வாசிக்க: 2 நாளாகமம் 15, 16; சங்கீதம் 7; அப்போஸ்தலர் 7:37-60
வேத வசனம்: 2 நாளாகமம் 15: 1. அப்பொழுது தேவனுடைய ஆவி ஓதேதின் குமாரனாகிய அசரியாவின்மேல் இறங்கினதினால்,
2. அவன் வெளியே ஆசாவுக்கு எதிர்கொண்டுபோய், அவனை நோக்கி: ஆசாவே, யூதா பென்யமீன் கோத்திரங்களின் சகல மனுஷரே, கேளுங்கள்; நீங்கள் கர்த்தரோடிருந்தால், அவர் உங்களோடிருப்பார்; நீங்கள் அவரைத் தேடினால், உங்களுக்கு வெளிப்படுவார்; அவரை விட்டீர்களேயாகில், அவர் உங்களை விட்டுவிடுவார்.
கவனித்தல்: ஆசா வெற்றிபெற்று எருசலேமுக்கு திரும்பி
வந்த போது, தேவனில் நிலைத்திருப்பது பற்றிய அடிப்படை வேதாகம உண்மையை நினைவுபடுத்தும்படி
தேவன் அசரியா என்ற தன் தீர்க்கதரிசியை அனுப்பினார். தேவனைத் தேடுகிறவர்கள் அனைவரும்
அவரைக் கண்டடைவார்கள் என்று வேதாகமம் திரும்பத் திரும்ப சொல்கிறது (உபா.4:29; 1 நாளா.28:9;
2 நாளா.24:20; எரே.29:13; மத்.7:7). தேவனுடைய தயவை ஒருவர்
சாதாரணமானதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஆசா தேவனுடைய வார்த்தைக்கு செவிகொடுத்த போது,
தன் ராஜ்ஜியத்தில் இரண்டாவது முறையாக ஒரு சீர்திருத்தத்தை ஆரம்பித்தான் (15:8). பின்னர்,
கர்த்தரைத் தேடுவதற்கு தேவனோடு உடன்படிக்கை செய்து கொள்ளவும், ஆணையிட்டுக் கொள்ளவும்
தன் ஜனங்களை வழி நடத்தினான். இந்த உடன்படிக்கை மற்றும் ஆணையிடுதலின் பலன் என்ன
என்பதை 2 நாளா.15:15ல் வாசிக்கிறோம். தேவனைத் தேடுவதற்கும் அவருக்குக் கீழ்ப்படிவதற்கும்
தன் ஜனங்களை ஆசா முன் நின்று வழிநடத்தினான். “ஆசா உயிரோடிருந்த நாளெல்லாம் அவன் இருதயம்
கர்த்தரோடே உத்தமமாயிருந்தது” என்று வேதம் சொல்கிறது (1 இராஜா 15:14). அவன்
மற்ற தேவர்களை வணங்கவோ, சிலை வணக்கத்திற்கோ செல்ல வில்லை.
ஆயினும், 2 நாளா 16ல் ஒரு மாற்றத்தை நாம் காண்கிறோம். அவன் கர்த்தரைத்
தேடுவதில் உண்மையுள்ளவனாக நீண்டகாலம் இருந்த போதிலும், இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா தனக்கு
விரோதமாக வந்தபோது, அவன் தேவனுடைய உதவியைத் தேடாமல் சீரியாவின் ராஜாவாகிய பெனதாத்தின்
உதவியை தேடினான். ஆகவே, ஆசா ஆண்டவர் மீது நம்பிக்கை வைக்காமல் இருந்தபடியால் அவனைக்
கண்டிக்க தேவன் ஒரு தீர்க்கதரிசியை அனுப்பினார். எத்தியோப்பியனாகிய சேராவுடன் ஒப்பிடுகையில்,
பாஷா வலிமையானவனோ பெரிய படைபலம் உடையவனோ அல்ல (2 நாளா.16:8). ஆயினும், இந்த முறை தேவனுக்கு
முன்பாக தன்னை தாழ்த்திக் கொள்ள ஆசா தயாராக இல்லை. அதற்குப் பதிலாக, அவனுடைய கோபம்
மற்றும் அகங்காரம் பற்றி நாம் வாசிக்கிறோம். ஆசா தன் கடைசி நாட்களில், ஒரு கொடிய வியாதியினால்
கஷ்டப்பட்ட போது, “அவன் தன் வியாதியிலும் கர்த்தரை அல்ல, பரிகாரிகளையே தேடினான் (2 நாளா.16:12).
இந்த வேத பகுதியில், மருந்துகள் எடுத்துக் கொள்வதையோ, மருத்துவர்களின்
உதவியை தேடுவதையோ வேதாகமம் கண்டிக்க வில்லை. மாறாக, ஆசாவின் பிடிவாதம் மற்றும் இருதயக்கடினம்
பற்றிய–அவனுக்கு மிகவும் தேவையாக இருந்த காலத்திலும் கூட தேவனைத் தேடாமல் இருப்பதைக்
குறிக்கும்−ஒரு சித்திரத்தை நம் முன் வைக்கிறது. அனேக கிறிஸ்தவர்கள்
தங்கள் ஆன்மீக வாழ்க்கையில் நல்ல துவக்கத்தை உடையவர்களாக இருக்கிறார்கள். தேவனை
உண்மையுடன் தேடும்போது, தங்கள் வாழ்க்கையில் பல எழுப்புதல்களைக் காண்கிறார்கள். ஆயினும், நாட்கள் செல்லச் செல்ல, தேவனைத் தேடுவதற்குப்
பதிலாக தங்கள் சொந்த ஞானம் மற்றும் பலத்தை சார்ந்து நடக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.
ஆசாவுக்கு நடங்தது போல, அவர்களுடைய சுய(நல) சார்பு சில தற்காலிக பலன்களையும் வெற்றிகளையும்
கொடுக்கலாம். ஆயினும், அது எப்பொழுதுமே ஒரு விரும்பத்தகாத முடிவுக்கு நேராக வழி நடத்துகிறதாகவே
இருக்கிறது. நாம் எதற்காகவும், தேவனை விட்டு விலகக் கூடாது. முடிவு பரியந்தம் நிலைத்து
நிற்பதற்கு இயேசு நம்மை அழைக்கிறார்.
பயன்பாடு: என் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும்
நான் தேவனைத் தேடும்போது, அவர் எனக்கு தம்மை வெளிப்படுத்துகிறார். நான் அவரை விட்டு
விலகினால், நான் கர்த்தருடைய பல ஆசீர்வாதங்களை இழந்து விடுகிறேன். கடந்த காலத்தில் நான்
கர்த்தருடன் பல மகத்தான அனுபவங்களை உடையவனாக இருக்கலாம். ஆயினும், இன்று நான் எப்படி
அவரைத் தேடுகிறேன் என்பதே தேவனுக்கு முக்கியமானது ஆகும். நான் மனித வலிமையையும் உலக
ஞானத்தையும் சார்ந்து இருக்க மாட்டேன். நான் முழு மனதோடு தேவனை தேடுகிறேன்.
ஜெபம்: தந்தையாகிய தெய்வமே,
உம்மில் நிலைத்திருக்க வேண்டும் என்ற நினைவூட்டலுக்காகவும் அழைப்புக்காகவும் நன்றி.
ஆண்டவரே, உம்மை எப்பொழுதும் தேடவும், உம்மில் நிலைத்திருக்கவும் எனக்கு உதவி அருளும்.
இயேசுவே, ஓட்டத்தை ஓடி முடிக்கும் வரையிலும் உம் மீது நான் வைத்திருக்கும் விசுவாசத்தைக்
காத்துக் கொள்ள எனக்கு உதவும். ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day - 189
No comments:
Post a Comment