Friday, October 1, 2021

கிறிஸ்துவின் பிரமாணம் அன்பு செய்ய நம்மை நெருக்கி ஏவுகிறது

 வாசிக்க: ஏசாயா 57, 58; சங்கீதம் 91; கலாத்தியர் 6

வேத வசனம் கலாத்தியர் 6: 1. சகோதரரே, ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவனைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள்; நீயும் சோதிக்கப்படாதபடிக்கு உன்னைக்குறித்து எச்சரிக்கையாயிரு.
2.
ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள்.

கவனித்தல்:  ”ஒரு கிறிஸ்தவர் பாவம் செய்வாரா?” என்பது கிறிஸ்தவர்களிடையே அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று ஆகும். ஒரு காலத்தில் கர்த்தருக்காக வைராக்கியமாக இருந்த கிறிஸ்ஹவர்களின் வீழ்ச்சியைப் பற்றிய செய்திகளை நாம் அவ்வப்போது கேள்விப்படவும் பார்க்கவும் செய்கிறோம். நம் உள்ளூர் சபைகளில் கூட, பாவங்களுக்கு எதிராக தங்களைப் பாதுகாத்துக் கொள்ளாத கிறிஸ்தவர்களை நாம் காணக் கூடும்.  அப்படிப்பட்ட கிறிஸ்தவர்களை நாம் எப்படி நடத்துவது? பொதுவாக, ஒருவர் பாவம் செய்து மாட்டிக் கொள்ளும்போது, இயேசுவின் காலத்தில் பரிசேயர்கள் செய்தது போல,  அவருடைய வாழ்க்கையையே அழித்துப் போட மக்கள் தயாராக இருப்பார்கள் (யோவான் 8:4-5).  சட்ட நெறிவாதம் மக்களுக்குச் சொல்வதும் அதுதான். கலாத்தியர் 6:1ல், கர்த்தருக்கு எதிராக வேண்டுமென்றே தொடர்ந்து முழு விருப்பத்துடன் பாவம் செய்கிற ஒருவரைப் பற்றி பவுல் சொல்ல வில்லை. நியாயப்பிரமாணப் போதகர்களால் மோசேயின் நியாயப்பிரமாணத்தைப் பின்பற்றவேண்டும் என்று போதிக்கப்பட்டு, தவறாக வழிநடத்தப்பட்ட கலாத்திய சபைக்கு, பவுல் சில நடைமுறை ஆலோசனைகளைத் தருகிறார். இது பாவச் சிந்தனைகள் மற்றும் பாவ வலைகளுடன் போராடிக்கொண்டிருக்கும் கிறிஸ்தவர்களுக்கு உதவும்படி ஒவ்வொரு கிறிஸ்தவரும் சபையும் அறிந்திருக்க வேண்டிய முக்கியமான ஒன்று ஆகும்.  

பாவத்தில் அகப்பட்ட ஒருவரை எப்படி சகித்துக் கொள்வது என்று மக்கள் சொல்லக் கூடும் அல்லது அவரை கடும் தண்டனையில் இருந்து காப்பற்ற சிலர் முயற்சி செய்யக் கூடும். பாரபட்சமான முடிவுகளை எடுப்பதற்குப் பதிலாக, அப்படிப்பட்ட பாவம் செய்தவர்களை சீர் பொருந்தப் பண்ணுவதும், கிறிஸ்துவிடம் அவர்கள் திரும்பி வரும்படி உதவுவதும் நம் பொறுப்பு ஆகும். கலாத்தியர் 5ஆம் அதிகாரத்தில், ஆவியினால் நடத்தப்படும்படி, பவுல் கலாத்தியர்களிடம் கூறுகிறார். அவர் மாம்சத்தின் கிரியைகளையும் ஆவியின் கனியையும் வேறுபிரித்துக் காண்பிக்கிறார். கலாத்தியர் 6 இல், ஆவிக்கேற்றபடி வாழ்கிறவர்கள் ஆவியின் கனியை வெளிப்படுத்தி, பாவத்தில் அகப்பட்டவரை அவர்கள் வந்து சீர்பொருந்தப் பண்ணும்படி/சரிசெய்ய அழைக்கிறார். அப்படிப்பட்ட நபரை கையாளுவது சபைத் தலைவர்களின் அல்லது சபையில் சக்திவாய்ந்த மனிதர்களின் பொறுப்பு என்று சிலர் நினைக்கக் கூடும். கிறிஸ்தவர்களாகிய நாம் கிறிஸ்துவில் ஒரே சரீரத்தின் வெவ்வேறு அவயவங்களாக இருக்கிறோம். கிறிஸ்தவ வாழ்க்கை சுயநல வாழ்க்கைக்கு எதிரானது. அது சுயத்தை மறுக்கும்/வெறுக்கும் ஒரு வாழ்க்கை ஆகும். நாம் ஒருவருக்கொருவர் ஊழியம் செய்யும்படி அழைக்கப்பட்டிருகிறோம் (கலா.5:13). நாம் ஒருவர் பாரத்தை ஒருவர் சுமக்க வேண்டும்.  அதே வேளையில், கர்த்தருடனான நம் நடையில் கவனமுள்ளவர்களாக இருந்து, பாவச் சோதனைகளுக்கு எதிராக நம்மைக் காத்துக் கொள்ள வேண்டும். நிற்கிறவர்கள் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்க வேண்டும் ( 1 கொரி.10:12).

சக கிறிஸ்தவருக்கு உதவுவதன் மூலம், ஒருவருடைய பாரத்தை ஒருவர் சுமப்பதன் மூலம், நாம் கிறிஸ்துவின் பிரமாணத்தை நிறைவேற்றுகிறோம் என்று பவுல் சொல்கிறார்.  நியாயப்பிரமாணமானது அதை மீறுகிறவருக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று சொல்கிறது. கிறிஸ்துவின் பிரமாணமோ அவரிடம் அன்பு காண்பித்து, அவர்களை திரும்ப கட்டி எழுப்பவும், சீர்பொருந்தவும் பண்ணும்படி சொல்கிறது. ஒருவரை அவருடைய பாவத்திற்காக குற்றம் சாட்டி, தண்டிப்பது எளிது. வேதபாரகர் மற்றும் பரிசேயர்களிடம் அன்று இயேசு சொன்னதை நம்மிடமும் கேட்பார் எனில், நம் பதில் என்னவாக இருக்கும் (யோவான்.8:4) என்பதை நாம் யோசித்துப் பார்ப்போம். பேதுரு தன்னை மறுதலிப்பது குறித்து முன்னறிவித்த போது இயேசு செய்தவைகளை, அவனிடம் சொன்னவைகளை நினைத்துப் பார்ப்போம்: இயேசு பேதுருவின் விசுவாசம் ஒழிந்து போகாதபடிக்கு ஜெபித்தார்; “நீ குணப்பட்ட பின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து” என்று சொன்னார் (லூக்கா 22:31-32).  இயேசுவின் முன்னறிவிப்புக்கு முன்பதாக வரும் வசனங்களில், ஒருவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டும் என்ற தன் புதிய கற்பனையைப் பற்றி இயேசு சொல்வது மிகவும் சுவராசியமானது ஆகும் (யோவான் 13:34-35).  இயேசுவின் சீடர்களாக, நாம் ஒருவரை ஒருவர் நேசித்து, ஒரு அன்பின் சமுதாயத்தை கட்டி எழுப்புவோம்.

பயன்பாடு:  ஒரு கிறிஸ்தவ நண்பர் அல்லது விசுவாசியின் பாவத்தைக் குறித்து அறிய நேரிடும்போது, நான் அதைச் சகித்துக் கொள்ளாமல், அவர் கர்த்தரிடம் திரும்பவும் வர உதவும் படி கிறிஸ்துவின் அன்பை அவரிடம் காட்ட வேண்டும். அவர்களைக் கண்டிப்பது மற்றும் தண்டிப்பதைக் காட்டிலும் கிறிஸ்துவின் பிரமாணத்தை நிறைவேற்றுவதற்கு நான் முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஒரு கிறிஸ்தவராக, நாம் மாம்சத்தின் இச்சைகளை நிறைவேற்ற இடம் கொடுக்கக் கூடாது. நாம் ஆவிக்கேற்றபடி வாழ வேண்டும்.  

ஜெபம்:  தந்தையாகிய தெய்வமே, உம் அன்பிற்கும், வெளிச்சத்திற்கும் வழிநடத்தும் உம் வார்த்தைக்காக நன்றி. இயேசுவே, நீர் என்னை நேசிப்பது போலவே நானும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்க எனக்கு உதவும். கர்த்தாவே, ஆவிக்கேற்றபடி வாழவும், பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்படுகிற வாழ்க்கையை வாழவும் எனக்கு உதவியருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day - 273

No comments: