வாசிக்க: எரேமியா 5,6; சங்கீதம் 98; பிலிப்பியர் 1
வேத வசனம்: பிலிப்பியர் 1: 9. மேலும், உத்தமமானவைகளை நீங்கள் ஒப்புக்கொள்ளத்தக்கதாக உங்கள்
அன்பானது அறிவிலும் எல்லா உணர்விலும் இன்னும் அதிகமதிகமாய்ப் பெருகவும்,
10. தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும்படி
இயேசுகிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாகி,
11. நீங்கள் கிறிஸ்துவின் நாளுக்கென்று துப்புரவானவர்களும்
இடறலற்றவர்களுமாயிருக்கவும் வேண்டுதல் செய்கிறேன்.
கவனித்தல்: பிலிப்பியர் 1ஆம் அதிகாரத்தில் பவுலின் மற்றொமொரு
சிறைச்சாலை ஜெபத்தைக் காண்கிறோம். இங்கே, பவுல் தன் நிருபத்தை வாசிக்கிறவர்களின்
ஆவிக்குரிய முதிர்ச்சி, வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்காக தன் ஆழமான உட்கருத்தடங்கிய
ஜெபத்தில் ஏறெடுக்கிறார். ஒரு கிறிஸ்தவர் அதிகமதிகமாக உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்களினால்
ஆசீர்வதிக்கப்பட்டு செழிப்படைய வேண்டும் என்பதற்காக செய்யப்படும் ஜெபங்களை நாம் அடிக்கடி
கேட்கிறோம். அப்படிப்பட்ட ஜெபங்களின் நோக்கத்தை நாம் வேதத்தின் வெளிச்சத்தில் கண்டறிய
வேண்டும். பவுலோ விசுவாசிகள் அன்பிலே பெருக வேண்டும் என ஜெபிக்கிறார். அப்படியானால்
அவர்களிடம் அன்பு இல்லை ஆகவே அவர் அப்படி ஜெபிக்கிறார் என்று பொருள் கொள்ளக் கூடாது.
அன்பிலே வளருவதும் பெருகுவதும் ஆவிக்குரிய வாழ்க்கையில் மிகவும் அடிப்படையான காரியங்களில்
ஒன்று ஆகும். அன்பை வளர்க்க, அன்பிலே வளர தவறுகிறவர்கள் முடிவில் அதை இழந்துவிடுகிறார்கள்.
தங்களால் முன்பு போல தேவனை ஏன் நேசிக்க முடியவில்லை
என சில கிறிஸ்தவர்கள் நினைக்கக் கூடும். எபேசு சபைக்கு எதிரான குற்றச்சாட்டு என்னவெனில்,
“நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று
உன்பேரில் எனக்குக் குறை உண்டு” என்பதாகும் (வெளி.2:4). அன்பானது அறிவிலும் எல்லா உணர்விலும் அதிகமதிகமாகப்
பெருகவேண்டும் என பவுல் ஜெபிக்கிறார். கிறிஸ்தவ
அன்பு என்பது உணர்வின் அடிப்படையிலானதோ அல்லது உணர்ச்சியோ அல்லது உணர்வு சார்ந்ததோ
அல்ல என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். கிறிஸ்தவ அன்பானது பகுத்தறிவுக்கு உட்பட்டதும், தேவனுடைய
வார்த்தையினால் சாரமேற்றப்பட்டதும் ஆகும்.
வளர்ந்து பெருகுகிற அன்பின் நோக்கம் மற்றும்
பயன்பாடு குறித்து 10 மற்றும் 11ஆம் வசனங்களில் பவுல் நமக்குக் கூறுகிறார். கிறிஸ்தவர்களாகிய
நாம் எல்லாவற்றிலும் மிகச் சிறந்ததை பகுத்தறிந்து அதை செய்கிறவர்களாக இருக்க வேண்டும்.
மேலும், நம்மை பரிசுத்தமாகவும் குற்றமற்றவர்களாகவும்
வைத்திருத்தல் பற்றி பவுல் நினைவுபடுத்துகிறார். அன்பிலே வளருதல் நாம் இவைகளை நம் வாழ்வில் பெற நமக்குதவுகிறது.
அது மட்டுமல்ல, இயேசு கிறிஸ்துவின் மூலமாக வரும் நீதியின் கனியினால் நிரப்பப்பட
அன்பு நம்மை வழிநடத்துகிறது. இயேசு கிறிஸ்துவின்
சீடராக இருப்பவருக்கு அன்பானது ஒரு அடையாளமாக இருக்கிறது. அது அன்பு செய்வது பற்றிய
அவருடைய பிரதான கற்பனைக்குக் கீழ்ப்படிய உதவுகிறது (யோவான் 13:34-35; 14:15, 23-24).
இறுதியாக, நாம் அன்பில் வளரும்போது, அது தேவனை மகிமைப்படுத்துகிறது. நாம் கிறிஸ்துவில்
நிலைத்திருக்கும்போது, நாம் அன்பிலே வளர்ந்து, தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும்படி
அதிக கனி தருகிறவர்களாக நாம் இருக்கிறோம்.
பயன்பாடு: ”அன்பில்லாதவன்
தேவனை அறியான்; தேவன் அன்பாகவே இருக்கிறார்” என்று அப்போஸ்தலனாகிய யோவான் சொல்கிறார் (1யோவான் 4:8). ”நான்
தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந்து, சகல இரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பேர்க்கத்தக்கதாக சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை” (1 கொரி.13:2). பரிசுத்த
ஆவியானவர் மூலமாக, தேவனுடைய ஆவி என் இருதயத்தில் ஊற்றப்பட்டிருக்கிறது. எல்லாவற்றிலும்,
தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும்படி என்னிடம் இருப்பவற்றில் சிறந்தவைகளை தேவனுக்குப்
படைக்க அன்பு என்னை உந்தித் தள்ளுகிறது.
ஜெபம்: அன்பின் தகப்பனே, விடுதலையளிக்கும்
உம் அன்பிற்காக நன்றி. கர்த்தாவே, மற்றவர்களை நேசிக்கும் ஒரு வளர்ந்த கிறிஸ்தவனாக
இருக்க, உம் மீதான என் அன்பைப் பெருகச் செய்யும். இயேசுவே, அன்பின் வழியிலே நடக்கவும்,
தேவ மகிமைக்காக நீதியின் கனியை அறுவடை செய்யவும் எனக்கு உதவியருளும். ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day - 280
No comments:
Post a Comment