வாசிக்க: எரேமியா 37,38; சங்கீதம் 114; 1 தீமோத்தேயு 1
வேத வசனம்: 1 தீமோத்தேயு 1: 18. குமாரனாகிய தீமோத்தேயுவே, உன்னைக்குறித்து
முன் உண்டான தீர்க்கதரிசனங்களின்படியே, நீ அவைகளை முன்னிட்டு நல்ல போராட்டம்பண்ணும்படி, இந்தக் கட்டளையை உனக்கு ஒப்புவிக்கிறேன்; நீ விசுவாசமும் நல்மனச்சாட்சியும் உடையவனாயிரு.
19. இந்த நல்மனச்சாட்சியைச் சிலர் தள்ளிவிட்டு, விசுவாசமாகிய கப்பலைச் சேதப்படுத்தினார்கள்.
கவனித்தல்: ஒரு பெரிய படகில் உள்ள மீனவர்கள் மீன்பிடிப்பதில் மும்முரமாக இருக்கையில் திடீரென
அவர்கள் இருந்த படகு மூழ்கியது பற்றி சமீபத்தில் நான் கேள்விப்பட்டேன். அவர்கள் படகு
விபத்தை ஏற்படுத்திய ஒரு ஓட்டையை கவனிக்க முடியாத அளவுக்கு தங்கள் வேலையில் மிகவும்
தீவிரமாக இருந்தார்கள். மரணத்தின் விளிம்பில் இருந்த அம்மீனவர்கள் அருகில் உள்ள படகுகளில்
இருந்தவர்களால் காப்பாற்றப்பட்டனர். பண்டைய எபேசு நகரம் ரோமர்களின் ஆட்சியின் கீழ்
இருந்த ஒரு துறைமுகப் பட்டணமாம் ஆகும். பவுல் பயன்படுத்தும் ”போராட்டம் செய்தல்” மற்றும்
”கப்பல் சேதம்” ஆகிய வார்த்தைகள் தீமோத்தேயு ஊழியம் செய்த எபேசுவின் கலாச்சார சூழலுக்கு
தொடர்புடையதாக இருக்கிறது. எபேசு சபையில் இருந்த பிரச்சனைகளில் ஒன்று என்னவெனில்,
அங்கிருந்தவர்களில் சிலர் தவறான வேற்றுமையான உபதேசங்களைப் போதித்தார்கள் (வ.3). தீமோத்தேயுவைக்
குறித்து சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்களை நினைவுகூர்ந்து போராட்டம் பண்ணும்படியாகவும்,
விசுவாசமும் நல்மனச்சாட்சியும் உள்ளாவராக இருக்கும்படி பவுல் அவருக்கு கட்டளை கொடுக்கிறார்.
5ஆம் வசனத்தில், கற்பனையின் பொருள் என்ன என்று சொல்லும்போதும் விசுவாசம் மற்றும் நல்மனச்சாட்சி
பற்றி பவுல் கூறுகிறார். விசுவாசமும் நல்மனச்சாட்சியும் உள்ளவர்களாக இருப்பது தவறான
போதனைகளுக்கு எதிரான நம் போராட்டத்திற்கும், நம் அனுதின கிறிஸ்தவ வாழ்விற்கும் மிகவும்
முக்கியமானது ஆகும்.
பிசாசுக்கு எதிரான நம் ஆவிக்குரிய யுத்தத்தில்
விசுவாசம் என்பது ஒரு முக்கியமான ஆயுதம் ஆகும். விசுவாசம் கேடகமாக இருந்து நம்மைப்
பாதுகாத்து, ”பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம்
அவித்துப்போட” உதவுகிறது (எபே.6:16). தவறான உபதேசங்கள் மற்றும் நியாயப்பிரமாணத்திற்கு
ஆதரவான சட்டநெறிவாதம் ஆகியவற்றிற்கு எதிர்த்து நிற்க, நாம் இயேசு கிறிஸ்துவின் மீது
உள்ள நம் விசுவாசத்தில் உறுதியாக நிற்க வேண்டும். நல்மனச்சாட்சி என்பது நல்ல நடக்கையை,
பரிசுத்தமாக வாழ்வதைக் குறிக்கிறது. விசுவாசம் மற்றும் நல்மனச்சாட்சியை ஒன்றாக சேர்த்து
சொல்வதன் மூலம், ஒருவரின் வாழ்க்கையில் விசுவாசமும்
நல்மனச்சாட்சியும் ஒன்றோடொன்று தொடர்புடையது என்று பவுல் சொல்கிறார். சிலர் “வீண்பேச்சுக்கு
இடங்கொடுத்து விலகிப்போனார்கள்” என்று பவுல் கூறுகிறார் (வ.6). இங்கு சிலர்
என்பது, தவறான உபதேசங்களைப் போதித்தவர்களையும், நியாயப்பிரமாண போதகர்களையும் குறிக்கிறது.
19ஆம் வசனத்தில், ”நல்மனச்சாட்சியைச் சிலர் தள்ளிவிட்டு, விசுவாசமாகிய கப்பலைச் சேதப்படுத்தினார்கள்” என்று பவுல் கூறுகிறார்.
ஒரு கப்பல் பயணியாக, கப்பல் சேதத்தினால் உண்டாகும் வேதனையை பவுல் நன்கறிந்திருந்தார்.
விசுவாசத்தையும் நல்மனச்சாட்சியையும் வேண்டாமென்று தள்ளிவிடுகிறவர்கள் தங்களுக்குத்
தாங்களே கடுமையான சேதத்தை வரவழைத்துக் கொள்கிறார்கள். ”ஆரோக்கியமான
உபதேசத்திற்கு எதிரிடையாயிருக்கிற” (வ.11) அனேக நவீன போதனைகள், தவறாக வழிநடத்தும்
செய்கைகள், மற்றும் பாவங்களைக் குறித்து இந்நாட்களில் நாம் பார்க்கிறோம், கேட்கிறோம்.
உலகப் பிரகாரமான வாழ்க்கை மற்றும் தவறான போதனைகளுக்கு எதிரான நம் ஆவிக்குரிய யுத்தத்தில்,
நாம் விசுவாசமும் நல்மனச்சாட்சியும் உடையவர்களாக இருக்க எப்பொழுதும் கவனமாக இருக்க
வேண்டும்.
பயன்பாடு: சுவிசேஷத்திற்கு ஆதரவாக மற்றும் எந்த தவறான போதனைக்கும்
எதிர்த்து நிற்கையில் நான் விசுவாசமும் நல்மனச்சாட்சியும் உள்ளவனாக இருக்க வேண்டும்.
ஆரோக்கியமான உபதேசத்திற்கு எதிரானதாக அல்லது முரணானதாக இருப்பவைகளுக்கு நான் செவிசாய்க்க
மாட்டேன். மாறாக, தேவனுடைய வார்த்தைக்கு செவிகொடுத்து கீழ்ப்படிவதன் மூலம் விசுவாசத்தில்
வளர கவனம் செலுத்துவேன். என் விசுவாசக் கப்பலை சேதப்படுத்த நான் பிசாசுக்கு இடம் கொடுக்க
மாட்டேன்.
ஜெபம்: நித்திய தேவனே, என்னை எச்சரித்து சரிசெய்கிற உம்
வார்த்தைகளுக்காக நன்றி. இயேசுவே, என்னை இரட்சிக்கும் உம் அன்புக்காக உமக்கு நன்றி.
கர்த்தாவே, என் விசுவாசத்தைக் காத்துக் கொண்டு உம் மகிமைக்காக பரிசுத்தமாக வாழ எனக்கு
உதவியருளும். ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day – 296
No comments:
Post a Comment