வாசிக்க: எரேமியா 13,14; சங்கீதம் 102; கொலோசெயர் 1
வேத வசனம்: கொலோசெயர் 1: 9. இதினிமித்தம், நாங்கள் அதைக்கேட்ட நாள்முதல் உங்களுக்காக இடைவிடாமல்
ஜெபம்பண்ணுகிறோம்; நீங்கள் எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய விவேகத்தோடும் அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும்,
10. சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளவும்,
11. சந்தோஷத்தோடே கூடிய எல்லாப்பொறுமையும் நீடியசாந்தமும்
உண்டாவதற்கு, மகிமையான அவருடைய வல்லமையின்படி, எல்லா வல்லமையாலும் பலப்படுத்தப்படவும், உங்களுக்காக வேண்டுதல் செய்கிறோம்.
கவனித்தல்: கிறிஸ்தவர்களாகிய நாம் ஜெபத்திற்கு சிறப்பு கவனம்
கொடுக்கிறோம். ஏனெனில், ஜெபமானது தேவனுடன் உறவாடுவதற்கு நமக்கு உதவுகிறது. பரிசுத்த
வேதாகமம் ஜெபத்தைப் பற்றி அனேக காரியங்களை நமக்கு போதிக்கிறது. வேதாகமத்தில்
600க்கும் அதிகமான ஜெபங்களை நாம் வாசிக்கிறோம். கொலோசெயர் 1:9-14 இல் வேதாகமத்தின்
மிகவும் வல்லமையான சிறந்த ஜெபங்களில் ஒன்றை நாம் காண்கிறோம். நாம் சக கிறிஸ்தவர்களை
சந்திக்கும்போது, அவர்களைப் பற்றிய செய்திகளைக் கேள்விப்படும்போது, அவர்களுக்காக ஜெபிப்பதாக
வாக்கு கொடுக்கிறோம். ஆயினும், நம்மில் பலர் அவ்வார்த்தைகளை மறந்து ஜெபிக்க தவறிவிடுகிறோம்.
கொலோசெ சபை பற்றிய செய்தி மற்றும் அவர்களின் அன்பு பற்றி எப்பாப்பிரா மூலமாக கேள்விப்பட்ட
பின்பு, பவுல் தான் இதுவரை செல்லாத ஒரு சபைக்காக ஜெபிக்கிறார். நாம் இதுவரை சந்தித்திராத
கிறிஸ்தவர்களைப் பற்றிய செய்திகளைக் கேள்விப்படுகையில் அவர்களுக்காக ஜெபிக்கிறோமா?
நாம் இடைவிடாமல் ஜெபம் பண்ண வேண்டும்
என்று இயேசு நமக்குப் போதித்திருக்கிறார் ( லூக்கா 18:1). நாம் தொடர்ந்து இடைவிடாமல்
ஜெபிக்கையில், ஜெபமானது நம் வாழ்வின் ஒரு அங்கமாக மாறிவிடுகிறது. நாம் ஜெபிக்கும்போது,
பொதுவாக நம் வாழ்க்கைத் தேவைகளுக்காக ஜெபிக்கிறோம். ஆனால் இயேசு நமக்குக் கற்பித்த மாதிரி ஜெபமானது,
தேவனுடைய சித்தம் நம் வாழ்வில் நிறைவேற நாம் ஜெபிக்க வேண்டும் என உற்சாகப்படுத்துகிறது.
தேவனுடைய சித்தத்தை அறிந்து கொள்ளுவதற்கான ஆவிக்குரிய ஞானம் அல்லது அறிவுக்கூர்மைக்காக
பவுல் இங்கு ஜெபிக்கிறார். நாம் தேவனுடைய சித்தத்தை அறிந்து கொள்ளும்போது நம் வாழ்வின்
நோக்கத்தை அறிந்து கொள்கிறோம். நாம் தேவனுடைய சித்தத்தை அறிந்து கொள்வதற்கு மட்டுமல்ல,
தேவனுக்குப் பிரியமானவைகளை சரியாகச் செய்வதற்கு தேவன் தந்த அறிவைப் பயன்படுத்துவதற்கும்
நமக்கு ஆவிக்குரிய ஞானம் தேவையானதாக இருக்கிறது. சுத்த ஞானம் பரத்தில் இருந்து வருகிறது
(யாக்கோபு 3:17); கிறிஸ்து இயேசுவே நம் ஞானமாக இருக்கிறார் (1 கொரி.1:30) என்று வேதம்
சொல்கிறது. ”உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய
தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்” (யாக்.1:5).
கிறிஸ்தவ வாழ்வின்
முதன்மையான நோக்கமாக இருக்க வேண்டியது, கர்த்தருக்குப் பிரியமாக அவருக்கு பாத்திரராக
வாழ்வது ஆகும். தேவனுக்குக் கீழ்ப்படிந்து அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையை வாழ ஆவிக்குரிய ஞானத்தைப்
வாழ்வில் பயன்படுத்துவது பற்றி பவுல் ஜெபிக்கிறார். கனி தருவதும், தேவனை அறிகிற அறிவில்
வளருவதும் நம் கிறிஸ்தவ வாழ்வில் மிகவும் முக்கியமானவை ஆகும். நாம் இயேசுவில் நிலைத்திருக்கும்போது, அதிக கனிகொடுக்கிறவர்களாக
இருக்கிறோம் (யோவான் 15:5-8). கடைசியாக, தேவனுடைய வல்லமைக்காக பவுல் ஜெபிக்கிறார்.
நாம் தேவ மகிமைக்காக வாழ, எந்த பாவ சோதனைகளையும் எதிர்க்க, பிசாசுக்கு எதிர்த்து நிற்க,
எதிர்ப்புகளை சந்திக்கும்போது விசுவாசத்தில் உறுதியாக நிலைநிற்க, மற்றும் பரிசுத்தமாக
வாழ நம்மனைவருக்கும் தேவனுடைய வல்லமை தேவையானதாக இருக்கிறது. தேவனுடைய சித்தம்
இன்னதென்று புரிந்து, அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிய, அவருடைய வல்லமையைப் பெறவும்
ஆவிக்குரிய ஞானத்தை தேவன் நமக்குத் தரும்படி அவரிடம் ஜெபிப்போம்.
பயன்பாடு: நான் இடைவிடாமல் ஜெபிக்க
வேண்டும். நான் ஜெபிக்கும்போது, தேவனுடைய சித்தம் என் வாழ்வில் நிறைவேற நான் ஊக்கமாக
ஜெபிக்க வேண்டும். உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்களுக்காக ஜெபிப்பதற்குப் பதிலாக, ஆவிக்குரிய
ஞானம் பெற வேண்டும் என ஜெபிக்க வேண்டும். தேவனைப் பிரியப்படுத்துவதும், கர்த்தருக்குப்
பிரியமான ஒரு வாழ்க்கையை வாழ்வதுமே என் நோக்கம் ஆகும். கனியற்ற அந்தகாரக் கிரியைகளுக்கும் எனக்கும் எந்த
சம்பந்தமும் இல்லை.
ஜெபம்: தந்தையாகிய தெய்வமே,
என் ஆவிக்குரிய வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது எது என்பதை நினைவுபடுத்துகிறதற்காக
உமக்கு நன்றி. கர்த்தாவே, கிறிஸ்துவில் சரியானவைகளைத் தேடவும், என் வாழ்வில் உமக்கேற்றபடி
சரியாக வாழவும் உம் ஆவிக்குரிய ஞானத்தை எனக்குத் தாரும். ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day - 284
No comments:
Post a Comment