழுதும், கர்த்தாவே, அவர்கள் பயமுறுத்தல்களை தேவரீர் கவனித்து,
30. உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவின் நாமத்தினாலே அடையாளங்களும் அற்புதங்களும் நடக்கும்படி செய்து, பிணியாளிகளைக் குணமாக்கும்படி உம்முடைய கரத்தை நீட்டி, உம்முடைய ஊழியக்காரர் உம்முடைய வசனத்தை முழுதைரியத்தோடும் சொல்லும்படி அவர்களுக்கு அநுக்கிரகஞ்செய்தருளும் என்றார்கள்.
கவனித்தல்: யூத அதிகாரிகள் மற்றும் மூப்பர்களால் பேதுருவையும் யோவானையும் தண்டிக்க முடியவில்லை; பிறவி சப்பாணி பெற்ற குணமாகுதல் மற்றும் அப்போஸ்தலரின் தைரியம் ஆகியவற்றை மறுக்க அவர்களிடம் எந்த நியாயமான காரணமும் இல்லாதபடியால், தங்களுடைய காவலில் இருந்து வெளியே செல்லும்படி அப்போஸ்தலர்களை அனுமதித்தனர். ஆதி திருச்சபை விசுவாசிகளிடையே ஒரு பயத்தை உண்டாக்க அப்போஸ்தலர்களைப் பயமுறுத்த முடிந்ததேயன்றி அவர்களால் வேறெதுவும் செய்ய முடியவில்லை. ஆதிச்சபையானது அப்போஸ்தலர்கள் விடுவிக்கப்படும்படி ஊக்கமாக ஜெபித்திருக்கும் என்பதில் ஐயமில்லை. பேதுருவும் யோவானும் கூட விசுவாசிகளைச் சந்தித்து அவர்களிடம் அனைத்தையும் விவரிக்க விரும்பினார்கள். பிரதான ஆசாரியர் மற்றும் மூப்பர்களின் வார்த்தைகளை அப்போஸ்தலர்கள் பகிர்ந்து கொண்ட போது, ஜெபிக்கும் திருச்சபை விசுவாசிகள் “ஒருமனப்பட்டு தேவனை நோக்கிச் சத்தமிட்டு” கூப்பிட்டனர். அவர்களது சுருக்கமான ஆனால் வல்லமையான ஜெபத்தில், மூன்று காரியங்களை அவர்கள் வலியுறுத்தினர்: முதலாவதாக, தேவனுடைய ஆளுகையின் கீழ் அனைத்தும் இருக்கின்றன என்று அறிக்கையிட்டனர். அனைத்தும் தேவனுடைய கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறது என்ற தங்கள் விசுவாசத்தை அவர்கள் வெளிப்படுத்தினர் (வ.24-28). பின்பு, அப்போஸ்தலர்கள் தேவனுடைய “வசனத்தை முழுதைரியத்தோடும் சொல்லும்படி” ஜெபித்தார்கள். உபத்திரவத்தில் இருந்து அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்றோ அல்லது அப்போஸ்தலர்களை காவலில் வைத்ததற்காக யூத தலைவர்களை பழிவாங்க வேண்டும் என்றோ அவர்கள் ஜெபிக்க வில்லை. கடைசியாக, அப்போஸ்தலர்களின் செய்தியை உறுதிப்படுத்தும்படி அற்புதங்களை நிகழ்த்தும்படி தேவனிடம் வேண்டிக் கொண்டார்கள். கவனிக்க: அற்புதங்கள் மீது அல்ல, அவர்கள் தேவனுடைய வார்த்தையை தைரியமாகப் பேசுவதற்கு தங்கள் முன்னுரிமையைக் கொடுத்தனர். இயேசுவின் ஒழுங்கில்/ வரிசையில் உபதேசம் மற்றும் நற்செய்தியைப் பிரசங்கித்தல் ஆகிய இரண்டும் முதலாவதாக வைக்கப்பட்டு அற்புதமானது கடைசியானதாக இருக்கிறது. (மத். 4:23). அவர்கள் ஜெபித்ததும், தேவன் கொடுத்த உடனடி பதிலையும் பற்றி நாம் வாசிக்கிறோம் (அப்.4:31).
இந்நாட்களில், தேவனுடைய வார்த்தை மற்றும் அவருடைய ஜனங்களுக்கு எதிரான எதிர்ப்பு அதிகரித்துக் கொண்டே செல்வதை நாம் காண்கிறோம். பல விதங்களில், நற்செய்தி பரவுவதை தடுக்க வேண்டும் என்றும் நற்செய்திப் பணியை முடக்க வேண்டும் என்றும் இந்த உலகம் விரும்புகிறது. ஆதித் திருச்சபையானது ஒரு மனதாக ஜெபித்த போது, அப்போஸ்தலர்களுடைய ஊழியத்தில் அவர்கள் பலன்களைக் காண முடிந்தது. "கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலைக்குறித்து அப்போஸ்தலர்கள் மிகுந்த பலமாய்ச் சாட்சிகொடுத்தார்கள்" (வ.33). தேவனுடைய வார்த்தையை பேசும் தைரியத்தைக் கொடுக்கும்படி நாம் ஜெபிக்கும்போது, நாமும் கூட நம் நடுவில் தேவனுடைய அற்புதமான கிரியைகளை காண முடியும்.
பயன்பாடு: என் தேவன் ஆளுகை செய்கிறார். ஆகவே, நான் எந்தச் சூழ்நிலையிலும் காலத்திலும் தேவ வசனத்தைப் பிரசங்கிக்க ஆயத்தமாக இருக்க வேண்டும். அற்புதங்கள் மீது அல்ல, கர்த்தருடைய வசனத்தை தைரியமாக பிரசங்கிப்பதிலேயே என் கவனம் இருக்க வேண்டும். தேவனுடைய வார்த்தையைப் போதிப்பதற்கும் பிரசங்கிப்பதற்கும் முன்னுரிமை கொடுக்கும் இயேசுவின் மாதிரியை நான் பின்பற்ற வேண்டும். நான் இயேசுவையும் அவருடைய வார்த்தையையும் உயர்த்த விரும்புகிறேன், என்னை அல்ல. இன்றைய உலகில் தேவவசனத்தை தைரியமாக பேச தேவன் தம் ஊழியர்களுக்கு பலம் தரும்படி நான் திருச்சபையுடன் ஜெபத்தில் இணைகிறேன்.
ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, நீரே சிருஷ்டிகர். அனைத்தும் உம் ஆளுகையின் கீழ் இருக்கிறது, உம் சித்தப்படி செய்யப்படுகின்றது. இயேசுவே, உலகிற்கு உம் வார்த்தையைப் பேச உம் ஞானத்தை எனக்கு தாரும். பரிசுத்த ஆவியானவரே, தேவ வசனத்தை தைரியமாகப் பேச என்னைப் பலப்படுத்தியருளும். ஆமென்.- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day - 184
No comments:
Post a Comment