Tuesday, September 7, 2021

கிறிஸ்துவில் அனைவரும் சமம்

வாசிக்க: ஏசாயா 9,10; சங்கீதம் 67; 1 கொரிந்தியர் 12

வேத வசனம் 1 கொரிந்தியர் 12: 21. கண்ணானது கையைப்பார்த்து: நீ எனக்கு வேண்டுவதில்லையென்றும்; தலையானது கால்களை நோக்கி: நீங்கள் எனக்கு வேண்டுவதில்லையென்றும் சொல்லக்கூடாது.
22. சரீர அவயவங்களில் பலவீனமுள்ளவைகளாய்க் காணப்படுகிறவைகளே மிகவும் வேண்டியவைகளாயிருக்கிறது.
23. மேலும், சரீர அவயவங்களில் கனவீனமாய்க் காணப்படுகிறவைகளுக்கே அதிக கனத்தைக் கொடுக்கிறோம்; நம்மில் இலட்சணமில்லாதவைகளே அதிக அலங்காரம் பெறும்;
24.
நம்மில் இலட்சணமுள்ளவைகளுக்கு அலங்கரிப்பு வேண்டியதில்லை.
25. சரீரத்திலே பிரிவினையுண்டாயிராமல், அவயவங்கள் ஒன்றைக்குறித்து ஒன்று கவலையாயிருக்கும்படிக்கு, தேவன் கனத்தில் குறைவுள்ளதற்கு அதிக கனத்தைக் கொடுத்து, இப்படிச் சரீரத்தை அமைத்திருக்கிறார்.

கவனித்தல்: ஆவிக்குரிய வரங்கள் பற்றிய கொரிந்து சபை விசுவாசிகளின் கேள்விக்கு 1 கொரிந்தியர் 12ம் அதிகாரத்தில் பவுல் பதிலளிக்கிறார். இங்கு, தற்கால சபைகளுக்கும் பயன்படக்கூடிய முக்கியமான ஒன்றைப் பற்றி பவுல் கூறுகிறார். யார் பெரியவர் யார் தாழ்ந்தவர், யார் பலவான் யார் பலவீனன், யார் பயனுள்ளவர் யார் எதற்கும் பயனற்றவர் என்பன போன்ற பல கேள்விகளைக் கேட்டு எல்லா இடங்களிலும் உள்ள கிறிஸ்தவர்கள் வாக்குவாதம் செய்கிறதை நாம் காண்கிறோம். பெரும்பாலான இடங்களில், முன்னால் நின்று வேலை செய்கிறவர்களையே நாம் பார்த்து, பாராட்டுகிறோம். பின்னால் இருந்து வேலை செய்கிறவர்கள் கவனிக்கப்படாமலேயே போய்விடுகிறார்கள். உதாரணமாக, சபையை தூய்மையாக வைத்திருக்கும் ஒருவர் ஒரு ஆராதனை நடத்துகிறவர் அல்லது இசைக் கருவி வாசிக்கிறவருக்கு இணையான கவனத்தை ஒரு போதும் பெறுவதில்லை. ஆவிக்குரிய வரங்களைப் பற்றிப் பேசும்போது, எல்லா விசுவாசிகளுக்கும் பரிசுத்த ஆவியானவரின் வரங்கள் கொடுக்கப்பட்டிருப்பதாக பவுல் சொல்கிறார். ஆயினும், வரங்களில் வித்தியாசங்கள் உண்டு என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.  எல்லோரும் ஒரே விதமான வரத்தையேப் பெறவேண்டும் என்று நாம் எதிர்பார்க்கவோ கட்டாயப்படுத்தவோ கூடாது. ஒரு விசுவாசி என்ன வரம் பெறவேண்டும்/பெறுவார் என்பதைக் குறித்து பரிசுத்த ஆவியானவரே தீர்மானிக்கிறார். நாம் அனைவரும் கிறிஸ்துவின் சரீரத்தின் அவயவங்களாக இருக்கிறோம். ஆகவே சபையில் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு பொறுப்பு அல்லது வேலை உண்டு. ”நீ எனக்கு வேண்டியதில்லை” என்று எவரைப் பார்த்தும் நாம் சொல்லக் கூடாது/முடியாது.  கிறிஸ்துவின் சரீரத்தில் பலவீனமானவைகள் மிகவும் வேண்டியவைகள் என பவுல் சொல்கிறார்.  பலவீனர் என்று கருதப்படுகிறவர்களுக்கு அதிக கனத்தையும் அதிக கவனிப்பையும் கொடுக்க வேண்டும் என பவுல் வலியுறுத்துகிறார். மற்றவர்களின் கவனிப்பும் பராமரிப்பும் தேவைப்படுகிறவர்களுக்கு சிறப்பான கவனத்தையும் கனத்தையும் கொடுக்க வேண்டும் என பவுல் கொரிந்து விசுவாசிகளுக்கு ஆலோசனை தருகிறார்.  அவர்கள் எந்தக் காரணம் கொண்டும் புறக்கணிக்கப்படக் கூடாது.

