Saturday, July 24, 2021

சட்டநெறிவாதத்திற்கு(legalism) எதிரான ஆதித் திருச்சபையின் ஒருமித்த தீர்மானம்

வாசிக்க: எஸ்றா 9, 10; சங்கீதம் 22; அப்போஸ்தலர் 15:22-41

வேத வசனம்: அப்போஸ்தலர் 15: 28. எவையெனில், விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளுக்கும், இரத்தத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், வேசித்தனத்திற்கும், நீங்கள் விலகியிருக்கவேண்டுமென்பதே.
29. அவசியமான இவைகளையல்லாமல் பாரமான வேறொன்றையும் உங்கள்மேல் சுமத்தாமலிருப்பது பரிசுத்தஆவிக்கும் எங்களுக்கும் நலமாகக் கண்டது; இவைகளுக்கு விலகி நீங்கள் உங்களைக் காத்துக்கொள்வது நலமாயிருக்கும். சுகமாயிருப்பீர்களாக

கவனித்தல்: கிறிஸ்தவ வாழ்க்கை என்பது மகிழ்ச்சியும், சுதந்திரமும், மற்றும் சமாதானமும் நிறைந்த ஒரு வாழ்க்கை ஆகும். அதில் நாம் கிறிஸ்துவுடனும் பரிசுத்தவான்களுடனும் ஐக்கியத்தை அனுபவிக்கிறோம். ஆனால், சட்டநெறி வாதமோ நம்மை விதிகள் நிறைந்த ஒரு பட்டியலுக்கு அடிமைப்படுத்தி, கிறிஸ்துவிடம் இருந்து நம்மைப் பிரிக்கிறது. சட்டவாதம் கிருபையை அல்ல, மாம்சத்தை மையப்படுத்தி இருக்கிறது. ஆதிச் சபையில், அது வாக்குவாதம் மற்றும் தர்க்கத்தை உண்டாக்கியதுடன், புதிய விசுவாசிகளிடையே கலக்கத்தையும் அவர்கள் ஆத்துமாவை புரட்டியும் போட்டது (வ.24). ஆயினும், செய்யத்தக்கவை மற்றும் செய்யத்தகாதவை என பல காரியங்களை வலியுறுத்தும் சட்டநெறி வாதத்தை கட்டாயப்படுத்துவதற்கு எதிராக ஆதித் திருச்சபையானது உறுதியாக நின்றது. புதிய விசுவாசிகளுக்கு சபை மன்றமானது நான்கு எளிய கடமைகளை பரிந்துரை செய்தது. சபை மன்றத்தில் கலந்து கொண்ட அனைவரும் ஒரு மனதுடன் அத்தீர்மானத்தை ஏற்றுக் கொண்டார்கள் என்பது முக்கியமானது ஆகும். அவர்கள் சட்டநெறிவாதத்திற்கு எதிராக ஒரு முடிவை எடுத்த போது, யாருக்கு பெரும்பான்மை இருக்கிறது என்று பார்க்கவில்லை, மாறாக, தேவனுக்கு முடிவெடுக்கும் அதிகாரத்தைக் கொடுத்தனர். ஆகவேதான், தங்கள் தீர்மானத்தைக் குறித்து அவர்களால் ”பரிசுத்தஆவிக்கும் எங்களுக்கும் நலமாகக் கண்டது” என்று எழுத முடிந்தது. தேவனுடைய இரட்சிப்பைப் பெற வேண்டுமெனில், புதிய விசுவாசிகள் யூத மார்க்கத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர். மோசேயின் நியாயப்பிரமாணம் மற்றும் கிரியைகள் ஆகியவற்றிற்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுத்தனர். மறு பக்கத்தில், தேவனுடைய கிருபைதான் நம்மை இரட்சிக்கிறது என்று ஆதித் திருச்சபை ஒரு மனதாக ஏற்றுக் கொண்டது.

இப்பொழுது கேள்வி என்னவெனில், 21ம் நூற்றாண்டில் வாழும் நமக்கு அப்போஸ்தலர்களின் அந்த நான்கு கட்டளைகளும்  பொருந்துமா என்பதுதான். விக்கிரகங்கள் மற்றும் வேசித்தனம் குறித்த விஷயத்தில், நாம் மறு கேள்வியின்றி ஏற்றுக் கொள்வோம். விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளை இஸ்ரவேலர்கள் புசித்த பின் என்ன நடந்தது என்பதை நாம் அறிந்திருக்கிறோம் (எண்.25:1-3). பல கலாச்சாரங்களில், சிலைகளுக்குப் படைக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடுதல் என்பது பல சடங்குகளுடன் தொடர்புடையதாக இருக்கிறது. நாம் கவனமாக இருக்க வேண்டியது அவசியம் (1 கொரி.10:23-33). மோசேயின் நியாயப்பிரமாணத்தில் உணவு குறித்து சொல்லப்பட்டிருக்கிறவைகளை பின்பற்றவேண்டுமா என நாம் யோசிக்கக் கூடும். ”இரத்தத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும்,” விலகியிருக்கவேண்டும் என்ற கட்டளையானது நோவாவுக்கு தேவன் கொடுத்த கட்டளையுடன் தொடர்புடையது ஆகும் (ஆதி.9:4). பின்பு, ”மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது” என்பதினால் மோசேயின் நியாயப்பிரமாணம் இரத்தத்தை புசிப்பதை தடை செய்தது (லேவி.17:11). இந்த நான்கு கட்டளைகளும் சபையில் ஒற்றுமையையும், யூத மற்றும் புற ஜாதி கிறிஸ்தவர்களிடையே இணக்கத்தையும் கொண்டு வருவதற்காக சொல்லப்பட்டது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஆதித் திருச்சபைப் பிதாக்களில் ஒருவரான பரிசுத்த அகஸ்டின் என்பவர் சொல்லும் பின்வரும் வார்த்தைகள் முரண்பாடுகள், விவாதங்கள் மற்றும் தர்க்கங்கள் போன்றவை சபையில் எழும்போது அவைகளைக் கையாள மிகவும் பயனுள்ளவை: ”முக்கியமானவைகளில் ஒற்றுமை;  முக்கியமல்லாதவைகளில் சுதந்திரம்; எல்லாவற்றிலும் அன்பு.” (In essentials, unity; In non-essentials; liberty; In all things, love.)

பயன்பாடு: நான் இயேசுகிறிஸ்துவை என் ஆண்டவராகவும், இரட்சகராகவும் ஏற்றுக் கொள்ளும்போது, அவர் நியாயப்பிரமாணத்தின் சாபத்தில் இருந்து என்னை விடுவிக்கிறார். என் இரட்சிப்பு கர்த்தரிடத்தில் இருந்து வருகிறது. நான் என் கிரியைகளினால் அல்ல, கிருபையினால் இரட்சிக்கப்பட்டிருக்கிறேன். எதைச் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிற ஒரு பட்டியலை அல்ல, இயேசுகிறிஸ்துவையும் அவருடைய அன்பின் முன்மாதிரியையும் பின்பற்ற நான் அழைக்கப்பட்டிருகிறேன். வெளிப்படுத்தப்பட்ட தேவ வார்த்தைக்கு ஏற்ப சரியானவைகளைச் செய்யவும், தவறானவைகளை தவிர்க்கவும் அவருடைய அன்பு என்னை வழிநடத்துகிறது.   

ஜெபம்: என் தேவனே, என்னை இரட்சித்த உம் அன்பிற்காக உமக்கு நன்றி. ஆண்டவராகிய இயேசுவே, அனுதினமும் உம் அன்பில் நிலைத்திருக்க எனக்கு உதவும். பரிசுத்த ஆவியானவரே, மாம்சத்தின் கிரியைகளை நிராகரிக்கவும் அதற்கு எதிர்த்து நிற்கவும் என்னைப் பலப்படுத்தும். இரட்சிப்பு கர்த்தருடையது. ஆமென். 

- அற்புதராஜ் சாமுவேல்

+91 9538328573

Day - 204


No comments: