Wednesday, July 28, 2021

நீங்கள் பரிசுத்தஆவியை பெற்றீர்களா!

வாசிக்க: நெகேமியா 7, 8; சங்கீதம் 26; அப்போஸ்தலர் 19

வேத வசனம்அப்போஸ்தலர் 19: 1. அப்பொல்லோ என்பவன் கொரிந்து பட்டணத்திலே இருக்கையில், பவுல் மேடான தேசங்கள் வழியாய்ப் போய், எபேசுவுக்கு வந்தான்; அங்கே சில சீஷரைக் கண்டு:
2.
நீங்கள் விசுவாசிகளானபோது, பரிசுத்தஆவியைப் பெற்றீர்களா என்று கேட்டான். அதற்கு அவர்கள்: பரிசுத்தஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை என்றார்கள்.
3.
அப்பொழுது அவன்: அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள் என்றான். அதற்கு அவர்கள்: யோவான் கொடுத்த ஞானஸ்நானம் பெற்றோம் என்றார்கள்.

கவனித்தல்: அப்போஸ்தலர் 19:2-3 வசனங்களில், நாம் இரண்டு ஆச்சரியமான மற்றும் முக்கியமான கேள்விகளைக் காண்கிறோம்: “நீங்கள் பரிசுத்தஆவியைப் பெற்றீர்களா,”  ” நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள்?”  இந்தக் கேள்விகள் சில சீஷரிடம் கேட்கப்பட்டபடியால் இது ஆச்சரியமானது ஆகும்.  ஞானஸ்நானம் பெறுவதும் பரிசுத்த ஆவியைப் பெறுவதும் கிறிஸ்தவ வாழ்வில் மிக முக்கியமானவை என்பதால் இது குறிப்பிடத்தகுந்த கேள்வி ஆகும். இந்த இரண்டு கேள்விகளுக்கும் பதிலளிக்கும்படி நம்மிடம் யாராவது கேட்டால், நம் பதில்கள் பெரும்பாலும் நம் கலந்து கொள்ளும் சபையின் நம்பிக்கைகள் அல்லது நம் சபைப் பிரிவின் நம்பிக்கைகளை வெளிப்படுத்துகிறதாகவே இருக்கும். ஆயினும், இந்த வசனங்கள் சொல்லப்பட்ட சூழ்நிலையைக் கவனித்துப் பார்த்தால், பவுல் ஏன் இந்த கேள்வியைக் கேட்டார் என்ற நோக்கத்தைப் புரிந்து கொள்ள நமக்குதவும். நாம் வாசிக்கிற வசனத்தின்படி, அவர்கள் யோவானின் ஞானஸ்நானத்தைப் பற்றி அறிந்திருந்தனர். ஆனால் பரிசுத்த ஆவியைப் பற்றி எதுவும் அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியைப் பற்றி எதுவும் தெரியாது ஆனால் இயேசுவைப் பற்றி கொஞ்சம் தெரியும் என்பது போல தோன்றுகிறது. அப்பொல்லோவைப் போல, அவர்கள் யோவானின் ஞானஸ்நானம் பற்றி மட்டுமே அறிந்திருந்தார்கள் (அப்.18:24-26). பரிசுத்த ஆவியானவர் ஒர் ஆளுமை என்பதைப் பற்றி அவர்களுக்குத் தெரிய வில்லை.

பின்னர், ஞானஸ்நானம் பற்றி பவுல் அவர்களிடம் கேட்டார். இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் என்பது பற்றி வாசிக்கும்போது அனேக கிறிஸ்தவர்கள் அதைத் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள் அல்லது குழப்பமடைகிறார்கள். அப்போஸ்தலர்கள் கொடுத்த ஞானஸ்நானம் இயேசுவின் போதனைக்கு எதிரானதா என்று நாம் ஆச்சரியப்படக் கூடும் (மத்.28:19). திரித்துவ உபதேசத்தை மறுக்கிறவர்கள், தங்கள் கருத்தை வலியுறுத்த, அப்போஸ்தலர்களே இயேசுவின் பெயரில் ஞானஸ்நானம் கொடுத்தார்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஆயினும், இப்படிப் பட்ட கூற்றுகளை நம்புவதில் தர்க்க ரீதியாக பிரச்சனைகள் (logical problems) இருக்கின்றன என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தில், ”இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம்” என்பது, ஞானஸ்நானம் கொடுக்க வேண்டிய முறைமையைப் பற்றி குறிப்பிடவில்லை. மாறாக, ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டவர்கள் விசுவாசத்தை பகிரங்கமாக அறிக்கை செய்வதை அது குறிக்கிறது. அந்நாட்களில், யூதர்கள் பலவித ஞானஸ்நானங்களைக் குறித்து அறிந்திருந்தார்கள்: யோவானின் ஞானஸ்நானம், யூத மார்க்கத்தை ஏற்றுக் கொள்ள புறஜாதியார் எடுக்கும் ஞானஸ்நானம், மற்றும் மரித்தோருக்காக எடுக்கும் ஞானஸ்நானம் (1 கொரி.15) போன்றவை அவற்றில் சில ஆகும். ஆகவே, ஒருவருக்கு இயேசுவின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்ட போது,  அது மற்ற ஞானஸ்நானங்களில் இருந்து அவருடைய ஞானஸ்நானத்தை வேறுபடுத்துக் காட்டுகிறதாகவும், இயேசுகிறிஸ்துவின் மீதுள்ள அவருடைய விசுவாசத்தை வெளிப்படுத்துகிறதாகவும் இருந்தது. ஞானஸ்நானத்தின் மூலமாக, அவர்கள் இயேசுவையும் அவருடைய போதனைகளையும் பின்பற்றுவதற்கான அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தினார்கள். குறிப்பிடத்தக்க விதமாக, ஞானஸ்நானத்திற்குப் பின்பு அவர்கள் அனைவரும் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைப் பெற்றார்கள். நம் ஞானஸ்நானமானது இயேசுவைப் பின்பற்ற வேண்டும் என்கிற நம் அர்ப்பணிப்பையும் நம் விசுவாசத்தையும் வெளிப்படுத்துகிறதாக இருக்கிறது. நாம் பரிசுத்த ஆவியைப் பெறும்போது, இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றவும், அவர் மீதுள்ள விசுவாசத்தின் படி வாழவும் நமக்கு பலத்தைத் தருகிறார். பரிசுத்த ஆவியானவரைக் குறித்து இயேசு நமக்கு வாக்குப் பண்ணி இருக்கிறார் (யோவான் 14:16,17; 15:26; 16:13). அனுதினமும் கிறிஸ்துவுடன் நடந்து தேவ பக்தியுள்ள ஒரு வாழ்க்கை வாழ நமக்குப் பரிசுத்த ஆவியானவர் தேவை. கேள்வி என்னவெனில், நாம் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிறோமா? நம் வாழ்வில் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையையும் கிரியைகளையும் மட்டுப்படுத்தாதிருப்போமாக.

பயன்பாடு: தேவனுடைய சத்தியத்தின்படி வாழ நான் அனுதினமும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட வேண்டும். அவர் இயேசுவின் போதனைகளை எனக்கு நினைவுபடுத்தி, தேவனுக்குச் சாட்சியாக வாழ என்னை பெலப்படுத்துக்கிறார். இயேசு கிறிஸ்து மூலமாக, பிதாவாகிய தேவன் பரிசுத்த ஆவியானவரை என் வாழ்வில் சம்பூரணமாக பொழிந்தருளி இருக்கிறார்.  தேவனுக்குப் பிரியமான ஒரு வாழ்க்கையை வாழ, நான் பரிசுத்த ஆவிக்கேற்றபடி நடக்க வேண்டும்.

ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, பரிசுத்த ஆவியின் வரத்திற்காக உமக்கு நன்றி. இயேசுவே, பரிசுத்த ஆவியானவரைப் பற்றிய வாக்குத்தத்தத்திற்காக நன்றி. பரிசுத்த ஆவியில் நிறைந்து, அனுதினமும் உம் மகிமைக்காக வாழ எனக்கு உதவியருளும். ஆமென்.

 - அற்புதராஜ் சாமுவேல்

+91 9538328573

Day - 208

No comments: