Tuesday, October 5, 2021

கிறிஸ்துவுக்காக வாழ ஒரு அழைப்பு

 

வாசிக்க: ஏசாயா 65, 66; சங்கீதம் 95; எபேசியர் 4

வேத வசனம் எபேசியர் 4: 1. ஆதலால், கர்த்தர்நிமித்தம் கட்டுண்டவனாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிற புத்தியென்னவெனில், நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்புக்குப் பாத்திரவான்களாய் நடந்து, (கொள்ளுங்கள்).

கவனித்தல்:  மிகச் சிறந்த கருத்துக்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிற அனேகர் மற்றவர்களுக்கு தாங்கள் சொல்வதை பின்பற்றாமல் இருப்பதை நாம் காண்கிறோம். நாம் பேசுவது வேறு, அதைக் கைக்கொள்வது வேறு என்று அவர்கள் சொல்லக் கூடும். அனேக கிறிஸ்தவர்களும் உபதேசங்களைக் குறித்து பேசுவதில் காண்பிக்கிற ஆர்வத்தை, தங்கள் அனுதின வாழ்வில் கிறிஸ்தவ விசுவாசத்தை பயன்படுத்துவதில் காண்பிப்பதில்லை என்பது வருந்தத்தக்கது ஆகும். எபேசியருக்கு எழுதின நிருபத்தின் முதன் மூன்று அதிகாரங்களில், சபையின் முக்கியமான உபதேசங்களைப் பற்றி பவுல் விளக்குகிறார். மீதமுள்ள மூன்று அதிகாரங்களில், அந்த உபதேசங்களை வாழ்வில் நடைமுறைப்படுத்துவது மற்றும் அனுதின கிறிஸ்தவ வாழ்க்கை பற்றி வலியுறுத்துகிறார். கிறிஸ்துவில் தேவன் நம்மை எப்படிப் பார்க்கிறார் என்பதை எபேசியர் புத்தகத்தின் முதல் மூன்று அதிகாரங்கள் கூறுகிறது; கடைசி மூன்று அதிகாரங்கள் இந்த உலகம் நம்மை எப்படிக் காண வேண்டும் என்பதை போதிகிறதாக இருக்கிறது என்று ஒரு கிறிஸ்தவ தலைவர் கூறுகிறார்.  நடைமுறை கிறிஸ்தவ வாழ்வைப் பற்றி கூறும் இந்த அதிகாரங்கள்   கிறிஸ்தவ வாழ்வில் ஒற்றுமையாக, பரிசுத்தமாக, ஒருவரோடொருவர் இசைவாக மற்றும் வெற்றிபெறுகிறவர்களாக வாழ நம்மை அழைக்கிறது.

 கிறிஸ்துவில் அழைக்கப்பட்ட அழைப்பிற்கு பாத்திரவான்களாக நடந்து கொண்டு, வாழ்வதற்கான பொறுப்பு நமக்கு உண்டு. வேறுவிதமாகச் சொல்வதானால், நாம் அன்பிலே நடந்து, இயேசு கிறிஸ்து நம்மை நேசித்தது போலவே நாமும் ஒருவரை ஒருவர் நேசித்து வாழ வேண்டும். நாம் கிறிஸ்துவையும் அவருடைய வாழ்க்கையையும் கண்மூடித்தனமாகப் பின்பற்றவில்லை. நாம் தேவனைப் பிரியப்படுத்துவதற்காக செய்யத் தக்கவை செய்யத்தகாதவை அடங்கிய ஒரு பட்டியலைப் பின்பற்றுகிறவர்களாகவும் நாம் இல்லை. அப்போஸ்தலனாகிய யோவான் சொல்வது போல, ”
அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம்” (1 யோவான் 4:19). கிறிஸ்துவில் நாம் யார் என்பதையும், தேவனுடைய அழைப்பு என்ன என்பதையும் நாம் புரிந்து கொள்ளும்போது, நம் அழைப்புக்கு ஏற்ற ஒரு வாழ்க்கையை நாம் வாழ்வோம். நாம் இயேசுவைப் போல வாழும்போது, நம் வாழ்க்கையில் இயேசுவைப் பார்ப்பதற்கான ஒரு வாய்ப்பை இந்த உலகம் பெறுகிறது. இது நாம் விரும்பினால் தெரிவு செய்து கொள்கிற ஒன்று அல்ல, மாறாக நாம் உண்மையுடன் செய்ய வேண்டிய ஒரு பொறுப்பு ஆகும்.

பயன்பாடு: நான் ஒரு கிறிஸ்தவர்; கிறிஸ்து எனக்குள் இருக்கிறார். கிறிஸ்தவ விசுவாசம் என்பது நான் பின்பற்ற வேண்டிய வெறும் உபதேசங்களை மட்டுமே கொண்ட ஒன்று அல்ல. என் கிறிஸ்தவ வாழ்வின் தன்மையானது எனக்கு எவ்வளவு உபதேசங்கள் தெரியும் என்பதை வைத்து தீர்மானிக்கப்படுவதில்லை. மாறாக, நான் தேவனுக்கு முன்பாக எப்படி வாழ்கிறேன் என்பதை வைத்து தீர்மானிக்கப்படுகிறது. நான் தேவனுடைய வார்த்தையை என் வாழ்க்கையில் பயன்படுத்தி, இயேசுவைப் பின்பற்றும்போது, என் வாழ்வில் கிறிஸ்து உண்டாக்குகிற மாற்றத்தை இந்த உலகம் காணும். 

ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, உம் அன்பிற்காக, உம் இரட்சிப்பைப் பெறுவதற்கான பரிசுத்த அழைப்பிற்காக உமக்கு நன்றி. இயேசுவே, உம் அன்பின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி நடக்க எனக்கு உதவியருளும். பரிசுத்த ஆவியானவரே, தேவனை மகிமைப்படுத்தும் ஒரு வாழ்க்கையை வாழ எனக்கு உம் பலத்தைத் தந்தருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day - 277

No comments: