வாசிக்க: ஏசாயா 7,8; சங்கீதம் 66; 1 கொரிந்தியர் 11
வேத வசனம்: ஏசாயா 7: பின்னும் கர்த்தர் ஆகாசை நோக்கி: 11. நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் ஒரு அடையாளத்தை வேண்டிக்கொள்; அதை ஆழத்திலிருந்தாகிலும், உன்னதத்திலிருந்தாகிலும்
உண்டாகக் கேட்டுக்கொள் என்று சொன்னார்.
12. ஆகாசோ: நான் கேட்கமாட்டேன், நான் கர்த்தரைப் பரீட்சைசெய்யமாட்டேன் என்றான்.
13. அப்பொழுது ஏசாயா: தாவீதின் வம்சத்தாரே, கேளுங்கள்; நீங்கள் மனுஷரை விசனப்படுத்துகிறது போதாதென்று என்
தேவனையும் விசனப்படுத்தப் பார்க்கிறீர்களோ?
14. ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக்
கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை
கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்.
கவனித்தல்: ஆகாஸ் என்பவன் கர்த்தரின்
வழிகளில் நடவாமல், விக்கிரகங்களை வணங்கிய துன்மாக்க யூத இராஜாக்களில் ஒருவனாக இருந்தான்
(2 இராஜா 16:1-4; 2 நாளா.28:1-4). சீரிய ராஜாவும் இஸ்ரவேலின் ராஜாவும் எருசலேமை முற்றுகை
செய்த போது, தேவன் தன் தீர்க்கதரிசியாகிய
ஏசாயா மூலமாக ஆகாசுடன் பேசி, அவன் மனம் திரும்ப ஒரு வாய்ப்புக் கொடுத்தார் (வ.9).
ஒரு அடையாளத்தை வேண்டிக்கொள் என்று கர்த்தர் ஆகாசிடம் சொன்ன போது, ”நான் கர்த்தரைப் பரீட்சைசெய்யமாட்டேன்” என்று அவன் சொன்னான். அவன் கர்த்தரை சோதித்துப்
பார்க்க விரும்பவில்லை என்பது இதன் பொருள் அல்ல. ஏனெனில், இங்கு கேட்பவர் கர்த்தர்.
மாறாக, அவன் தேவனுடைய கிருபையை ஏற்றுக் கொள்ள ஆயத்தம் இன்றி தயங்கினான் என்பதே இதன்
அர்த்தம் ஆகும். சீரியர்களிடம் இருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள ஆகாஸ் அசீரியரின்
உதவியைத் தேடினான் (2 இராஜா 16:7,8). ஒரு அடையாளத்தைக் கேட்க விருப்பம் இல்லாதவனாக
ஆகாஸ் இருந்தாலும் கூட, தேவனே அவனுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுத்தார். ஆனால் அசீரிய
ராஜாவோ, அனேகமாயிரம் பொன் வெள்ளியைப் பெற்றுக் கொண்ட பின்னரும், ஆகாசுக்கு உதவி செய்யாமல்
“அவனை நெருக்கினானே அல்லாமல் அவனைப் பலப்படுத்தவில்லை” (2 நாளா 28.20). ஆயினும், தேவன் தம் வார்த்தைகளில் உண்மையுள்ளவராக இருந்து,
இம்மானுவேலரின் கன்னிப்பிறப்பைப் பற்றிய ஒரு அடையாளத்தை ஆகாசுக்குக் கொடுத்தார்.
ஆகாசை அவனுடைய எதிரிகளிடம் இருந்து தன்னால் காப்பாற்ற முடியும் என்று தேவன் அவனிடம்
சொல்ல விரும்பினார். ஏனெனில், இம்மானுவேல் என்ற எபிரேய வார்த்தையின் அர்த்தம், “தேவன்
நம்மோடிருக்கிறார்” என்பதாகும்.
சிலர் இது மேசியாவைப்
பற்ற தீர்க்கதரிசனமா அல்லது ஏசாயாவின் காலத்திற்கு மட்டுமே பொருந்தக் கூடியதா என்று
சந்தேகப்படுகிறார்கள். வேதாகம தீர்க்கதரிசனங்கள் சீக்கிரத்தில் நடைபெறப் போகிற காரியங்களையும்,
எதிர்காலத்தில் நீண்டகாலத்திற்குப் பின் நடக்கப் போகிற காரியங்களையும் குறிப்பதாக
இருக்கின்றன. இங்கே மேசியாவின் வருகையைப் பற்றிய ஒரு முன்னறிவிப்பை நாம் காண்கிறோம்.
இந்த தீர்க்கதரிசனமானது இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையின் நிறைவேறியது (மத்.1:23; லூக்கா
1:31-35). அந்நிய தெய்வங்கள் தனக்கு உதவுவார்கள் என நினைத்து அவைகளைப் பிரியப்படுத்த
வேண்டும் என ஆகாஸ் விரும்பினான்(2 நாளா.28:23-25). ஆனால் அவைகளிடம் இருந்து அவனுக்கு
எந்த உதவியும் கிடைக்கவில்லை. நாம் ஏற்றுக் கொண்டாலும் சரி, ஏற்றுக்கொள்ளாவிடினும்
சரி, தேவன் எப்பொழுதும் நம்முடனே கூட இருக்கிறார். தேவன் நம் வாழ்வில் செயல்பட நாம்
அனுமதிக்கும்போது, அவர் நம்மை விடுவித்து இரட்சிக்கிறார். கடினமான காலங்களில், நமக்கு
உதவக் கூடிய மனிதர்கள் நம்மை கைவிட்டு, நமக்கு பிரச்சனைகளை உண்டாக்கலாம். நம்முடைய
உதவியோ ”வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து”
வருகிறது (சங்.121:2). ”சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார்; யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர்” (சங்.46:7,11). அவரே நமக்கு எக்காலத்திலும் அனுகூலமான துணையாக இருக்கிறார்.
பயன்பாடு: தேவன் எனக்குத் தந்த
மிகப் பெரிய வாக்குத்தத்தம் என்னவெனில், இம்மானுவேலராகிய இயேசுகிறிஸ்து ”உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும்” என்னுடனே கூட இருக்கிறார்
(மத்.28:20). ஆகவே நான் எதற்கும் அஞ்சிடேன். தேவன் என்னிலும், என் மூலமாகவும் செயல்பட
நான் அனுமதிக்க வேண்டும். என் திட்டங்களைக் காட்டிலும் தேவனுடைய திட்டங்கள் மிகச்
சிறந்தவை.
ஜெபம்: தந்தையாகிய தெய்வமே,
உமது குமாரனாகிய இயேசுகிறிஸ்து மூலமாக எப்பொழுதும் என்னுடன் இருப்பதற்காக உமக்கு நன்றி.
கர்த்தாவே, நான் எப்பொழுதும் உம்முடன் இருக்கவும், நீர் எப்பொழுதும் என்னுடன் இருக்கிறீர்
என்ற சிந்தையுடன் வாழவும் எனக்கு உதவியருளும். ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day - 248
No comments:
Post a Comment