ஒரு சரீரத்தில் எல்லா அவயவங்களின் சமமான தன்மை மற்றும் முக்கியத்துவத்தைக் குறித்து விளக்குகையில், ஒவ்வொரு அவயவங்களும் ஒன்றையொன்று சார்ந்து இருக்கக் கூடியதையும், ஒன்றொடொன்றாக இணைந்திருப்பதையும் பவுல் விசுவாசிகளுக்கு நினைவுபடுத்துகிறார். எந்தவொரு கிறிஸ்தவனும் தனித்து இயங்க/செயல்பட முடியாது. நம் சரீரத்தில் உள்ள ஒரு அவயவத்தின் முக்கியத்தை அது செயல்படுவதை நிறுத்தும் வரைக்கும் நாம் உணராமல் போகலாம். சபையில் ஒவ்வொருவருக்கும் சிறப்பான கவனத்தைக் கொடுப்பது நம் பொறுப்பு ஆகும். சபைக்கு ஒவ்வொரு கிறிஸ்தவரும் அவருடைய சேவையும் மிகவும் இன்றியமையாதது ஆகும். தேவனுடைய குடும்பத்தில், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையில்,  எவ்வித பாகுபாடுகளும், ஏற்ற தாழ்வுகளும், பிரிவுகளும் இருக்கக் கூடாது. உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை என்பது மற்ற கிறிஸ்தவர்களின் இன்பத்திலும் துன்பத்திலும் பங்கு பெறுவது ஆகும்.

பயன்பாடு: மற்றவர்களின் பிரயோஜனத்திற்காகவே பரிசுத்த ஆவியானவரின் வரம் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.  என் ஆவிக்குரிய வரத்தைக் குறித்து நான் பெருமை பாராட்டவோ, மற்றவர்களை விட நான் உயர்ந்தவன் என்று நினைக்கவோ கூடாது. என் ஆவிக்குரிய வரத்தை, என் ஆசையையும் பெருமையையும் திருப்திப்படுத்திக் கொள்வதற்காக அல்ல, மற்றவர்களுடைய நன்மைக்காக நான் பயன்படுத்த வேண்டும்.  தங்களை பலவீனர் மற்றும் பயனற்றவர் என்று கருதும் கிறிஸ்தவர்களை சிறுமைப்படுத்துவதற்குப் பதிலாக,  எல்லோரையும் போல அவர்களும் கிறிஸ்துவின் சரீரமாகிய சபையில் மிகவும் முக்கியமானவர்கள் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள சிறப்பான கனத்தையும் கவனிப்பையும் நான் செய்ய வேண்டும்/செய்வேன்.

ஜெபம்:  தந்தையாகிய தெய்வமே, நீர் எனக்குத் தந்த ஆவிக்குரிய வரத்திற்காக உமக்கு நன்றி. இயேசுவே, உம் மகத்துவத்தைப் பற்றி சாட்சிபகரவும், கிறிஸ்துவில் மற்றவர்களுக்கு உதவி, அவர்களைக் கனப்படுத்தவும் பரிசுத்த ஆவியின் வரத்தைப் பயன்படுத்த எனக்கு உதவியருளும். ஆமென்.  

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day - 249

No comments: