வாசிக்க: எரேமியா 7,8; சங்கீதம் 99; பிலிப்பியர் 2
வேத வசனம்: பிலிப்பியர் 2: 5. கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது.
கவனித்தல்: ”மனம் போல வாழ்க்கை” என்று பெரியவர்கள் சொல்வார்கள்.
அதாவது, மனிதனுடைய நினைவுக்கு தக்கபடி அவனது வாழ்வு அமைகிறது என்பதாகும். ஒருவரின்
மனம் அவருடைய வாழ்வில் முக்கியமான பங்கை வகிக்கிறது. சுபாவத்தின்படி, மனித மனமானது
சுயநல மற்றும் பொதுநல இயல்புகள் ஆகிய இரண்டும் உடையதாக இருக்கிறது. ஆயினும், நாம்
நல்ல, சுயநலமற்ற மனிதர்களைக் காண்பதைவிட அதிகமான சுயநலவாதிகளையே நாம் காண்கிறோம். மனிதர்கள்
தாங்கள் தெரிவு செய்து கொள்ளும் குணாதிசயத்திற்கேற்றபடி, அவர்கள் மனம் செயல்பட்டு,
அதை அவர்கள் வாழ்க்கை பிரதிபலிக்கிறது. பிலிப்பியர் 2ஆம் அதிகாரத்தில், இயேசுவில்
மனு அவதாரத்தைப் புரிந்து கொள்ள உதவுகிற கிறிஸ்துவின் தன்மை பற்றிய வேதாகமத்தின் மிகவும்
முக்கியமான பகுதிகளில் ஒன்றை நாம் காண்கிறோம். இயேசு இந்த உலகில் பிறப்பதற்கு முன்மே
இருந்தமை (preexistence), மனித அவதாரம், மற்றும் பிதாவாகிய தேவனால்
உயர்த்தப்பட்டது ஆகியவை பற்றி பிலி.2:6-11
சொல்கிறது. ஒரு கிறிஸ்தவன் எப்படி வாழக் கூடாது என்று பவுல் எழுதிய பின்பு, இயேசுவின்
தன்னையே தியாகபலியாக ஒப்புக்கொடுத்த தாழ்மையுள்ள வாழ்க்கையை எடுத்துக்காட்டாக பவுல்
குறிப்பிடுகிறார். மற்றவர்களின் நலனுக்காக ஒரு மனிதன் எப்படி வாழமுடியும் என்பதற்கான
மிகச் சிறந்த முன்னுதாரணத்தை நாம் இயேசுவில் காண்கிறோம்.
”நீங்கள்
இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று
பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்” என்று ரோமர் 12:2 நமக்குத் தெளிவாகக் கூறுகிறது. ரோமர் 8:29 இல் “தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு
ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்” என்று பவுல் கூறுகிறர். நாம் சுயநல
நோக்கமின்றி மற்றவர்களுக்காக வாழ வேண்டும் என பிலிப்பியர் 2 ஆம் அதிகாரத்தில் கட்டளை
பெற்றிருக்கிறோம். கிறிஸ்துவின் சிந்தையை உடையவர்களாக இருப்பது என்பது வேண்டுமென்றால்
தெரிவு செய்து கொள்ளக் கூடிய ஒன்று அல்ல, அது ஒவ்வொரு கிறிஸ்தவருக்குமான கட்டளை ஆகும்.
தேவனுடைய பிள்ளையாக, அவருடைய வார்த்தைக்கு அன்புடன் கீழ்ப்படிந்து, நாம் கிறிஸ்துவின்
சிந்தையை மற்றவர்களுக்குக் காட்டுவதை தெரிந்து கொள்கிறோம். கிறிஸ்துவின் தாழ்மையானது
வேதாகம கிறிஸ்தவ வாழ்க்கை பற்றி அனேக காரியங்களை நமக்கு போதிக்கிறது. ஒரு கிறிஸ்தவர்,
“பரலோகத்திற்குச் செல்லும் படிக்கட்டுகள் எவை?” என்று கேட்டார். பரலோகத்திற்கான படிக்கட்டுகள்
ஒவ்வொன்றிலும் தாழ்மையாக இருத்தல் என்பது பொறிக்கப்பட்டிருப்பதை அவர் கண்டார். நாம்
கிறிஸ்துவின் சிந்தையை உடையவர்களாக இருக்கும்போது, இந்த உலகமானது நம்மில் கிறிஸ்துவைத்
தவிர வேறு எதையும் காணாது. ”கிறிஸ்து நமக்காக மரித்து அவருடைய அன்பை நமக்குக் காண்பித்தார்;
நாம் அவருக்காக வாழ்வதன் மூலம் நம் அன்பை காண்பிக்கிறோம்” என ஒரு கிறிஸ்தவர் மிக
அழகாகக் கூறுகிறார்.
பயன்பாடு: நான் கிறிஸ்துவுக்காக வாழும்போது, நான் எதையும்
வீண் பெருமைக்காகவோ சுய நலத்திற்காகவோ செய்யக் கூடாது. ஒரு கிறிஸ்தவராக, நான் தேவனுடைய
சாயலாக மாறும்படிக்கு என்னை ஒப்புக்கொடுக்க வேண்டும். நான் கிறிஸ்துவின் சிந்தையை ஆயுதமாக தரித்துக் கொள்கிறேன்
(1 பேதுரு 4:1). ”இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்” (கலா.2:20). என் பேச்சிலும்
செயலிலும் கிறிஸ்துவைப் பற்றி அறிகிற அறிவின் வாசனையை எல்லா இடங்களிலும் நான் பரப்புவேன்.
ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, கிறிஸ்துவின்
சிந்தையை நான் உடையவராக இருக்கும்படிக்கு என்னை உம் பிள்ளையாக தெரிந்து கொண்டமைக்காக
உமக்கு நன்றி. பரிசுத்த ஆவியானவரே, கிறிஸ்துவின் சிந்தையுடன் வாழ என் மனதை புதிதாக்கியருளும்.
ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day - 281
No comments:
Post a Comment