வாசிக்க: ஏசாயா 55, 56; சங்கீதம் 90; கலாத்தியர் 5
வேத வசனம்: ஏசாயா 55: 10. மாரியும் உறைந்த மழையும் வானத்திலிருந்து இறங்கி, அவ்விடத்துக்குத் திரும்பாமல் பூமியை நனைத்து, அதில் முளை கிளம்பி விளையும்படிச்செய்து, விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறவனுக்கு
ஆகாரத்தையும் கொடுக்கிறது எப்படியோ,
11. அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும்
இருக்கும்; அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்.
கவனித்தல்: தேவன் தம் ஜனங்களுக்குக் கொடுத்த பல வாக்குத்தத்தங்களை
ஏசாயா தீர்க்கதரிசன புத்தகம் நமக்கு நினைவுபடுத்துகிறது. விசேஷங்களில், (ஒரு நாள்,
மாதம், மற்றும் ஆண்டு போன்ற) புதிய ஆரம்பங்களில், மற்றும் பல ஊக்குவிக்கும் தின தியானங்களில்
நாம் வாசிக்கும் கேட்கும் பெரும்பாலான வசனங்கள் ஏசாயா தீர்க்கதரிசன புத்தகத்தில்
உள்ளவை ஆகும். ஏசாயா தீர்க்கதரிசியின் மூலமாக தேவன் பேசின வார்த்தைகள் தேவ ஜனங்களை
பலப்படுத்துகிறதாகவும், அவர்களுக்கு நம்பிக்கை அளிப்பதாகவும் இக்காலத்திலும் இருக்கின்றன.
தேவனுடைய வார்த்தையானது எப்படி செயல்படுகிறது என்பதை ஏசாயா 55:10-11 நமக்கு விளக்குகிறது.
இங்கே, தேவனுடைய வார்த்தையானது ஒரு போதும் அதன் நோக்கத்தை அடையத் தவறுவதில்லை என்பதை
விளக்கும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய மற்றும் சக்திவாய்ந்த ஒரு படத்தை நாம் காண்கிறோம்.
முதலாவதாக, தேவனுடைய வார்த்தையானது தேவனிடத்தில்
இருந்து வருகிறது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அப்போஸ்தலனாகிய பேதுரு சொல்வது
போல, ” வேதத்திலுள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் சுயதோற்றமான
பொருளையுடைய(து)” அல்ல (2 பேதுரு.1:20). இரண்டாவதாக, தேவனுடைய வார்த்தைகள்
வெறுமையானவை அல்ல; அவை குறித்த நோக்கம் மற்றும் வல்லமை உடையவைகளாக இருக்கின்றன. அவை
ஒருபோதும் வெறுமையாகத் திரும்புவதில்லை. தேவன் ஏன் தம் வசனத்தை அனுப்புகிறார் என நாம்
யோசிக்கலாம். தேவனுடைய வார்த்தையின் முதன்மையான
நோக்கம் என்னவெனில், நம்முடன் பேசி உரையாடுவது ஆகும் (எபி.1:1-2). மேலும், அது குணமாகுதலையும் விடுதலையையும் தருகிறது
(சங்.107:20). பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதுகிறபடி, “வேதவாக்கியங்களெல்லாம்
தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது” (2 தீமோ.3:16-17). தேவனுடைய வார்த்தைகள் “ஆவியாயும் ஜீவனாயும் இருக்கின்றன”
(யோவான் 6:63). கர்த்தருடைய வார்த்தை என்றும் நிலைநிற்கும் (ஏசாயா 46:9-11). ”அவர்
சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும்” என்று சங்கீதம் 33:9 சொல்கிறது. ஏசாயா 55:10-11ல்
மழையின் நோக்கம் என்ன என்பதை நாம் பார்க்கிறோம்; வானத்தில் இருந்து மழை வரும்போது
அது செய்யக் கூடிய காரியங்களைப் பற்றிய ஒரு பட்டியலை நாம் காண்கிறோம். ஒரு நிலமானது
மழை நீரை தன்னில் ஏற்றுக் கொண்டு, அது தன் வேலையைச் செய்ய அனுமதிக்கும்போது, அந்நிலம்
மிகுந்த கனிகளைக் கொடுக்கும். அது போல, தேவனுடைய வார்த்தையானது அது வந்த நோக்கத்தை
நிறைவேற்றி வெற்றிபெறுகிறதாக இருக்கும். வேதம் சொல்வது போல, தேவனுடைய வார்த்தையானது
ஜீவனும் வல்லமையும் உள்ளதாக” இருக்கிறது (எபி.4:12). நாம் தேவனுடைய வார்த்தையை எக்காலத்திலும்
நம்பலாம் (ஏசாயா 40:8).
பயன்பாடு: என் தேவன் என்னுடன் பேசுகின்ற
உயிருள்ள தெய்வமாக இருக்கிறார். “உம்முடைய
வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன்; உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது” என்று எரேமியா சொல்கிறார்
(எரே.15:16). நான் தேவனுடைய வார்த்தையைக் கேட்கும்போது, அதை என் வாழ்வில் பயன்படுத்த நான் தயக்கம் காட்டக் கூடாது.
தேவன் என் வாழ்க்கையைக் குறித்து ஒரு நோக்கம் வைத்திருக்கிறார். அவருடைய ஒவ்வொரு வார்த்தையும்
என் வாழ்வில் செய்து முடிக்க வேண்டிய குறிக்கோள் உடையவர்களாக இருக்கின்றன. நான் தேவனுடைய
வார்த்தைக்குச் செவிகொடுத்து, அவருக்குக் கீழ்ப்படியும்போது, நான் தேவனுடைய வார்த்தையும்
ஆசீர்வாதங்கள் அனைத்தையும் பெற்று அனுபவிக்கிறேன்.
ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, இன்றும்
என்னுடன் நீர் பேசுகிறதற்காக உமக்கு நன்றி. உம் வார்த்தைகளுக்கு நான் கவனமுள்ளவனாக
இருக்கும்படி என் செவிகளைத் திறந்தருளும். நீர் என்னில் செய்ய விரும்புகிறவைகளைச்
செய்யும்படி உம் வார்த்தைகளை அனுமதிக்க எனக்கு உதவியருளும். பரிசுத்த ஆவியானவரே, தேவனுடைய
வார்த்தையின் வெளிச்சத்தில் நடக்க என்னை வழிநடத்தியருளும். ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day - 272
No comments:
Post a Comment