வாசிக்க: 2 நாளாகமம் 35, 36; சங்கீதம் 17; அப்போஸ்தலர் 13:1-12
வேத வசனம்: 2 நாளாகமம் 35: 20. யோசியா தேவாலயத்திற்கு அடுத்ததைத் திட்டப்படுத்தின இந்த எல்லா நடபடிகளுக்கும்பின்பு, எகிப்தின் ராஜாவாகிய நேகோ ஐபிராத்து நதியோரமான கர்கேமிஸ் பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ண வந்தான்; அப்பொழுது யோசியா அவனுக்கு விரோதமாய் யுத்தஞ்செய்யப் புறப்பட்டான்.
21. அவன் இவனிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பி: யூதாவின் ராஜாவே, எனக்கும் உமக்கும் என்ன? நான் இப்போது உமக்கு விரோதமாய் அல்ல, என்னோடே யுத்தம்பண்ணுகிற ஒருவனுக்கு விரோதமாய்ப் போகிறேன்; நான் தீவிரிக்கவேண்டுமென்று தேவன் சொன்னார்; தேவன் என்னோடிருக்கிறார்; அவர் உம்மை அழிக்காதபடிக்கு அவருக்கு எதிரிடைசெய்வதை விட்டுவிடும் என்று சொல்லச் சொன்னான்.
கவனித்தல்: யூதாவின் சிறந்த மற்றும் தேவபக்தியுள்ள ராஜாக்களில் யோசியா ஒருவர். யோசியா பிறப்பதற்கு 300 வருடங்களுக்கு முன்பே, யோசியாவைப் பற்றியும், சிலைவழிபாட்டிற்கு எதிராக அவன் செய்யப் போகும் சீர்திருத்தம் பற்றியும் ஒரு தேவ மனிதன் தீர்க்கதரிசனம் சொல்லி இருந்தான் (1 இராஜா. 13:1,2). அந்த தீர்க்கதரிசனம் பற்றி யோசியா அறிந்திருந்தாரா இல்லையா என்பதைப் பற்றி நமக்குத் தெரியாது. ஆனால் துன்மார்க்க ராஜாவான யெரொபெயாமிடம் தேவ மனிதன் சொன்ன தேவனுடைய தீர்க்கதரிசன வார்த்தைகள் யோசியாவின் ஆளுகையில் நிறைவேறினதை நாம் வாசிக்கிறோம் (2 இராஜா 23, 2 நாளா.34). ”கர்த்தரிடத்துக்குத் தன் முழு இருதயத்தோடும் தன் முழு ஆத்துமாவோடும் தன் முழு பலத்தோடும் மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கு ஏற்றபடியெல்லாம் செய்ய மனதைச் சாய்த்தான்; அவனைப் போலொத்த ராஜா அவனுக்குமுன் இருந்ததுமில்லை, அவனுக்குப்பின் எழும்பினதுமில்லை” என்று யோசியாவைப் பற்றி வேதம் குறிப்பிடுகிறது (2 இராஜா 23:25). யோசியா சிலை வழிபாட்டிற்கு எதிரான ஒரு பெரிய சீர்திருத்தத்தை கட்டளையிட்டார்; சாமுவேலின் நாட்களில் நடந்தது போல பஸ்காவை ஆசரித்தார்; தேவாலயம் குறித்த காரியங்களை முறைப்படுத்தினார். ஆயினும், இந்த மாபெரும் பணிகள் அனைத்தையும் செய்து முடித்த பின், அவர் திடீரென ஒரு யுத்தத்தில் கொல்லப்பட்டார். யோசியா போன்ற நல்ல மற்றும் தேவ பக்தியுள்ள இராஜாவுக்கு ஏன் அப்படி நடந்தது என்று நாம் ஆச்சரியப்படக் கூடும். யோசியா செய்த நற்காரியங்கள் அனைத்தையும் தேவன் மறந்து விட்டாரா என ஜனங்கள் கேட்கக் கூடும்.
எகிப்து ராஜாவாகிய நேகோவிற்கு எதிராக யோசியா யுத்தம் செய்யச் சென்றான் என 2 நாளா.35:20 ல் நாம் வாசிக்கிறோம். இது எகிப்திற்கும் யூதாவிற்கும் இடையிலான யுத்தம் அல்ல என்றும், தேவனுக்கு எதிர்த்து நிற்க வேண்டாம் என்றும் நேகோ யோசியாவை எச்சரித்த பின்னரும், அவன் அதைப் பொருட்படுத்தவில்லை. ஒரு புறஜாதி ராஜாவுடன் தேவன் பேச மாட்டார் என்று அவன் நினைத்திருக்கலாம். தேவபக்தியுள்ள ஒரு ராஜாவாக, குறிப்பாக தேவன் தன்னுடன் இருக்கிறார் என்று நேகோ சொன்ன போது, யுத்தத்திற்குச் செல்வதற்கு முன்பு யோசியா தேவனுடைய வழிநடத்துதலையும் சித்தத்தையும் தேடி இருக்க வேண்டும். மாறாக, யோசியா தன் சுய சித்தம் அல்லது விருப்பத்தைத் தொடர்ந்து சென்றான். ஒரு தோழமை நாடாக பாபிலோனுக்கு உதவி செய்ய வேண்டும் என அவன் நினைத்திருக்கக் கூடும். 2 நாளாகமம் 36ம் அதிகாரத்தில் நாம் காண்கிற அரசியல் ஆட்சி மாற்ற காட்சியானது, பலவீனமடைந்து கொண்டிருந்த அசீரிய அரசுக்கும் வளர்ந்து வரும் பாபிலோனிய அரசுக்கும் இடையிலான ஒரு போரில் யோசியா தேவையில்லாமல் தன்னை சிக்க வைத்துக் கொண்டார் என்பதை உணர்த்துகிறது.” வழியே போகையில் தனக்கடாத வழக்கில் தலையிடுகிறவன்” போல நாம் இருக்கக் கூடாது என நீதிமொழிகள் புத்தகம் நம்மை எச்சரிக்கிறது (நீதி.26:17). யோசியா தேவனுக்குக் கீழ்ப்படியாமல், மாறுவேடத்தில் யுத்தத்திற்குச் சென்று, காலத்திற்கு முன்னே மரித்துப் போனான். அவனுடைய மக்களுக்கு அது அதிர்ச்சியான மற்றும் எதிர்பாராத ஒரு முடிவாக இருந்திருக்கும். நாம் மித மிஞ்சிய சுய திருப்தி அடைந்து, தேவனுடைய சித்தத்தைத் தேடாமல் நம் விருப்பத்தின்படி செயல்படும்போது, விரும்பத்தகாத பின்விளைவுகளை நாம் எதிர்கொள்ள நேரிடலாம். “அப்படி நடந்திருந்தால்” என்ற சாத்தியக்கூறுகளைப் பற்றி நாம் பேசலாம். ஆனால், ஒருவர் மரித்த பின், நாம் அவருக்காக துக்கித்து புலம்ப மட்டுமே முடியும். நாம் செய்கிற எல்லாவற்றிலும் தேவனுடைய சித்தத்தைச் செய்ய வேண்டும் என யோசியாவின் வாழ்க்கை நினைவுபடுத்தி நம்மை எச்சரிக்கிறது. கடந்த காலத்தில் நாம் கர்த்தருக்காக என்ன சாதித்திருக்கிறோம் என்பது ஒரு பொருட்டு அல்ல. இப்பொழுது நாம் அவருக்கு எப்படி கீழ்ப்படிகிறோம்?
பயன்பாடு: தேவன் எவர் மூலமாகவும், ஒரு கழுதை மூலமாகக் கூட பேச முடியும் (எண்.22). நான் எந்த சூழ்நிலையிலும் தேவனுடைய சித்தம் மற்றும் வழிநடத்துதலைத் தேட வேண்டும். என் கடந்த கால சாதனைகள் தேவனையும், தேவ சித்தத்தையும் அசட்டை செய்வதற்கான சாக்குப் போக்குகள் அல்ல. என் திட்டங்களை விட தேவனுடைய திட்டங்கள் சிறந்தவை (எரே.29:11). நான் ”தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறிய” வேண்டும் (ரோமர் 12:2).
ஜெபம்: பிதாவாகிய தேவனே, உம் சித்தத்தைத் தேடவேண்டும் என நினைவுபடுத்துகிறதற்காக உமக்கு நன்றி. பரிசுத்த ஆவியானவரே, கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்து கொள்ள எனக்கு உதவியருளும். பரலோகத்தில் இருக்கிற தகப்பனே, இன்றும் என்றும் என் வாழ்வில் உம் சித்தம் செய்யப்படுவதாக. ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day - 199
No comments:
Post a Comment