வாசிக்க: 2 நாளாகமம் 7, 8; சங்கீதம் 3; அப்போஸ்தலர் 5:1-21
வேத வசனம்: 2 நாளாகமம் 7: 13. நான் மழையில்லாதபடிக்கு வானத்தை அடைத்து, அல்லது தேசத்தை அழிக்க வெட்டுக்கிளிகளுக்குக் கட்டளையிட்டு, அல்லது என் ஜனத்திற்குள் கொள்ளைநோயை அனுப்பும்போது,
14. என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்.
கவனித்தல்: பேரழிவுகள், (அது மனிதன் உண்டாக்கிய) செயற்கையானதாக இருந்தாலும் சரி, அல்லது இயற்கையானதாக இருந்தாலும் சரி, அல்லது தேவனால் அனுப்பப்பட்டதாக இருந்தாலும் சரி, நம் அன்றாட வாழ்க்கையை அவை பாதிக்கின்றன. சொல்லப்போனால், அவை அழிவை உண்டாக்குகிறதாகவும், சரி செய்ய முடியாத அல்லது உடனடியாக மீள முடியாத இழப்பை மனித சமுதாயத்திற்கு உண்டாக்குபவையாக இருக்கின்றன. 2 நாளாகமம் 7: 20-22 அடங்கிய வேத பகுதியானது, இஸ்ரவேலர்கள் தேவனை மறந்து, மறுதலித்து அந்நிய தெய்வங்களை வணங்கினால் ஏற்படும் பேரழிவைப் பற்றிய ஒரு சித்திரத்தை நம் முன் வைக்கிறது. பஞ்சம், முன் அனுமானிக்க முடியாத விளைவுகளை சமுதாயத்தில் உண்டாக்கும் கட்டுப்பாடற்று பரவும் வியாதி போன்றவைகளைக் கையாளுவதில் வலிமை வாய்ந்த ஆட்சியாளர்களும் தடுமாறுகிறார்கள். இங்கு அப்படிப்பட்ட கடினமான தருணங்களில் தேவனுடைய தீர்வை/உதவியைப் பெறுவது பற்றி தேவன் சொல்கிறதை நாம் வாசிக்கிறோம். தங்களுடைய நிகழ்காலப் பிரச்சனைகளில் இருந்து தேவன் மட்டுமே தங்களைக் காப்பாற்ற முடியும் என்று தேவனுடைய ஜனங்கள் உணர்ந்து கொள்ளும்போது, அவர்கள் மூன்று காரியங்களைச் செய்ய வேண்டும் —அவர்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபித்து தேவனுடைய முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளில் இருந்து மனம் திருந்த வேண்டும். அப்போது, அதற்குப் பதில் கூறும்வண்ணமாக, தேவன் அவர்களுடைய ஜெபங்களுக்கு பதில் தந்து, பாவத்தை மன்னித்து, தேசத்தை சுகமாக்குவார்.
நம் ஆன்மீக/ஆவிக்குரிய வாழ்வில் அறிய மற்றும் பின்பற்ற வேண்டிய சில முக்கியமான உண்மைகளை இந்த வேத பகுதி நமக்கு நினைவுபடுத்துகிறது. தேவனால் அழைக்கப்பட்ட ஜனங்கள் ஒருவேளை தங்கள் வாழ்வில் மிக மோசமான ஒரு காலகட்டத்தினூடாக கடந்து செல்லக் கூடும். ஆயினும், தேவனுடைய இடைபடுதலை அவர்கள் தேடும்போது, அவர்கள் தேவனுக்கு முன்பாக தாழ்மையுடன் இருக்க வேண்டும்; பொல்லாத வழிகள் ஏதேனும் அவர்களிடம் காணப்படுமானால் அவைகளில் இருந்து மனம் திருந்த வேண்டும். அப்படிச் செய்வதன் மூலம், அவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதுடன் தங்கள் தேசத்துக்கும் தேவனுடைய சுகத்தைக் கொண்டு வருகிறார்கள். தாழ்மை இல்லாத ஜெபமானது ஒருபோதும் கூரையைத் தாண்டிச் செல்வதில்லை. தேவன் பரலோகத்தில் இருந்து பதில் தர, நம் பாவத்தை மன்னிக்க ஆயத்தமாக இருக்கிறார்; மற்றும் நம் தேசத்தில் ஒரு மாற்றத்தை உண்டு பண்ண விரும்புகிறார். தேவனுக்குப் பிரியம் இல்லாத வழிகளில் இருந்து நாம் மனம் திரும்புதலுக்கும் நம் மீட்புக்கும் தொடர்பு உண்டு. மனம் திரும்புதலின் இருதயத்துடன், தேவனுக்கு முன்பாக நம்மை தாழ்த்த நாம் தயாராக இருக்கிறோமா?
பயன்பாடு: நான் தேவனையும் அவருடைய வார்த்தைகளையும் மறந்துவிடக் கூடாது. தேவனுடைய வார்த்தைகளைப் பின்பற்றுவதற்கு நான் கவனமாக இருந்து, எந்த விதமான விக்கிரக ஆராதனைக்கும் எதிராக நான் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எந்த தீய சூழலில் இருந்தும் பேரழிவில் இருந்தும் தேவன் என்னைக் காப்பாற்ற முடியும். ஆயினும், நான் தேவனில் நிலைத்திருந்து, தேவனுக்குப் பிரியம் இல்லாத காரியங்கள்/பாவங்களில் இருந்து மனந்திருந்த வேண்டும். நான் தேவனுக்கு முன்பாக என்னைத் தாழ்த்த தயாராக இருக்கும்போது, அவர் என் வாழ்க்கையை மீட்டெடுக்கிறார். என்னைப் பார்க்கவும், என் ஜெபங்களைக் கேட்கவும் என் தேவன் திறந்த மனதுடையவராக இருக்கிறார். நான் எவ்வளவு விரைவாக அவருடைய வழிகாட்டுதல்களைப் பின்பற்றுகிறேனோ, அவ்வளவு சீக்கிரத்தில் நான் தேவனுடைய பதில், மன்னிப்பு, மற்றும் சுகத்தைப் பெற முடியும்.
ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, கடினமான காலங்களில் எப்படி ஜெபிப்பது என்ற வழிமுறையை நீர் கொடுப்பதற்காக உமக்கு நன்றி. என் தேவனே, நான் உமக்கு முன்பாக மனத் தாழ்மையுடன் இருக்க என் இருதயத்தை உம் அன்பினால் நிரப்பும். அவபக்தியான காரியங்களுக்கு “இல்லை” என்று உறுதியுடன் மறுப்பு சொல்ல எனக்கு உதவியருளும். என்னில் வேதனை உண்டாக்கும் வழி ஏதேனும் இருந்தால், ஆண்டவரே என்னை மன்னியும், ஆண்டவரே, நீர் எனக்குத் தேவை. உம் சத்தியத்தின் வெளிச்சத்தில் நடக்கவும், என் தற்போதைய பிரச்சனைகள் மற்றும் போராட்டங்களை ஜெயிக்கவும் எனக்கு உதவியருளும். ஆமென்.- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day - 185
No comments:
Post a Comment