வாசிக்க: ஏசாயா 51, 52; சங்கீதம் 88; கலாத்தியர் 3
வேத வசனம்: கலாத்தியர் 3: 26. நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினால் தேவனுடைய
புத்திரராயிருக்கிறீர்களே.
27. ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே.
28. யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும்
கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.
கவனித்தல்: இயேசுவில் நம் விசுவாசத்தை
வைக்கும்போது நாம் தேவனிடம் இருந்து பெறுகிற புதிய அடையாளம் பற்றி பவுல் கூறுகிறார்.
கிறிஸ்துவில் நாம் தேவனுடைய பிள்ளைகளாக ஆகிறோம். நியாயப்பிரமாணத்தின் கிரியைகளை நம்புகிறவர்கள்,
சாபத்தின் கீழ் இருக்கிறார்கள். ஆனால் கிறிஸ்துவோ அந்த சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி
இரட்சித்தார். விசுவாசத்தின் மூலமாக, நாம்
தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறோம். இங்கு வரும் நிகழ்கால வினைச்சொல்லைப் பாருங்கள்.
நீங்கள் எதிர்காலத்தின் என்றாவது ஒரு நாள் தேவனுடைய பிள்ளையாக நீங்கள் மாறுவீர்கள்
என்று வேதம் சொல்லவில்லை. மாறாக, இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்தால், நாம்
ஏற்கனவே தேவனுடைய மகனாக அல்லது மகளாக இருக்கிறோம். அனேக கிறிஸ்தவர்கள் இது போல சிந்திப்பதில்லை
என்பது வருந்தத்தக்கது ஆகும். ஆகவே அவர்கள்
தேவனுடைய பிள்ளையாக வாழ வேண்டிய விதத்தில் வாழ்வதில்லை. ”பெயர் அறியப்படாத கிறிஸ்தவன்”
என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட ஒரு நூலாசிரியர் ஒரு சம்பவத்தை தன் நூலில் குறிப்பிடுகிறார்.
அதில் ஒரு கிராம மனிதர் யோவான் 1:12 ஐ அப்பொழுதுதான் கேட்ட ஒருவரைப் பற்றி கூறுகிறார்.
அந்த மனிதன் வேதத்தை வாசித்த மிஷனெரியிடம் தான் உண்மையிலேயே தேவனுடைய ஒரு பிள்ளையாக
முடியுமா என்று திரும்பத் திரும்ப கேட்கிறார். அந்த வசனத்தின் அர்த்தத்தை அவர் புரிந்து
கொண்டபோது, அவருடைய மகிழ்ச்சியானது அளவற்றதாகவும் கட்டுப்படுத்த முடியாததாகவும் இருந்தது.
முடிவில், அவனின் மகிழ்ச்சியைக் கண்ட பின்பு,
அந்த மனிதனுடைய கிராமத்தில் வாழ்ந்த அனைவரும் தேவனுடைய பிள்ளைகளாக மாறினர். தேவனுடைய
பிள்ளையாக வாழ நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சிந்தித்துப் பார்ப்போம்
நாம் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்படும்போது,
கிறிஸ்துவுக்காக வாழும்படி அவருடைய சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதலுடன் நம்மை
அடையாளப்படுத்திக் கொள்கிறோம் (ரோமர் 6:3-4). நம்மில் வாழும் இயேசுவை இந்த உலகம் காணும்படிச்
செய்கிற, கிறிஸ்துவுக்குள்ளான புதிய வாழ்க்கையை, கிறிஸ்துவை தரித்துக் கொள்வதன் மூலமாக
நாம் வாழத் துவங்குகிறோம். கிறிஸ்துவில், நாடு சார்ந்த, இன ரீதியிலான, சமுதாய ரீதியிலான,
மற்றும் பாலியல் வேறுபாடுகள் எதுவும் கிடையாது. நாம் எந்தப் பிண்ணனியில் இருந்து வந்திருந்தாலும்,
நாம் அனைவரும் கிறிஸ்துவில் ஒன்றாக இருக்கிறோம். தேவனுடைய பார்வையில் நாமனைவரும் சமம்.
தேவன் பட்சபாதம் உள்ளவரல்ல (கலா.2:6). கிறிஸ்துவுக்குள் இருக்கிற நாமனைவரும் நம்
இரட்சிப்புக்கான தேவனுடைய கிருபையை ஏற்றுக் கொள்ளுவதினால் வரும் ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்ள முடியும். கிறிஸ்துவில் நாம் யார்
என்பதை பார்ப்பது தேவனுடைய பிள்ளைகளாக வாழ்வதற்கு நம் மனதை பக்குவப்படுத்துகிறதாகவும்,
நம் அனுதின வாழ்வில் கிறிஸ்துவுடன் நம்மை அடையாளப்படுத்திக் கொள்ளவும் நமக்கு உதவுகிறது.
மேலும், இந்தப் புதிய அடையாளமானது ஒவ்வொரு தனிமனிதரிலும் தேவனுடைய சாயலைக் காண நமக்கு
உதவுகிறது. இயேசு கிறிஸ்துவில் மட்டுமே இந்த உலகமானது உண்மையான சமத்துவத்தை அனுபவிக்க
முடியும்.
பயன்பாடு: நான் யாராக இருந்தாலும்,
தேவனுடைய பிள்ளையாக வாழ்வது என்பது என் தனிப்பட்ட விருப்பங்களின் அடிப்படையில் நான்
தெரிவு செய்து கொள்கிற ஒன்று அல்ல. நான் ஏற்கனவே தேவனுடைய பிள்ளையாகவே இருக்கிறேன்.
தேவனுடைய பிள்ளையாகிய நான், கிறிஸ்துவை தரித்துக்
கொள்கிறேன். இந்த உலகமானது கிறிஸ்துவைத் தவிர வேறு எதையும் என்னில் பார்க்கக் கூடாது
என்று நான் விரும்புகிறேன். எந்த அடிப்படையிலும் நான் மக்களுக்கு எதிராக பாகுபாடு
காட்ட மாட்டேன். எவ்வித பாகுபாடு அல்லது பாரபட்சம் இல்லாமல் தேவன் அனைவரையும் நேசிப்பது போல, நான் அனைவரையும் நேசிப்பேன்.
ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, தேவனுடைய பிள்ளையாக நான் வாழும்படி
என்னைப் பலப்படுத்துகிற புதிய வாழ்க்கை, புதிய அடையாளம், மற்றும் புதிய இருதயத்திற்காக
உமக்கு நன்றி. இயேசுவே, நான் எல்லாவற்றிற்கும் உம்மைச் சார்ந்திருக்கிறேன். இயேசுவே,
நீர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும். பரிசுத்த ஆவியானவரே, கிறிஸ்துவில் ஒருமைப்பாட்டைக்
காத்துக் கொள்ளவும், தேவ மகிமைக்காக வாழவும் எனக்கு உதவியருளும். ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day - 270
No comments:
Post a Comment