வாசிக்க: எரேமியா 29,30; சங்கீதம் 110; 1 தெசலோனிக்கேயர் 5
வேத வசனம்: 1 தெசலோனிக்கேயர் 5: 16. எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்.
17. இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்.
18. எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்து தேவனுடைய
சித்தமாயிருக்கிறது.
கவனித்தல்: இந்நாட்களில் மக்கள் ஒரு வரி மேற்கோள்கள் மற்றும்
வாழ்த்துதல்களை WhatsApp மற்றும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றனர்.
“சுருக்கமான மற்றும் இனிய” செய்திகள் நீண்ட வாக்கியங்களை விட கவனத்தை ஈர்க்கக் கூடியதாகவும்,
அர்த்தமுள்ளவையாகவும் இருக்கின்றன என ஜனங்கள் கூறுகின்றனர். இங்கு, பவுல் அப்ப்படிப்பட்ட சுருக்கமான அறிவுரைகளை
தெசலோனிக்கே விசுவாசிகளுக்குக் கூறுகிறார். மூல கிரேக்க மொழியில் 16ஆம் வசனம் தான்
மிகவும் சுருக்கமான சிறிய வசனம் ஆகும். “நாம் எல்லாவற்றையும் எல்லா இடத்திலும் செய்ய
முடியாது” என்று ஜனங்கள் சொல்வதுண்டு. ஆனால் நாம் ”எப்பொழுதும்,” “இடைவிடாமல்,” மற்றும்
”எல்லாவற்றிலும்” செய்ய வேண்டிய மூன்று காரியங்களைப் பற்றி பவுல் எழுதுகிறார். பவுலின்
கட்டளைகள் நம கவனத்தைப் பெற தகுதியானவை; அவை நம் நடைமுறை கிறிஸ்தவ வாழ்க்கைக்குப்
பயனுள்ளவை ஆகும். இந்த மூன்று காரியங்களையும்
செய்வது நடைமுறையில் சாத்தியம் இல்லை என்று சிலர் நினைக்கக் கூடும். நம்மால் செய்ய முடியாத ஒன்றைச் செய்யும்படி தேவன்
ஒருபோதும் நம்மிடம் கேட்கமாட்டார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ” என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப்
பெலனுண்டு” என்று அப்போஸ்தலனாகிய பவுல் பிலிப்பியருக்கு எழுதுகிறார்
(பிலி.4:13). கிறிஸ்துவின் மூலமாக நாம் இந்த
மூன்று காரியங்களையும் செய்ய முடியும்.
நாம் எப்பொழுதும் சந்தோஷமாக இருப்பது
எப்படி? அப்படியானால் நம் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும்
அடக்கி வைக்க அல்லது மறைக்க வேண்டும் என இது சொல்கிறதா? இல்லை. எப்பொழுதும் சந்தோசமாயிருத்தல்
என்பது நம் மகிழ்ச்சியானது நம் சூழ்நிலைகளைச் சார்ந்தது அல்ல என்பதையும், நாம் எந்த
சூழ்நிலையில் இருந்தாலும் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருக்க முடியும் என்பதைக் குறிக்கிறது
(பிலி.4:4). அவரே நம் மகிழ்ச்சியின் ஊற்று ஆக இருக்கிறார். தெசலோனிக்கேயில் உள்ள புது
விசுவாசிகள் பாடுகள் மற்றும் உபத்திரவங்களினூடாக சென்று கொண்டிருந்தனர். பவுலின் வார்த்தைகள் அவர்களுக்கு இயேசுவின் போதனையான, “சந்தோஷப்பட்டு
களிகூருங்கள்” என்பதை நினைவுபடுத்தியிருக்கும் ( மத்.5:11-12; லூக்கா 6:22-23). ஆவியின்
கனி சந்தோஷம் என்று கலாத்தியர் 5:22இல் நாம் வாசிக்கிறோம். ஆவியின்படி நடக்கும்போது,
ஆவியினால் வழிநடத்தப்படும்போது, நாம் எப்பொழுதும் சந்தோசமாயிருக்க முடியும்.
ஜெபத்தைப் பற்றி நாம் நினைக்கும்போது, நம்
ஜெப நடைமுறைகள் அல்லது செயல்பாடுகளான தலைகளை தாழ்த்துதல், கைகளைக் குவித்தல், கண்களை
மூடுதல் மற்றும் முழங்கால் படியிடுதல் போன்றவை நம் மனதில் வருகிறது. ஜெபத்தில் நாம்
தேவனுடன் பேசி உறவாடுகிறோம். ”சோர்ந்துபோகாமல்
எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக்குறித்து” இயேசு நமக்குப் போதித்திருக்கிறார்
(லூக்கா 18:1). இடைவிடாத ஜெபம் என்பது ஜெபத்திற்காக நாம் செய்கிற செயலைக் குறிக்காமல்
ஜெபிக்கும் மனப்பான்மையைக் குறிக்கிறது. நாம் எப்பொழுதும், எந்த இடத்தில் இருந்தும்
தேவனை நோக்கி ஜெபிக்க முடியும். நாம் சுவாசிப்பது போல, தேவனை நோக்கி தொடர்ந்து நாம்
ஜெபிக்க முடியும். கிறிஸ்தவர்களாகிய நாம் ஜெபிக்க முடியாத ஒரு இடத்தில் தொடர்ந்து
இருக்கக் கூடாது. நம் தொடர்ச்சியான ஜெபமானது
தேவனுடனான நம் உறவை வெளிப்படுத்துகிறதாக இருக்கிறது. நாம் எந்தளவு அதிகமாக ஜெபிக்கிறோமோ
அவ்வளவு அதிகமாக நாம் கர்த்தரில் மகிழ்ச்சியாகவும் இருப்போம்.
”சந்தோஷமும் மகிழ்ச்சியும் இணையும்போது நன்றியறிதல்
என்கிற குழந்தை பிறக்கிறது” என்று ஸ்பர்ஜன் கூறுகிறார். நாம் வாழ்வில் வருகிற அனைத்தையும்
கர்மா அல்லது தலைவிதி என்று நாம் ஏற்றுக் கொள்ளத் தேவை இல்லை. மாறாக, நாம் எல்லாவற்றிற்காகவும்
எல்லாவற்றிலேயும் தேவனுக்கு நன்றி செலுத்த முடியும். நம் கவலைகள் மற்றும் பயங்களுக்கான
சிறந்த மருந்து தேவனுக்கு நன்றி சொல்லுதல் ஆகும். ”வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம்
கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்” என்று பவுல் கூறுகிறார் (கொலோ.3:17).
நாம் எல்லாவற்றிற்காகவும் தேவனுக்கு நன்றி சொல்லும்போது, நம் வாழ்க்கை மீதான
அவருடைய ஆளுகை மற்றும் வல்லமையை நாம் ஏற்றுக்
கொள்கிறோம். அனேக கிறிஸ்தவர்கள் தங்களுடைய வாழ்வைக் குறித்த தேவனுடைய சித்தம் என்ன
என அறிந்து கொள்வதில் ஆர்வம் உள்ளவர்களாக இருக்கின்றனர். இவை “கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது” என்று பவுல் இங்கு கூறுகிறார். தேவன் தம் மக்களுக்காக வைத்திருக்கும் பொதுவான சித்தத்தை
தொடர்ந்து செய்யும்போது, நம் வாழ்வைக் குறித்த தேவனுடைய தனிப்பட்ட சித்தம் இன்னதென்று
நாம் அறிந்து கொள்வோம்.
பயன்பாடு: நான் கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருக்க
முடியும். நான் கர்த்தரைச் சார்ந்து இருப்பதால், ஜெபங்கள் மூலமாக நான் தேவனுடன் ஒரு
தொடர்ச்சியான உறவை பேணுகிறவராக இருப்பேன். நான் தேவனிடம் இருந்து பெறும் ஒவ்வொரு
ஆசீர்வாதத்திற்காகவும் அவருக்கு நன்றி சொல்லுகிறேன். என் வாழ்வின் மிகப்பெரிய ஆசீர்வாதம்
இயேசு கிறிஸ்துவே. இந்த மூன்று காரியங்களையும் செய்து தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவது
எனக்கு அதிக மகிழ்ச்சியைத் தருகிறது.
ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, கர்த்தரில் நீர் எனக்குத் தரும்
மகிழ்ச்சிக்காக உமக்கு நன்றி. பரிசுத்த ஆவியானவரே, எப்பொழுதும் ஜெபிக்கவும், எல்லாவற்றிற்காகவும்
நன்றியறிதலுடன் இருக்கவும் எனக்கு உதவும். கர்த்தாவே, உம் சித்தத்தின்படி வாழ இன்று என்னைப்
பலப்படுத்தி அருளும்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day – 292
No comments:
Post a Comment